செய்திகளைச் சேகரிப்பவன்
செய்திகளைச் சேகரிப்பவன்
வீதிகளில் அலைந்தபடி இருக்கிறான்.
சலனமற்ற அவன் முகம்
முதிர்ந்த காலத்தைத் தன்மேல்
படர்த்திக் கொள்கிறது.
எழுதும் வார்த்தைகள்
நினைவில் மேலெழும்புகின்றன...
எச்சரிக்கைகளைப் புறந்தள்ளியபடி.
நோயாளிகளைப் போல பேசும் சமூகத்தின்
கோடைக்காலம்
மாறிய அடையாளங்களுடன் புராதனமாயிருக்கிறது.
மெல்லப் படியிறங்குகிறது
அதன் வெற்றிடங்களை நிரப்பாத நிழல்.
மதுவின் துவர்ப்புடன்
விலகும் இன்றைய இரவிலும்
எழுதுபவனின் ப்ரார்த்தனைகள் முற்றுப்பெறவில்லை.
எதையும் அறியாது
அவனது எழுத்துக் குறிப்புக்களின் மேல்
ஊர்ந்து சென்ற சிறு எறும்பு....
வடக்கிருந்து உயிர் துறந்ததன் காரணத்தை
ஏனோ....
யாருமே அறிய முயற்சிக்கவில்லை.