வெண்பா உனக்கொரு வெண்பா

+++++++++========+++++++++++
வேலைக்குப் போகும் விபரம் புரியாமல்
காலையிலே வந்தந்தக் காகிதச் - சாலையில்
மையூறும் பேனை மணிக்கால் நடைபழக்கம்
செய்விக்கக் கோருகின்றாய் நீ .

மாலையில் வாவென்றால் மட்டும் மறுக்கும்நீ
லீலை புரியாதே. லேசாக - சோலை
அமர்ந்துந்தன் சூட்சுமத்தை ஆராய அங்கே
கமழ்ந்திட லாமே கனிந்து.

இடம்பொருள் ஏவல் எதுவுமின்றி வந்துன்
தடம்பதிப்பாய். சட்டென்று தான்நீ – மடம்பிடிப்பாய்.
கண்பார்க்கும் தூரத்தில் காணு மனைத்தையும்
பண்பாடு என்பாய் பரிந்து.

நேற்றும் முதலாளி நேரெதிர் நின்றிருக்க
ஊற்றாய் சுரந்தாய் உதரலுற்று – மாற்றுவழி
இல்லா மனம்பதைத்த என்னின்னல் வாய்விட்டு
சொல்லத் தெரியாச் சுமை

கற்றோர் அரங்கில் கவிபாடும் வல்லமை
பெற்றே பலபேர் பெயரெடுத்து – நிற்கநீ
உற்றே எனைநோக்கி ஊன்றி எழுதென்றே
வற்றா நதியாகி றாய்!

பண்பாடி எங்கள் பசிதீர்வ தில்லையென்றே
பெண்டாட்டிப் பிள்ளைகள் பேச்சிருக்க - வெண்பாநீ
உன்பாட்டில் வந்தென் உறவாகி என்பாட்டில்
நின்றிருப்ப தேனோ நிலைத்து.?

*மெய்யன் நடராஜ்







.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (3-Jun-16, 3:03 am)
பார்வை : 145

மேலே