உய்வுபெற உழவாரத் திருப்பணி

உய்வுபெற உழவாரத் திருப்பணி

அறுகு எடுப்பார் அயனும், அரியும்
அன்றி, மற்று இந்திரனோடு, அமரர்,
நறுமுறு தேவர் கணங்கள் எல்லாம்,
நம்மில்பின்பு அல்லது, எடுக்க ஒட்டோம்
செறிவு உடை மும்மதில் எய்தவில்லி,
திரு ஏகம்பன், செம்பொன் கோயில்பாடி,
முறுவல் செவ் வாயீனீர் முக்கண் அப்பற்கு,
ஆடப் பொற்சுண்ணம் இடித்து நாமே!

திருவாசகம்.

--------------------------------------------------------------------------------


சிவப்பெருந்தகையீர்,
வணக்கம்.


பெரும்பாலான சைவ அமைப்புகள் மாதம் ஒரு சிவாலயத்தை தேர்ந்தெடுத்து சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசர் சுவாமிகள் போற்றிப் புகழ்ந்து செய்து வழிகாட்டிய “உழவாரத் திருப்பணி” என்னும் சிறப்பான, செம்மையான, சிவத்திருத் தொண்டினைச் செய்து வருகிறது.

உழவாரம் - இத்தகைய சீரும் சிறப்பும் மிக்க உழவாரத் திருப்பணியை ஏன் செய்கிறோம்? என்பது இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு உயிரும் விரும்பி அறிய வேண்டிய ஒன்றாகும். நம் போன்ற மானிட உயிர்க் கூட்டங்களிலிருந்து கண்ணுக்குத் தெரியாத வைரஸ், அமீபா போன்ற உயிர்களிலிருந்து, மிகவும் பெரிய யானை, திமிங்கலம் போன்ற விலங்குகள் வரை - ஏன்? இந்திரன், திருமால், நான்முகன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடித் தேவர்கள் வரை இவ்வுலகில் காலம் காலமாக உடல் எடுத்துப் பிறந்து வருகிறோம். நாம் செய்த நல்வினை, தீவினைகளுக்கு ஏற்பப் பிறப்பெடுத்து வருகிறோம். பாவங்களுக்கு ஏற்ப துன்பமயமான நரக வாழ்வையும், புண்ணியங்களுக்கு ஏற்பச் சொர்க்கலோக வாழ்வையும் பெறுகிறோம். இவ்விரண்டு வாழ்க்கையும் நிலையற்றவை. ஏனென்றால் நாம் செய்த நல்வினைகளுக்கு ஏற்பச்
சொர்க்கலோக இன்பங்களை நுகர்ந்த பின்பு மீண்டும் பூவுலகிற்கு வந்து தீர வேண்டும். அதுபோல நாம் செய்த தீவினைகளுக்கு ஏற்ப நரகம் சென்று துன்பங்களை அனுபவித்தபின் மீண்டும் இப்பூவுலகம் வந்தே தீரவேண்டும். இதற்கிடையே நாம் முற்பிறவியில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப நமக்கு நோய், வறுமை, கடன், அவமானம் போன்ற, இழிநிலையும் புண்ணியங்களுக்கு ஏற்பப் பணம், புகழ், திடீர் யோகம், ஆரோக்கியம் போன்ற உயர் நிலையும் வந்து சேர்கின்றன.

இந்த உயிர், “சிவபுண்ணியம்” செய்வதால் தான் நமது பாவ புண்ணியங்களே இல்லாமற் போகும். அதன் பிறகு, இந்த உயிர் மீண்டும் உடல் எடுக்காது. அதாவது மீண்டும் பிறவாத பேரின்பமாகிய முக்தியை அடையும். அதற்குச் சிவபெருமானை மட்டுமே ஏன் வணங்க வேண்டும்? பிற தெய்வங்கள் தெய்வங்கள் இல்லையா? ஆம். பிற தெய்வங்கள் தெய்வங்களே! ஆனால், முழு முதல் தெய்வங்கள் அல்ல நம்முடன் இருக்கும் பிறப்பு, இறப்பு என்னும் பிறவி நோய் நீக்கப் பிறப்பு இறப்பு இல்லாத ஒருவரான சிவபெருமானையே அணுக வேண்டும். அவரே, எல்லாராலும் தீர்க்க முடியாத பிறவி நோயை நீக்க வல்லவர்; எப்படி?

