காலத்தின் பதில் என்ன

புறப்படுகிறது பேருந்து பலத்த சத்தத்துடன்
புறப்பட்டுவிட்டது சிந்தனை புயலான வேகத்துடன்
செம்புளுதி படிந்த ஆடைகளை தட்டியபடி அன்று
இறங்கியதை விட இன்று இலகுவாய் போகலாம்
இயல்பான தூக்கம் இமைகளை மூடுகிறது
மெல்லச் செல்லுங்கள் உங்களைக் காத்தவர்கள்
உறங்கிக்கொண்டிருக்கிறார்கள் உள்ளுணர்வு சொல்ல
துயில் கலைந்து பார்க்கிறேன் தலை திருப்பிப் பார்க்கிறேன்
நான் மட்டுமல்ல அந்த அக்காவும் பார்க்கிறாள்
அண்ணாவும் பார்க்கிறான் அந்த அம்மாவும் பார்க்கிறாள்
ஏன் இந்த ஜயாவும் பார்க்கிறார் தன்பார்வையால்
மெல்ல தழுவிக்கொண்டு பார்க்கிறார்
தொண்டையை விழுங்கிக்கொண்டு பார்க்கிறார்
இங்கேதான் இந்த பச்சை முகாமின் கீழேதான்
இவர்கள் அத்தனைபேரின் அன்புக்குரியவர்களும்
அமைதியாய் அடக்கமாய் அயர்ந்த தூக்கத்தில்
அடக்குமுறை அழிப்பின் மறுவடிவம்
அடைத்துவைத்தலாய்
நெஞ்சைப் பிசய நிமிர்ந்து பார்க்கிறேன்
இங்கேதான் எங்கோவோர் மூலையில்தான்
எங்கள் உறவுகளும்
நிசப்தமாய் நிரல் கொண்டனர்
கணமணி நேரத்தில் கடந்துவிட்ட பேருந்து
அடுத்த காட்சிக்கு அமைதியாய் அழைக்கிறது
உணர்வுகளோடு போராடி இயல்பாய் இருப்பதைப்போல்
இலகுவாய் காட்டிக்கொண்டு காத்திருக்கும் சாபத்திற்கு
காலத்தின் பதில் என்ன?
கட்டிய கல்வெட்டுகளைப் பொட்டென உடைத்து
வெட்டிய குழிகளைத்தட்டி கிரவலால் நிரப்பி
பூசிய புளுதியினை புது வீதியால் மறைத்து
பச்சைத் தகரத்தில் புதுப்பூட்டு;களைப் போட்டாலும்
உயிரடங்கி உணர்வுகள் சரியும்வரை
எழுகின்ற நினைவுகளை சிறையிட்டு
அட(டை)க்க முடியுமா?