கர்ணி மாதா கோயில் - எலிக் கோயில்
இராஜஸ்தான் மாநிலம், பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலேயே, பீகானேர் நகரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேஷ்நோக் கிராமத்தில் அமைந்திருக்கும் கர்ணி மாதா கோயில், 'எலிக் கோயில்' என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.
கோட்டை அரண் போல் இருக்கும் மதில் சுவர்களால் சூழப்பட்டு இருக்கிறது கர்ணி மாதா திருக்கோயில்.
கோயிலின் நுழைவாயில் பளிங்குக்கற்கள் பதிக்கப்பட்டு முகலாய மற்றும் இராஜபுத்திர கட்டிடக்கலையுடன், நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது.
உள்ளே நுழைந்தவுடன் இருபக்கமும் உள்ள சுவர்களில் பிறைச் சந்திரனைபோல் கூரை அமைக்கப்பட்ட சிறுசிறு மண்டபங்கள்.... முழுவதும் சலவைக் கற்கள்!
20-ஆம் நூற்றாண்டில் பிகானேர் மன்னர் கங்கா சிங் என்பவர் இக்கோயிலை முதலில் கட்டினார். கோவில் விதானத்தில் நவகிரகங்களுக்கான அதிபதிகளை அவரவர் வாகனங்களோடு வரைந்து வைக்கப்பட்டுள்ளது.
பிக்கனேர் மகாராஜாக்கள் தங்கள் குலதெய்வமாக கர்ணி மாதாவையே வணங்கி வந்தனர். 1999-ஆம் ஆண்டு ஹைதராபாத்தைச் சேர்ந்த குந்தன்லால் வர்மா என்பவரால் புதுப்பிப்பு பணிகள் நடந்தேறின.
சுற்றாலையின் நடுவில் கருவறை இருக்கிறது.
சிறிய குகை போல் உள்ள அறையில் அம்மன் சந்நிதி.
மூலவர் சிலை ஜெய்சல்மர் மற்றும் ஜோத்பூரில் கிடைக்கும் சிவப்புக் கல்லில் செதுக்கப்பட்டிக்கிறது. 75 செ.மீ. உயரம்.
அம்மன், தலையில் மகுடத்துடனும், வலது கையில் சூலத்துடனும், இடது கையில் கபாலத்துடனும் சிம்ம வாஹினியாகக் காட்சி தருகிறார்.
விக்ரகம் முழுவதும் குங்குமத்தால் (சிந்தூர்) மூடப்பட்டிருக்கிறது. முன்னால் பெரிய தட்டு. அதில் லட்டுகள். பிரசாதத்தை எலிகள் கொறித்துக் கொண்டிருக்கின்றன. வேறு ஒரு தட்டில் பால்.
பக்தர்கள் கர்ணி மாதா கோயிலின் மூலவர் துர்கையை வழிபடுவதுடன், கோயிலில் குடிகொண்டிருக்கும் எலிகளுக்கு பிடித்தமான இனிப்பு பலகாரங்கள், பால் போன்றவற்றை உணவாக வழங்கி வழிபடுகின்றனர். இங்கே எலிகள் வணங்கப்படுகின்றன.
கர்ணி மாதாவின் கோவிலில் காணப்படும் எலிகளும் கர்ணி மாதாவின் சக குடிமக்களாகவே கருதப்படுகின்றன. அதனால்தான் எலிகளுக்கு இந்த ஆலயத்தில் ராஜமரியாதை அளிக்கப்படுகிறது.
இக்கோயிலில் 'கபாஸ்' என்று அழைக்கப்படும் 20,000 கருப்பு எலிகள், சில வெள்ளை எலிகள் உள்ளன. அவைகள் ஓடி ஒளிய அங்கங்கே சுவர்களில் கொஞ்சம் ஓட்டைகள் வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளை எலிகளை கண்ணுறும் சந்தர்ப்பம் கிடைத்தால் அதிர்ஷ்டம் வந்து சேரும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது.
எலிகள் எல்லாம் ஒரே அளவில் உள்ளன். 'எலி குட்டி'களை யாரும் கண்டதில்லை! இவை எப்படி இனப்பெருக்கம் ஆகின்றன என்றோ எப்படி தோன்றுகின்றன என்றோ யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது!
சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றி அவை கவலைப்படுவதே இல்லை. பறவைகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக மேலே பெரிய வலை போட்டிருக்கிறார்கள். இவையும் கோயிலைவிட்டு வெளியே செல்வதில்லை.
இவற்றை யாராவது அறியாமல் மிதித்துக் கொன்று விட்டால் பரிகாரமாக வெள்ளியிலோ அல்லது தங்கத்திலோ எலி செய்து கோயிலுக்கு அளித்துவிட வேண்டும்.
எலிகள் குடிக்கும் பாலே இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை குடித்தால் யாருக்கும் எவ்வித பிரச்சனையும் ஏற்படுவதில்லை என்பதே வியப்புக்குரிய விஷயமாகும்!
பக்தர்களின் கால் பாதங்களில் இந்த எலிகளின் ஸ்பரிசம் படுவது நற்பேற்றின் அடையாளமாக நம்பப்படுகிறது.
கர்ணி மாதா கோயில் காலை 4 மணியிலிருந்து பக்தர்களுக்காக திறந்திருக்கும். இங்கு அதிகாலையிலேயே அர்ச்சகர்கள் மங்கள ஆரத்தி நடத்தி விடுவார்கள். அப்போதே கோயிலில் அங்குமிங்கும் எலிகள் நடமாடத் தொடங்கிவிடும்.
இந்தியாவில் வேறெங்கும் எலிகளை வணங்கும் வினோத வழிபாட்டு முறையை காண முடியாது.