வலிமை
இந்த பூமி பொறுமைக்கு மட்டுமல்ல
வலிமையையும் போற்றுகிறது.
ஐம்பூதங்களும் ஆக்ரோசத்தால்
ஒன்றையொன்று வெல்லத்தான் செய்கிறது.
கோள்கள்கூட
வான்மண்டலத்தில் வலிமையோடு
கோலோச்சுகிறது.
எது அச்சம் தருகிறதோ
அதற்குள் நீ அடக்கம்.
ஏறமுடியாத மலை
கடக்கமுடியாத பாதை
சூடமுடியாத மலர்
வலிமையில்லாதவனை
தூசுகூட உமையழிக்க தூண்டில்போடும்.
ஓடும்நீரில் ஊற்றுத்தோண்ட முடியுமா
ஊறும் நீரில் சேறுதான் கலக்குமா
காட்டுத்தீயெரிக்க
ஊதுகுழல் தேவையில்லை.
வீட்டின் நெருப்பணைக்க
ஆற்றுநீர் தேவையில்லை.
அமைதியாய் இருப்பதால்
கடல் வலிமை இழக்குமா
சுழியிட்டு பயணிப்பதால்−ஆறு
வழிமாறிப் போகுமா
நீ
கிள்ளமுடியாத புல்நுனிகூட
உனை
எள்ளி நகையாடும்.
தென்றலும் காற்றுதான்
புயலும் காற்றுதான்
இவைகள்
கைகோர்த்து கடந்துசென்றாலும்
தென்றல் புயலை வெல்லமுடியுமா
வலிமையில்லாதவனை
புழுகூட உன்றன்
குரல்வளை நெரிக்கும்
வலிமையிருந்தால்
கண்ணாடித்துண்டை கண்ணில் செருகலாம்.
கனல்த்துண்டை கடைவாயில்
மெல்லலாம்.
வலிமையோடு இரு.