பேரண்டப் பெருவெளியில் (Universe) உயிர்கள் வாழும் புவனங்கள் - 224; அவற்றுள் நம் போன்ற பக்குவப்படாத உயிர்கள் பிறந்து இறந்து துன்புறும் புவனங்கள் - 14. ஒவ்வொரு புவனங்களும் ஆயிரக் கணக்கான அண்டங்கள் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இந்தக் கோடிக்கணக்கான அண்டங்களில் (Planets) எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம்! எந்த உருவம் தாங்கியும் பிறக்கலாம்! அத்தகைய அண்டங்களிற் சிறந்தது பூவுலகம்! இவ்வுலக வாழ்வில் உயிர்கள் தோன்றும் வழி நான்கு.
1. கருவழித் தோன்றுவன - மனிதன், விலங்குகள்.
2. முட்டைவழித் தோன்றுவன - பறவைகள், மீன்கள்.
3. விதைவழித் தோன்றுவன - மரம், செடி, கொடிகள் போன்றன
4. வியர்வை வழித் தோன்றுவன - பேன், ஈர், உன்னி, நுண்ணுயிர்கள்.


மேற்கண்ட வழித் தோன்றியன யாவுமே உயிர்களே. மானிட உயிர்கள் பாவ புண்ணியங்களை நீக்கத் தோன்றியன போன்றே அவைகளுக்கும் தோற்றமும் ஒடுக்கமும் உண்டு. அவைகளும், தம்முடைய பாவ புண்ணியங்களால் வாழ்ந்து போகத் தோன்றியனவே. அவற்றை வணங்குவதாலும், போற்றிப் புகழ்வதாலும் எவ்விதப் பயனும் இல்லை. ஆனால், மேற்கண்ட நான்கின் வழி வராதவர்; பிறப்பு, இறப்பு, தோற்றம், ஒடுக்கம், அண்டசராசரம், சொர்க்கம், நரகம் ஆகியனவற்றைக் கடந்தவர்; அவைகளுக்கு அப்பாற்பட்டவர்; அவைகளைப்படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் வருகின்ற ஐந்து தொழில்களைச் செய்பவர். அவரே முழுமுதற் கடவுள், முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானையும், அவரது திருமூர்த்தங்களாகிய பார்வதி (நிறைதிருக்கோலம்) விநாயகர், முருகன், வள்ளி, தெய்வயானை, தட்சிணாமூர்த்தி, பைரவர், வீரபத்திரர் முதலிய சிவக்குடும்பங்களையும், 63 நாயன்மார்களையும் வழிபட்டுப் போற்றிப் புகழ்ந்து சிறப்புச் செய்வதன் வாயிலாகவே நாம் பிறவிக் கட்டிலிருந்து விடுபட்டு முழு வீடு பேற்றை அடைய முடியும்!

சிவபுண்ணியம் என்றால் என்ன? சைவ சமயக் குரவர் நால்வரும், 63 நாயன்மார்களும் காட்டிய, செய்த, சொல்லிய நெறிகளே சிவபுண்ணியங்களாகும்.
1. சிவாலயம் முறையாகக் கட்டுவது.
2. நாள்தோறும் சிவாலயம் சென்று வழிபடுவது.
3. சிவனடியார்களுக்கு அமுது படைப்பது.
4. சிவாலயங்களுக்குச் சென்று “உழவாரப் பணி” - ” - அதாவது புல்பூண்டுகளை நீக்கி,
வெள்ளையடித்து, தூய்மை செய்து, அபிஷேக ஆராதனைகள் செய்வது.
5. சிவாலய உழவாரப் பணி செய்ய ஊக்குவித்தல், செய்தல், செய்வித்தல் ஆகியன.


1. இவற்றுள் சிவாலயம் கட்டுதல் இன்று நம்போன்ற சாமான்யர்களால் இயலாது. சிவாலயம் கட்டுவதால் மாயப் பிறப்பு அறுபடும் என்பதை உணர்ந்த அக்கால அரசர்கள் தங்கள் தகுதிக்கு ஏற்பச் சிவாகம விதிப்படிச் சிவாலயங்களைக் கட்டுவித்தார்கள்.

