ஊமை கண்ட கனவு

===================
பள்ளிக்கூடத்தில் இடம்பெற்ற
பேச்சுப்போட்டியில் முதலாமிடம்
அடைந்ததற்காகப் பெற்றக்
கேடயத்தைக் கொஞ்சிக்
குயில்போலக் கூவினாள்.

பாட்டரங்கத்தில் பாடிப்பாடி
பரிசில்களை குவித்து
பாராட்டு மழையில்
நனைந்திருந்தாள்

ஊர்த்திருவிழாவில்
நடந்த பட்டிமன்றத்தில்
சமூகத்தின் சீர்கேடுகளை
சாதி பேதங்களை சாடி
சிறந்த பேச்சாளினியாக
நடுவர் குழுமத்தால்
கௌரவிக்கப்பட்டிருந்தவள் .

யம்மா ..உன்னிடம் வாய்கொடுத்துத்
தப்பமுடியாது வாயாடி என்று
வாலிபவட்டங்களை கிரங்கடித்தவள்

அடியே இன்னுமாத் தூக்கம்
இன்றைக்கு உன்னை பெண்பார்க்க
வாரவங்க பார்த்தா விடிஞ்சது கூடத்
தெரியாம தூங்குற பொண்ணு
வேண்டாமென்று ஓடிடுவாங்க ..என்று
அம்மா திட்டும்போது ருசிகரமான கனவை உடைத்து
எழுந்து நாணித் தலைகுனிந்து நிலம்பார்த்திருந்தவள்தான்

மாலையில் வந்த பெண்வீட்டார்
பெண்ணுக்குப் பாடத்தெரியுமா? எங்கே
ஒரு பாட்டுப்பாடச் சொல்லுங்கோ என்றதும்தான்
தான் ஊமை என்பதையே மறந்திருந்த அவளுள்
நொறுங்கிப் போனது எதிர்காலக் கனவு

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (14-Jun-16, 3:56 am)
Tanglish : uumai kanda kanavu
பார்வை : 181

மேலே