மழலையின் மனம்
இருண்ட வீட்டில்
தங்கி விட்டு
வெளிச்சத்துக்கு
வந்தேன்
வெளிச்சம் கண்ணை
கூசியதால்
கண் மூடி இருந்தேன்
கடவுளும் என் அருகில்
வந்து,
என்னை உற்று பார்த்தான்
நான் தூங்கும் அழகை
பார்த்து அவனும்
சொக்கித்தான் போனான்
அவன் படைப்பின் அழகினிலே
தன் நிலை மறந்து விட்டான்
என்னை எழுப்ப மனமின்றி
அமைதியாக இருந்தான்
இவ்வுலகிற்கு புது வரவான
என்னை வரவேற்க வந்தான்
நான் பேச சில காலம்
ஆகும் என்று தெரிந்து
தன் மொழியில் என்னிடத்தில்
அவனும் பேச வந்தான்
என் வாழ்க்கையே
ஒரு கணக்கில் தான்
ஆரம்பம் என சொல்லி
தகுந்த விளக்கத்துடன்
அவனும் எனக்கு புரிய
வைக்க முயன்றான்
அன்றொருநாள்
என் அன்னை உடம்பில்
நான் ஜனித்த உடனே
கணக்கு போட்டாள்
அவளும் தான்
முன்னூறு நாள் என்று
ஒரு சிறு துளி
நீரில் என் பயணம்
தொடங்க
தாயிடத்தில் தஞ்சம்
கொண்டேன்
அவளே கதி என்று
ஆனந்த கொண்டாட்டமாய்
அவளும் என்னை ஏற்று
அங்கம் கொடுத்து
உருவம் கொடுத்து
என்னை அரவணைத்தாள்
தன் உத்திரத்தையும் கொடுத்து
முன்னூறு நாள் கணக்கு
என்ன ஒரு கணக்கு
அப்புறம் தான் புரிந்தது
அது ஆண்டவனின் வழக்கு
அப்பாவின் வீரியமும்
அம்மாவின் மென்மையும்
கலந்ததுதான்
என் ஊட்டச்சத்து உணவு
சிந்திக்க, பேச, செயல்பட
என எல்லாவற்றிற்குமே கணக்கு
அந்த முன்னூறு நாள்
என் வாழ்க்கையின்
சொர்க்கம் தான் சொர்க்கம்
நானும் அவளும் பேசிக்கொள்ள
வார்த்தைகள் அன்று இல்லை
இருந்தும்,
எங்கள் பேச்சினிலே
பல ரகமும் கலந்து
இருந்ததுண்டு
மகிழ்ச்சி உண்டு
சண்டை உண்டு
கோவம் உண்டு
சோகம் உண்டு
சிரிப்பும் உண்டு
அழுகையும் உண்டு
இதை நீங்கள் தான்
அறிவீரோ
அவள் மனதை
நான் அறிய
என் மனதை
அவள் புரிய
அந்த இனிமையான
தருணம்
அந்த கடவுளுக்கு மட்டும்
தெரியும் அதில்
பொதிந்திருக்கும் அர்த்தம்
அவ்வப்பொழுது என்
தூக்கத்திலே
நான் சிரிப்பதுண்டு
அழகான சிறு உதட்டை
மெலிதாக விரித்து
அதை காண்கையில்
நீங்களும் தான்
மனம் மகிழ்வதுண்டு
அந்த சிரிப்பிற்கு
பொருள் என்ன
நீங்கள் சிந்தித்ததுண்டா
அது,
அந்த ஆண்டவனின்
தாலாட்டில் மெய்மறந்த
சிரிப்பு
சிலசமயம் தூக்கத்தில்
நான் விசும்புவதும் உண்டு
என் கருத்தை அவன்
ஏற்க மறுக்கும்
தருணத்தில்,
வருவதுதான் இந்த
விசும்பலும், நீங்களும்
தெரிந்து கொள்வீர்
எங்கள் இருவருக்கும்
இடையே சில
ஒற்றுமைகள் உண்டு
அதனால்தான் சொன்னார்கள்
மழலையும், மாயவனும்
ஒன்றேதான் என்று
பல வடிவம் அவன் ஏற்று
நம்முடனே இணைவான்
பல பருவங்கள் நாம்
கடக்கையிலே
அவனும் துணை வருவான்
வாழ்க்கையின் சாராம்சம்
அவனும் எனக்கு சொன்னான்
நேரம் காலம் கூடும்
பொழுது
எனக்கு அது புரியும்
என்றான்
இப்பொழுது இச்சமயம்
பொன்னானது என்றான்
அதை மகிழ்ச்சியாக
ஆக்க அவனும் துணை
புரிந்தான்
ஏதோ ஒரு உந்து சக்தி
என்னையும் எழுப்ப
மெதுவாக நானும் என்
கண் திறந்து பார்த்தேன்
அந்த ஆண்டவனின்
அருகினிலே ஓர்
உருவம் கண்டேன்
அந்த உருவத்தை
அவன் எனக்கு
அறிமுகப்படுத்த
நினைக்க
நான் முந்திக்கொண்டு,
சிரித்துக்கொண்டே
மகிழ்ச்சியிலே
கை, கால்களை ஆட்டி
அந்த உருவத்திடம்
பாய எத்தனிக்கும் பொழுது
அதிர்ச்சியுடன் என்னை
பார்த்தான்
அவனும் குழம்பிக்கொண்டே
என் பிறப்பின்
காரண கர்த்தாவை
நான் எப்படி மறப்பேன்
என் உடம்பு எல்லாம்
மகிழ்ச்சியில் துள்ளிக்
குதிக்க ,
நானும் காத்திருக்க,
என்னை அள்ளி
உச்சி முகர்ந்தார்
என் தந்தையான
அவரும்
அவர் அணைப்பில்
ஆனந்தத்தில்
என்னை மறந்திருக்க
சற்றே ஓரக்கண்ணால்
நான் பார்த்தேன்
அந்த ஆண்டவனை
அங்கே
எம்மை அவன்
வாழ்த்திவிட்டு
அங்கிருந்து நகர்ந்தான்