தொலைந்துபோன கவிதை
ஆற அமர்ந்து பேசிய
ஆற்று மணல் மேடுகள்
அலைகளுடன் விளையாடிய
கடலோரக் கரைகள்
பின்னிய விரல்களுடன்
நடை பயின்று மகிழ்ந்த
வயல் வரப்புகள்
சிறகடித்துப் பறந்த
பசுஞ்சோலை நிலங்கள்
திருட்டுத்தனமாய் நுழைந்து
மாங்கனிகளை ருசித்த
மாமரச் சோலைகள்
இளங்காற்று முத்தமிட
இடைவெளியின்றி
படுத்துருண்ட புல் வெளிகள்
எங்கும் நான் தேடுகின்றேன்
தொலைந்து போன கவிதையை