அரசுப் பெருமக்கள் தங்கள் அழியும் புகழை நிலைநிறுத்த எண்ணாமல் என்றும் நிலையான பிறவாத பேரின்ப வாழ்வுக்கு வழிகாட்டும் சிவாலயம் கட்டிப் “பிறவாத கைலாய முக்திப்” பேற்றைப் பெற்றார்கள்! இந்நாளில் சிவாலயம் கட்டுவதென்பது அரிதினும் அரிதே!

ஆனால் இந்நாளில் நாம் பல்வேறு இனங்களில் பிறந்திருந்தாலும், நெற்றி நிறையத் திருநீறு அணிந்தவர் அனைவரும் “சைவர்” என்ற ஒரே இனத்தைச் சேர்ந்தவர் என்பதை மறந்தும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று
தெளிவடையாமலும் தத்தம் இனத்திற்கேற்ப ஆள்பலம், பணபலம், செல்வாக்கு, கௌரவம் போன்றவற்றில் செருக்குக் காட்டத் தத்தம் விருப்பம்போல் குறிக்கோள் எதுவுமின்றி இஷ்ட தேவதைகளையோ - தெய்வங்களையோ வணங்கத் தொடங்கிவிட்டனர். இவற்றிற்கென முறையான வேள்வி முறையோ விதிமுறையோ இல்லை! இவற்றைத் திருமுறைகள் திசைத் தெய்வம், சிறு தெய்வம், காவல் தெய்வம் என்று குறிப்பிடும். இவற்றின் பெயரால் மாமிசம் படைக்கப்படுகிறது; உயிர்கள் பலியிடப்படுகின்றன; போதைப் பொருட்கள் அர்ப்பணிக்கப்படுகின்றன. இவற்றை வழிபடுவதால் எப்பயனும் இல்லை.

2. சிவாலய தரிசனம் : தினசரி சிவாலய தரிசனம் என்பது பலதரப்பட்ட தொழில்புரியும் அனைவருக்கும் இயலாத ஒன்று. எனவே, முடிந்தால் தினசரி அல்லது வாரம் ஒருநாள், வழிபடுவது என்று உறுதி எடுத்து வணங்கலாம். அன்றி 15 நாட்களுக்கு ஒரே முறை பிரதோஷ காலத்தில் வணங்கலாம்! அதுவுமின்றேல் - மாதம் ஒரே முறை; அமாவாசை, பௌர்ணமி, கார்த்திகை என வகுத்து வணங்கலாம். இன்றேல், சிவராத்திரி அன்றாவது வணங்குதல் சிவபுண்ணியம் தரும்!

3. சிவனடியார்களுக்கு அமுது படைத்தல் : சிவனடியார்கள் யார்? சிவனடியார்கள் நெற்றி நிறையத் திருநீறு; கழுத்தில் சிவக்கண்மணி - ருத்ராக்ஷம் அணிந்தவர்கள்; இவைகள் சிவசின்னங்கள் : இந்தச் சின்னங்களுடையவர்கள் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தவறுகள் செய்திருப்பது நமக்குத் தெரிந்தாலும் அதை எண்ணாது “சிவ சிவ” என்று சொல்லி அவரைச் சிவனடியாராகவே எண்ணி நமது தகுதிக்கு ஏற்பப் பொருளுதவியோ, அமுதோ தருவது சிவ புண்ணியமாகும். ஒன்றுமே சொல்லாமல் சிவ சிந்தனையின்றி உயிர்களுக்கு செய்யும் புண்ணியம் - உயிர் புண்ணியம். அ•தாவது பசுப்புண்ணியத்தைத் தந்து நாம் மீண்டும் பிறக்க வழி வகுக்கும். எனவே, தர்மத்தை மட்டுமல்ல, எல்லா நற்செயல்களையும், “சிவ சிவ” என்று சொல்லி பரம் பொருளாகிய சிவத்தை
எண்ணிச் சிவனார்க்கு அர்ப்பணம் செய்வோமானால் அத்தனையும் சிவ புண்ணியமாகி நமது பிறப்பை ஒழிக்கும்.

4. சிவாலயத்தில் உழவாரப் பணி செய்தல் : சைவ சமயக் குரவர் நால்வரில் அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் உழவாரப்பணி செய்து உயர்ந்தவர். அவர் திருக்கரத்தில் உழவாரப்படை இருப்பதை அன்பர்கள் காணலாம்! ஏற்கனவே நமது முன்னோர்கள் கட்டிய - கோயில் கோபுரம், சுவர் ஆகிவற்றிலும் செடி, கொடிகள் முளைத்து சிதிலமடையக் கூடிய நிலையில் உள்ளன. ஏன்?! சிவலிங்கத் திருமேனியின் மேல் எண்ணெய் படாத சிவாலயங்கள் கூட உள்ளன.

