மழையிலாடும் மலர்
கொடை கொடுத்த வான் கண்டு
குடை விரித்த மலரோ நெகிழ்ந்து
நடை மெல்ல நடந்தாள் சாலையில்
இடை முல்லைக் கொடியாய் ஆட
களர் நிலத்தின் மணம் நுகர்ந்தாள்
குளிர் வனத்தின் மனம் கொண்டாள்
தளிர் மரங்கள் குளியல் கண்டே
மலர் மனமும் குதிக்கக் கண்டாள்
கார் முகில் தன்துளி அம்புகளில்
பார் மண்ணைத் துளைக்கும் வேளையில்
தார் சாலையில் குடை விடுத்தாள்
ஊர் உணரா உணர்வு உணர்ந்தாள்
தாரைப் பாயாக்கிப் படுத்தாள் துளிகள்
பாரைப் போல் தன்னையும் துளைக்க
நாரை போல் நீரில் மிதந்தாள்
பாரை மறந்தே பாங்காய் மகிழ்ந்தாள்
என்னைத் தன்னில் இருந்து பிரித்தவளே
தன்னைத் தானே உணவாக்கித் தந்தவளே
அன்னை என்னும் பெயர் கொண்டவளே
உன்னைப் போல் பாசமழையும் பொழியுதே
சாதல் வரையில் உயிரின் சுவாசம்
காதல் நட்பு இரண்டின் நேசம்
மோதல் சேர்தல் பிரிதலில் உழன்று
சாதல் வரையிவை உயிரில் வாழும்
‘என்றவள் மழை கண்டு’,
துள்ளித் தாவும் மழலைத் துளியோ
அள்ளித் தெளிக்கும் வான் அன்னை
அள்ளி அணைப்பாள் என்று எண்ணியோ
துள்ளிக் குதிக்குது பாதம் நோகவே
‘என்று எண்ணியவள்’,
விழுந்த துளிகள் உருண்டே ஓட
எழுந்த மலரோ கண்கள் மூட
ஆண்டவன் போல் உலகை மறந்தே
தாண்டவம் ஆடினால் மழை அரங்கில்
- செ.கிரி பாரதி