புலம்பெயர் தமிழா...!!!

புலம்பெயர் தமிழா...!!!
ஊரோடு உறவாட முடியாமல்,
வேரோடு உறவிழந்து,
அயல் நாடெனும் விடுதியில்,
சொந்தபந்தமின்றி தனியாக ,
தன்னுறவுகளுக்காக,
இராப்பகலின்றி நீ படும் பெரும் பாடு,
நாமறிவோம்,

பிறநாட்டில் வாழ்ந்தாலும்,
தன்நாட்டு உறவுகளுக்காக,
நீ சிந்தும் ஒவ்வொரு துளி வியர்வைக்கும்,
பதில் கிடைக்கும் நாள் தொலைவில் இல்லை ..!!!!

ஐ . நா வுக்கு உள்ள இரக்கம் கூட நம் அண்டை நாட்டுக்கு இல்லை,
தெருவோரம் பிறந்து அனாதைகளான உறவுகள் போல் நம் சொந்தம்,
எப்போது சேரும் எமது பந்தம்,
காலம் நம்மை பிரிக்கவில்லை,
காலன் நம்மை பிரித்து விட்டான்,
இலையில் நரம்பு போல் இருந்த எம்மை,
இருளில் தள்ள நினைத்த கொடுங்கோலன்,
பார்வை இழக்கும் நாள் பாரினில் வரும்..!!!

கொட்டும் பனியிலும்,
கொடூர குளிரிலும் ,
அந்நாட்டுகாரனே வீட்டினில் முடங்கிய நேரம்,
நமக்காக நீங்கள் வீதியில் இறங்கிய அந்த நாள் ,
வரலாற்றில் பதியப்பட்ட அந்த நிமிடம் ,
நினைக்கும் போதே மெய் சிலிர்கிறது ,

தன்னின மானத்தை நீ மதித்து ,
தாய் மண்ணின் பெருமையை நிலை நாட்டிட ,
வெள்ளமென திரண்ட எமது உறவுகள்,
தமிழர் மனதில் நீங்காத நினைவாக அமைந்த அந்த நொடி,
நினைவுகளில் நீங்காது....!!!!

நமக்காக விடியலை தேடி செல்லும் நீங்கள்,
நிச்சயம் ஒருநாள் அந்த விடியலை பெற்று ,
நமது துயர் நீக்கி ,கண்ணீர் களைந்து ,
நம்மை நிமிர்ந்து பார்க்கும் போது,
உங்களுக்காக பரந்த விழியுடன் ,
வரவேற்பு கம்பளம் விரித்து ,
வழிமீது விழி வைத்து காத்திருப்போம்,
அவர்களுடன் இணைந்து இந்த தமிழனும்...!!!


புலம்பெயர் தமிழா தலைவணக்கம்...!!!!!

எழுதியவர் : kumaresan (23-Jun-11, 1:03 pm)
சேர்த்தது : kumaresan tamilan
பார்வை : 721

மேலே