மறந்துவிடுகிறேன்

மறந்துவிடு
என்பதை மட்டும்
மறக்காமல்
நினைவில்
வைத்திருப்பவனே!
இதோ இந்த மரங்கள்
இலைகளோடு
கிளைகளையும்
உதிர்த்த பின்!
அந்தி சூரியன்
அஸ்தமிக்கும்போது
பறவைகள்
கூடு சேராமல்
விட்டுவிட்ட பின்!
கால் நனைக்கும்
இந்த ஓடையில்
குளிர்நீர்
வெப்பமான பின் !
என் தோட்டத்தில்
மல்லிகை
பூக்காமல்
சருகான பின்!
தினமும் பார்க்கும்
அந்த ரோஜா
அழகில்லை
என்றான பின்!
கண்ணாடி முன்
நிற்கையில்
நீ முத்தமிட்ட
இடங்களை
தன்னிச்சையாய்
கரங்கள்
வருட மறந்த பின்!
இரவும் பகலுமாய்
நகரும் நாட்களில்
ஒரு நொடியேனும்
உன் நினைவு
என்னுள் நெருடாமல்
கடந்த பின்!
நான் சுவாசிக்கும்
கடைசி காற்றும்
நிறுத்தப்பட்ட பின்!
மறந்து விடுகிறேன்!

எழுதியவர் : (6-Jul-16, 6:23 pm)
பார்வை : 63

மேலே