அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள்
பாவலர் கருமலைத்தமிழாழன்

பூத்தமுகத் தாமரையில் பூசும் மதியெழிலில்
கோத்த அனிச்சயிதழ்ப் புன்னகையில் – மாத்தமிழே
நேஞ்சம் நிறைந்தாய் இரவெல்லாம் உன்நினைவில்
தஞ்சம் புகுந்தேன் தவித்து !

மொட்டவிழ்ந்த பூமரமே மொய்க்கும் விழிவண்டைக்
கட்டவிழா கொங்கைக்குள் கட்டிவைத்த – கற்பகமே
பட்டத் தழகேஉன் பார்வைக் கடிபணிந்தேன்
எட்டத்தில் கொல்லுவதோ நின்று !

பாரென்னும் பூம்பருவம் பக்கம்வா வென்னுமிதழ்
தேரென்னும் மேனிதழு வென்றுரைக்கச் – சீரென்னும்
நாணம் இடையில் தலைகவிழ்க்க வேகின்றேன்
காமன் கணைமலரால் காண் !

கச்சை நகில்மூடிக் காணும் விழியீர்த்தே
இச்சை பெருக இடையசைத்தாய் – நச்சிமனம்
அன்ன நடைபின்னே அன்பு குடைபிடித்தேன்
என்னைக் குழைவாகத் தைத்து !

கண்ணின் இமைக்குள்ளே காதற்பூ உன்முகத்தை
தண்ணீருள் மீனாகக் காத்ததனால் – மண்ணில்
குருடாய் நடக்கின்றேன் துள்ளும்பூ மானே
திறந்தால்நீ போயிடுவாய் என்று !



கண்திறந்த போதே வரும்கனவு நாயகியே
என்னிதய ஏக்கத்தை எண்ணிப்பார் – உன்மீது
வீசுமிளங் காற்றுவந்து பட்டாலும் என்மேனி
தீசுமந்து போவதுதான் ஏன் !

சந்தனத் தேன்கலசம் சாயாத கோபுரத்தை
முந்தானை மேகத்தால் மூடிவரும் – சுந்தரியே
ஆலய வாசலில் அன்பிற்காய் ஏங்கும்என்
கோலத்தில் நல்லருளைக் கூட்டு !

நாதம் இயற்றும்உன் நாமொழி சொல்கேட்டால்
ஓதமுறு தென்றலுக்கே போதைவரும் – சீத
நிலவொளியும் சொக்கிவிழும் ; நித்திலமே காதல்
நிலவுமொழி நான்வாழச் செப்பு !

காலைக் கதிர்செம்மை கண்ணில் எடுத்துன்றன்
மாலைப் பிறைநுதலில் பொட்டிடுவேன் – கோதையுன்
கார்குழலின் மீதினிலே நட்சத் திரப்பூவை
பார்வியக்க வைப்பேன் பறித்து !

வீட்டருகில் வந்தபோது வாயிற் படிநின்றே
பாட்டிதழில் நீசொன்ன பாகுமொழி – கேட்டசெவி
இன்பத்தை வேற்றொலிகள் ஈர்த்திடாமல் கைபொத்தி
நின்றேன் நினைவில் நினைத்து !




பாதம் பெயர்க்கும்உன் பாங்குதனைப் பார்த்துவிட்டால்
வேத முனிவருக்கும் ஆசைவரும் – காதல்
ரதியாளைக் காமனுமே கைவிடுவான் ; வீட்டுப்
படியிறங்கி வாராமற் பார் !

செந்தூர மாலையிலே சித்திரமே நீநடந்தால்
வெந்துருகி மாலும் கணைதொடுப்பான் – இந்திரையின்
கண்சிவப்பில் சாம்பலாவோம் ; கண்மணியே நாமிணைய
என்பார்வைக் குள்ளே இரு !

பார்வையிலே மின்சாரம் பாய்ச்சுகின்ற பூச்சரமே
ஊர்சனங்கள் மெச்சுகின்ற அச்சாரம் – தார்சரமாய்
நான்சூட்டித் தந்திடுவேன் நாள்மலரே தாகத்தைத்
தேன்ஊற்றித் தீர்க்கவா இன்று !

தங்கமே உன்னைவர தட்சணை வாங்காமல்
மங்கலநாண் இட்டு மகிழ்விப்பேன் – இங்குலவும்
எம்மதம் ஆனாலும் என்னுடலின் பாதிநீயே
சம்மதம் உன்நாவால் தா !

விண்மீன்கள் புள்ளியிடும் வானவில்லோ கோலமிடும்
வெண்ணிலவும் ஆதவனும் தோரண – கற்பகங்கீழ்
குத்து விளக்காய் ஒளிகூட்டும் ; என்னவளாய்
இத்தரையில் நீயாகும் போது !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (3-Jul-16, 8:05 pm)
பார்வை : 89

மேலே