காதல்-கிராமிய காதல்
செந்தூரப் பொட்டுவெச்சு செவந்து நிக்கிற மயிலே
சேந்து நாமும் பரிசம் போடலாம் தையில
சொந்தங்கள சிறப்பு செஞ்சு அழைச்சிடுவோம் மயிலே
பந்தங்களும் சேர்ந்து வந்து வாழ்த்தும் அந்த தையில
கோரைப் புல்லா நெஞ்சமெல்லாம் நீயிருக்க
ஏரைப்புடிச்சு அதைஉழுக எம்மனசு கேட்கலியே
யாரைப்பார்த்து எஞ்சோகம் நான் சொல்ல
தேரைப்பூச்சி போல் மனசில் ஒட்டி நிக்கறேயே.
வேலியோரங் காட்டுமுல்லை மொகஞ் சிரிக்குதடி
கேலிபேசி வாலிபத்த உசுப்பி நிக்குதடி
காலியாக எம்மனசும் கெறங்கி நிக்குதடி
தாலிகட்டும் நாளுக்காக ஏங்கி நிக்குதடி
அதுக்குமுன்ன கொஞ்ச நேரம் கூட வர்றியா
ஒதுக்குப்புற கொளத்தங்கரையில் நெறைய பேசனும்
எதுக்குநீயும் யோசிக்கற எனக்குப் புரியுது
அதுக்குநானும் உத்தரவாதம் என்னத் தெரியாதா?
வேசங்கட்ட தெரியாத இளங்காள நாந்தானே
பாசஙகள பாத்திகட்டி வெச்சிருக்கேன் எந்தேனே
தோசமில்லா ஆசைக்காரன் சொல்லிப்புட்டேன் நானே.
மோசம்போக விட்டுறாத என்வாழ்க்க போகும் வீணே.