மீனவர் வாழ்க்கை கண்ணீரே
கடல் நீர் ஏனோ உப்பாச்சு
மீனவ குடும்ப அழுகையாலோ
மீனவன் வாழ்வு ஏன் தப்பாச்சு
செயல்படா அரசாங்கம் இருப்பதாலோ
போகும் போது தெரியுமெங்கென
வரும் நாட்களோ தெரியலையே
மீன் கிடைக்குமோ இல்லை சிறையோ
தவிக்குது குடும்பம் கரையினிலே
கடல்தாய் அள்ளிக் குடுத்தாலும்
உயிரை எடுக்க பலருண்டு
கடலுள் உயிரே போனாலும்
கரையில் சொல்ல எவருண்டு
எல்லைக் கோடிங்கு எங்கம்மா
வரைந்து தொலைத்தவன் எவனம்மா
தொல்லைக்கு இங்கு குறைவில்லே
நெய்தல் வாழ்விங்கே சுவையில்லே
மீன்குழம்பை சுவைக்கும் மனிதனுக்கு
மீனவன் பாடுகள் தெரியலே
கருவாடா வாழ்க்கைய கடக்கிறான்
நேர்கோடா வாழ்வென்று மாறுமோ....