ஒரு இளம் காளையின் கிராமியக் காதல்
தென்ன மரம் சலசலசலக்க, தேன் நெலவு தேயுதடி...
தெனம் தெனமும் உன் நெனப்பு , தேயாம ஒசருதடி.
தேடித்தேடி அலையுதடி, தெரட்டுப்பாலும் கரையுதடி...
காஞ்சு நிக்கும் பயிரப்போல எம்மனசு வாடுதடி...!
முழு நிலவா நீ சிரிச்சு, மோகத்தை கூட்டுறயே...
மோகம் வந்து நாம் பார்க்க, மேகத்துல மறையுறயே.
எத்தனையோ ஆசைகளை சொல்ல மனம் நெனக்குதடி...
அத்தனையும் நிறைவேத்த மாமன் மனசு ஏங்குதடி...!
தேக்கு மர ஒடம்புக்குள்ள, தேவதையா ஜொலிக்கிறயே...
பாக்கு மர வேரைப் போல, மனசுக்குள்ள பின்னிட்டயே .
வாய்க்கா நெனப்புமில்ல , வயல்வரப்பும் நெனப்பிலில்ல...
பாய்ச்சாத வயலப்போல வனப்பிழந்து நிக்கிறனே...!
மோட்டுவளையப் பாத்து பாத்து, எந்தூக்கம் போயிடுச்சே...
காட்டுமல்லி வாசம் வந்து, மோகத்தையும் கூட்டிடுச்சே.
சாக்கு போக்கு சொல்லி நீயும் சிரிச்சுப் போகுறயே...
சீக்கு கோழி போல நானும் தொவண்டு நிக்குறனே...!
ஆடி போயி ஆவணி வந்ததும், ஆசை கூடுதடி...
தேடி தேடி தாலி செய்ய, மனசும் ஏங்குதடி.
ஒத்தையில படுத்திருக்க, நெலவும் ஏசுதடி...
ஊரைக்கூட்டி பரிசம் போட, நாளத் தேடுதடி...!