மனிதனாய் இரு அதுவே போதும் தெய்வம் எல்லாம் வேண்டாம்

உலகத்தில் உனக்கு மேலே
ஒருவரும் இல்லை
உனக்கு கீழே ஒருவரும் இல்லை
என்று நீ வாழ்ந்தால்
நீயும் மனிதன் தான்

அதமனாய் இராதே
உத்தமனாய் இராதே
மத்திமனாய் இரு

உனக்காக நீ வாழ்
உலகுக்காக நீ வாழ்
மனசாட்சியோடு வாழ்

மண்ணை ஆள வா
பொன்னை ஆள வா
என்ன ஆண்டாலும்
உன்னை ஆளப்போவது
ஆறடி நிலம் என்பதை
மறக்காமல் ஆள வா
அதுவும்
உன்னை புதைத்தால் தான்
அந்த ஆறடி நிலமும்
எரித்தால் வெறும்
சாம்பல் தான்

ஈரநாக்கை
அழுக்காக்கி விடாதே
ஈரமில்லாமல் பேசி
அழுகினாலும்
சொன்ன வார்த்தை
துர்நாற்றமெடுத்துக்கொண்டே இருக்கும்



மனிதா
மரம் செடி கொடி
புல் பூண்டு
இனம் மொழி கடந்து நேசி
நீ உண்மையாக நேசி

சிறு தூசி
என்றாலும்
அதனிடம்
நடிக்காதே
கோபம் என்றாலும் கொட்டிவிடு
அழுகை என்றாலும்
சாய்ந்து அழு
மகிழ்ச்சி என்றாலும்
பகிர்ந்து விடு
உலகத்தை அணுஅணுவாய்
இரசித்துவிடு


துரோகம் என்பதை தூக்கி எறி
நம்பிக்கை நட்சத்திரமாய்
மின்னிவிடு

உலகத்தில்
யார் எப்படி இருந்தாலும்
நீ நல்லவனாய் இரு
யாருக்காகவும்
உன்னை மாற்றிக்கொள்ளாதே
நாணயமானவனாய் இரு


உதவிக்கு நிற்கவில்லை என்றாலும்
உபத்திரம் செய்யாதே

யார் மனதையும் காயப்பட்டு பட்டு போக செய்யாதே
அதில் மீண்டும் பட்டு பூச்சி
பூவிதழ் விரிக்காதே

யாருக்கும் குழிபறிக்காதே
அதே குழியில் குப்புற நீ விழுவாய்

பொறாமை படாதே
படாதே
பட்டால் ஆவாய்
பொறாமையின் தலைகீழ்

அவர் அவர் வாழ்க்கை
அவர் அவர் உழைப்பு
மூன்றாவது மனிதன்
ஏன் நீ
இதை பற்றி பேசி
உன் காலத்தை வீணடிக்கிறாய்
உன் பாதையை நீ பார்
அப்பொழுது தான் பாதையில் முள் இருக்கிறதா
பாம்பிருக்கிறதா
பூ இருக்கிறதா
என்பதை உணர்ந்து
வழியை செம்மை படுத்த முடியும்
பூ இருந்தால்
உன் அதிர்ஷ்டம்
பாம்பிருந்தால்
அப்பொழுதும் இப்படி தான்
வெட்டி கதையும் புரளியும் பேசி கொண்டிருப்பாயா

அன்போடு வாழ்
அரவணைத்து வாழ்
தாய் மொழி தமிழில்
அன்போடு அளவளாடு

நீ பிறக்கும் பொழுது
நீ அழுதாய்
நீ இறக்கும் பொழுது
உனக்காக அழ
உண்மையாக அழ
ஆள் வேண்டாமா?


~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (29-Jun-16, 9:03 pm)
பார்வை : 399

மேலே