இப்படித்தான் இந்தியா

அதிகாலை நாலரை மணி
கண் விழித்து பார்க்கையில்
அனல் காற்று
வீசி கொண்டிருந்தது

நானிருந்த இடத்தில்
யாவும் மறைந்து
ஒற்றை ஆளாய்
தனித்து நிற்கிறேன்

சுற்றிலும் மணல்வெளிகள்
சில இடங்களில்
மணல் ஊற்று கிளம்பி
ஆறாய் ஓடி கொண்டிருந்தது

மணல் ஆற்றில்
மிதக்கும் குப்பைகளாய்
மனித உடல்கள் ,,,,,,

ஆற்றின் மறுகரையில்
விளம்பர பலகை
இப்படி இருந்தது

அசுத்தப்படுத்தாதீர்
ஓடுவது
புனித கங்கை ஆறு
------------------------------

சற்று தூரத்தில்
மராத்தான்
ஓடி கொண்டிருந்தன
இயந்திர கார்கள்

தன் பசி தீர
குடித்து கொண்டன
சிகப்பு நிறமுள்ள
இரத்தமென்னும் திரவத்தை

இருந்தும்
பசி தீராமல்
சாலைகளை அரைத்து கொண்டே
மீண்டும் ஓட்டமெடுக்கின்றன ,,,,,,,!

-----------------------------------------

இன்னும் சற்று தூரத்தில்
வயது முதிர்ந்த
பெண்ணொருத்தியை
சூழ்ந்து நிற்கின்றன
நான்கு இளம் நாய்கள் ,,,,,,,,

காம வெறி பிடித்து
அப்பெண்ணை
கடித்து குதறி
உண்டு கழித்து
கலைகின்றனர்

உயிர் போன நிலையில்
செங்குருதி வழிந்து
அலங்கோலமாய்
கிடக்கிறது
வயது முதிர்ந்த
பெண்ணவளின் உடல் ,,,,,,,,,,,
-----------------------------------------

உறக்கம் கலைந்து
எழுகிறேன்

எதிரே
தொலைக்காட்சி பெட்டி
உரக்க அலறி கொண்டிருந்தது

'' வல்லரசாகியது இந்தியா '' என்று ,,,,,,,,!

எழுதியவர் : தங்கதுரை (24-Jun-16, 4:33 pm)
பார்வை : 545

மேலே