நினைவிருக்கை

பேருந்துப் பயணங்கள்
என்றுமே அலாதியழகு!
கடந்திடும் தன்னை
நிலையாக்கி...
நிலைச்சாலைதமை
ஓட்டிக்காட்டி... வளைவுச்
சுளிவுகளில் குமரியின்
இடை லாவகமாய்
குலுக்கி...
கிளர்ச்சியூட்டும்
தன்மையாலல்ல...!
அதைக் கடந்து
கலைந்துச் சென்ற
கனவுகளின்
கால்பிடித்து...
வேர்ப்பிடிக்கும் லாவகம்
பேருந்து மட்டுமே
அறிந்தவொன்று!
ஒவ்வொரு
இருக்கையும்...
ஒவ்வொரு கம்பியும்
எண்ணிலா
சுவடுகளின்
கல்வெட்டுத்தானே?!
ஏறுவோர்க்கு இடமளித்து
இறங்குவோரை
இடைமறிக்கா
தலைமுறைத் தத்துவம்
ஒவ்வொரு இருக்கைப்
பின்னும்
பொதிந்துள்ளது!
தன்னை
ஆதுரத்துடன் பற்றி
அரவணைத்து அமர்பவர்கள்
மட்டுமே
அதன் பார்வையில்
பயணிகள்!
ஏனையோர்
வெறும் வழிப்போக்கர்
மட்டுமே!
மனிதர்கள் போலன்றி
பேருந்துகள்
பயணிகளுடனே பேச
ஆசைப்படுகின்றன.
வழிப்போக்கரோடு
அல்ல...!
பத்து நிமிட பயணத்தில்
யார் பயணி?
யார் வழிப்போக்கன்?!
முடிவும் அதன்வசமே!
சேரன் படங்களைப் போல
நினைவுகளைப்
பின்னோக்கி
துரத்துவதில் இதற்கு
நிகரில்லை!
கருத்த மேகங்கள்
கருக்கலைந்து
ஓரிரு துளிகள்
வீழத்துவங்கியிருந்தன...
பேருந்தினூடே
பிழைப்போட்டும் டீ
விற்கும் சிறுவன்
தந்துவிட்டுப் போன
தேநீரைப் பருகியபடி
அந்நிமிடங்களை மெல்ல
மனம் அசைப்போடுகிறது!
கொட்டும் மழைதனில்
ஒற்றைக் குடையுடன்
நனைந்தும் நனையாமல்...
நீ வந்தாய்!
இடம் கேட்காமலே நான்
எழுந்து வந்தேன்! ஏன்?
பருவக் கோளாறெனினும்
மனம் குறைப்படுகிறது...
காதலெனினும் ஏற்க
மறுக்கிறது! கனமாய்
பிடித்த
பெருமழைத்துளிகள்!
ஊர்ப்பெயர் தாங்கிய
ஓரக்கண்ணாடி வழியே
கசிந்துன்
மலர்த்தேகம் தீண்ட
யாசிக்கையில் நீயோ
அனற்பட்ட புழுவென
சன்னல் திரையை
இழுத்துவிட்டாய்!
புத்தகம்
நனையக்கூடாதென... நீ
இடைமறித்த துளிகள்
இடமளித்த குற்றத்திற்காய்
ஒதுங்கி நின்ற என்மேல்
பழி தீர்த்துக்கொண்டது...
சாரலாய்!
புத்தகங்களுடன்
தொப்பரையாய் நான் நின்ற
நிலையதிலும் ஒரு வசீகர
கோலம்
கலையாமல் காத்த கர்வம்
எனக்குள்... என் மேல்
கருணை
உனக்குள்...
அந்நொடி நீ சிந்திய
அவ்வொரு நொடி
பார்வையை
எப்படியுரைப்பேன்?!
அட்டமித்த இரவொன்றில்
மின்மினி மினுக்கி
வழி
சொல்வதாய்...மொட்டவிழ
்ந்த பூவதை பனித்துளி
தென்றலில் கலந்து
பருகுவதாய்... இல்லை!
சொல்லத் தெரியவில்லை!
காரணம்
நான் கவிஞனில்லை!
ஒரு ஆணுக்குள் புதைந்த
முகமறியா ஓராயிரம்
உணர்வுகளை ஒரு
பார்வையால்
உயிர்பிக்க முடியுமா?
ஒரு ஆணுக்குள் புதைந்த
அத்தனை ஆற்றலையும்
ஒரே ஒரு பார்வை
அங்கீகரிக்க முடியுமா?
அவனே அறியாமல்
அவனுள் புதைந்த
அவனை தட்டியெழுப்பி
கௌரவிக்க ஒரு
பார்வையால்
முடியுமா?
முடியுமெனில்
அத்தனை கேள்விக்கும்
மொத்த பதில் "நீ"!
பேனா பிடித்து
சரியாய்
எழுதத் தெரியா
நான்கூட
கவிதைப் பெயரில்
எதையோ
கிறுக்கி
கொண்டிருக்கிறேனே?!
மாமிசம் யாசித்து...
மதுவில் பூசித்து...
மாதுவை நேசிக்கும்
கலவரக் கண்களில்
என் வரிகளென்றுமே
பைத்யகாரத்தனம்தான்!
அதுப்பற்றி எனக்கு
கவலையில்லை!
காலமொரு
விசித்திர கண்ணாடி...
பருவமதன் மௌன மொழி!
உணர்வுகளை உயிர்ப்பிக்க
தெரிந்த அதனால்
உறவுகளை மீளியக்க
தெரியாதுதானே? மழை
ஒரு துயரக்குறி...
அதனுள் புதைந்த
காதலைவிட
கண்ணீரே அதிகம்!
விழும்போதது
ஆச்சர்ய குறியாகி
விழுவது
அதனால்தான்!
இதோ
அன்று நனைய மறுத்த நீ
கரைந்துவிட்டாய்!
காய்ந்த நினைவதிலும்
ஈரம் காயாமல்
நமுத்துப் போய்
கிடக்கிறது...
இதயப் பையில் உன்
பக்கங்கள்!
இன்றும் மரங்களை
கடந்து
மறைந்துப் போகும்
இப்பேருந்துகூட
அழகுதான் எனினும்
அதனுள்
ஒலிப்பதென்னவோ
மரணக்கூவலாகவே
கேட்கிறது!
ஊர்ப்பெயரெழுதிய
ஓரக்கண்ணாடி வழியே
ஒதுங்கி கசியும்
இந்த மழையும்
அழகுதான்!
எனினும்
இது அந்த மழையில்லை!
காரணம்
இன்று நனைவதற்கு
நீயில்லை...
நானில்லை...
நாமில்லை!!
நினைவுகள் சூழ்ந்துப்
பிரபஞ்சித்துள்ளன!
உன் வரவை
எதிர்நோக்கித்தானோ
இன்னும் தனியே
தவமிருக்கிறது
அவ்விருக்கை?!
என்றாவதொருநாள்
நீ ஏறி அமர்கையில்
உரைத்திடுமது...
என் யுக புலம்பல்களை...
ஒரு வரி
கவிதையாய்...
நான் நீயான
சங்கதியை
ஒரு துளிச் சாரலாய்....!
அன்று
நினைவின் கால்பிடித்து
நிழலில் நீ சிந்தும்
துளி நீர் சொல்லுமடி...
முகமற்ற இவனது
முழுமைப் பெறா
நேசத்தின் முகவரி!!!
***********************