உருவமும் உண்டு நன்றிக்கன்றோ


​​நாதியற்றவர் என்றும் வீதிகளில்
--நானிலத்தில் எழுதாத விதிதானே !
நாய்மட்டும் என்ன விதிவிலக்கா
--நாளும் காண்கின்ற காட்சிதானே !

பிறப்பதும் வளர்வதும் ஓரிடம்
--பிரிந்து வருவதோ வேறிடம் !
பிடித்தவர் வளர்ப்பர் கருணையில்
--பிரிந்திட மனமின்றி வீட்டினில் !

உருவமும் உண்டு நன்றிக்கன்றோ
--உலகில் அதுவும் நாயன்றோ !
உள்ளவரை நினைக்கும் உள்ளமது
--உப்பிட்ட உள்ளத்தை உண்மையிது !

காத்திடும் காவலன் நாள்முழுதும்
--காத்தவரை நினைக்கும் காலமும் !
காசில்லாக் காப்பீட்டுக் கழகமது
--காலாவதியும் ஆகாது நிச்சயமது !

மனிதரில் இல்லையே நன்றியுடன்
--மண்ணில் குறைவே குணமுடன் !
மனங்கள் மறுக்காது இக்கூற்றினை
--மனதில் அறுக்குது அதன்வேரினை !

அதிகாரம் படைத்தான் நன்றிக்கென
--அய்யன் வள்ளுவனும் நறுக்கென !
அல்லலென கொள்ளாதீர் நன்றியினை
--அவசியமென கொள்வீர் அனைவரும் !

( எங்கள் வீதியில் சுற்றித் திரிந்த நாய் இது.
அவ்வப்போது உணவு அளித்து வருகிறேன்.
எனது அறைக்கு வெளியே அமர்ந்து காவல் காக்கிறது,
நன்றியுடன். )

பழனி குமார்
04.06.2016​

எழுதியவர் : பழனி குமார் (4-Jun-16, 2:18 pm)
பார்வை : 4128

மேலே