பெற்ற தாய் தந்தையரைப் பேணாமல் யார் யாரையோ பெற்றோர் என எண்ணிப் பேதலித்துக் கொண்டாடும் வழி தவறிய மகனைப் போல நாம் இருக்கின்றோம்! ஆனால், சிவ பெருமான் நினைத்தால் தன் கருணையின் காரணமாக அனைத்துச் சிவாலயங்களையும் ஒரு நொடியில் பொன்னாக ஒளிரவைக்க முடியும்! நம்மைப் போன்ற அற்ப உயிர்கள் இச்சிவாலயங்களில் “உழவாரப்பணி” புரிந்து உய்யும் பொருட்டே அவற்றை இறைவன் அவ்வாறே விட்டு வைத்துள்ளான்! தான் பெற்ற குழந்தையின் நோய் தீரத் தாய் பத்தியம், உண்ணா நோன்பு இருப்பது போலத் தாயிற் சிறந்த தயை நிரம்பிய தத்துவனான சிவ பெருமான் நாம் சிவ புண்ணியம் பெறக் காட்டிய எளிய வழியே இந்த உழவாரப்பணி. உலகில் எந்த ஒரு பணியும் வழிபடும் ஒரு குறிப்பிட்ட நோக்கம் அல்லது இலாபம் கருதியே இருக்கும். சிவபெருமானை வழிபட்டால் முன்-7, இடை-7, கடை-7 ஆகிய 21 தலைமுறைகளுக்கும் முன்னோர், பின்னோர் வம்சாவழியினர் மீண்டும் பிறவா நெறி உள்ள “கைலாய முக்தி”யைப் பெறுவர்.

அத்தகைய சிவபுண்ணியம் தரும் இந்த உழவாரப் பணியானது சிவாலயங்களுக்குச் சென்று தேவையற்ற புல்பூண்டு, முள், புதர் நீக்குவதாகவும், ஒட்டடை, தூசு நீக்குவதாகவும், வெள்ளையடிப்பதாகவும், கோயில்களைச் சுத்தமாக மெழுகிக்கோலமிட்டு அழகூட்டுவதாகவும் நிறைவாக அபிஷேக ஆராதனைகள் நடத்துவதாகவும் அமைகிறது.

இத்தகைய அரும்பணியை - சிவாலய உழவாரத் திருப்பணியை - ஆடவர், பெண்டிர், பெரியவர், சிறியவர் உட்பட எல்லா தரப்பு மக்களும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த திருப்பணியில் எல்லோரும் பங்குபெற்று இயன்ற அளவு பொருளாலும், உடல் உழைப்பாலும் மற்றும் பிறவகைகளாலும், சிவபுண்ணியம் செய்ய அருமையான வாய்ப்புக் கிட்டியுள்ளது.

இப்புண்ணியத்தில் பங்கேற்போர் 21 தலைமுறைகள் தாங்களும் தங்கள் வம்சாவழியினரும் பேரின்பம் பெற்று மீண்டும் பிறவா நெறி பெற்று உய்ய இத்தெய்வத் திருப்பணியில் பங்கு கொண்டு சிவ புண்ணியம் ஈட்டி என்றும் மாறாத சிவானந்தப் பெருவாழ்வில் திளைத்து இன்புறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

சிவனடியார்கள் தங்கள் ஊருக்குச் சமீபத்தில் உள்ள சிவன் ஆலயங்களுக்கு உழவாரப்பணி செய்ய வேண்டும் என்று நினைத்தால், சிவன்கோயிலின் விபரம் மற்றும் ஊரின் விபரத்தை எங்களுக்குத் தெரியப்படுத்தவும். சிவபெருமான் ஆசியுடன் ஆவன செய்ய ஏற்பாடு செய்கிறோம்.
சிவசிவ என்கிலர் தீவைனை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளுஞ்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே.
- திருமந்திரம்.

படித்ததில் pii

எழுதியவர் : (4-Jun-16, 10:39 pm)
பார்வை : 105

மேலே