வாதத்தால் மட்டுமே அழியாது - தீவிரவாதம்
மண்ணில் புதையுண்ட
மானுடன்போல், நம்மில் புதையுண்ட
மனிதமும் மரித்துப்போயிற்று
செல்வத்தின் விளிம்பில்
சிறையுண்டவர் சிலர், வறுமையின்
விளிம்பில் மாண்டவர் பலர்
வேரற்ற மரம்போல் இன்று நம்மில்
பலர் உயிரற்ற ஊடகமாய்
உலவிக்கொண்டிருக்கிறோம்
எங்கோ எவர்க்கோ கழன்று விழும்
கண்ணீர், உடல் சிதறி உயிர்கள் -
நாளை நமக்கும்
உமது வீட்டுக்குள் மட்டும் நாவுகள்
நடனமாடி என்னப்பயன் நாட்டுக்காகவும்
சற்று நர்த்தனமாடட்டும்
இன்று ' முதுகெலும்பு ' அற்றவனாக
நீ இருந்தால் நாளை உம்
தலைமுறைகள் தழைத்திட நம் பாரதம் இராது
வெறும் வாதத்தால் மட்டுமே அழியாது - தீவிரவாதம்
வரம்புடைய வன்முறையும் வேண்டும் இந்த
" தீவிர வாதத்தை " வேரறுக்க
அஃறிணையில் இருந்து நம்மை பிரிக்க
இறைவன் அளித்தது " ஆறாம் அறிவு " -
தவறாக படைத்து விட்டான் போலும்
பசியாற மட்டுமே உயிர்களை
வேட்டையாடும் இயல்பை
இறைவன் இயற்கையாகவே
அஃறிணைக்கு அளித்திருக்கிறார்
நாமோ வெறும் பணத்துக்காகவும்
பகைமைக்காகவும் நம் இனத்தை
நாமே அழிக்கும் அவலம் இப்புவித்தானில்
நாளுக்கு நாள் அரங்கேறுகிறது
தன்னை தற்காத்துக்கொள்ள
பல யுக்திகளை அஃறிணைக்கு அளித்தவன் -
நமக்கு சுய (தன்) நலத்துடன் ஓடி ஒளிய
மட்டுமே பழக்கிவிட்டான் போலும்
பலவகைகளில் பயன்பட்டிருக்கும்
" ஆறாம் அறிவை " அஃறிணைக்கு அளித்திருந்தால்..
இன்று நமக்கிருப்பதால்தான்
அணுஆயுதங்களும் பல RDX களும்
உருவாகி நம்மையே உருகுலைக்கின்றன
வேதங்கள் நான்கிருக்க நாமோ ..
சாம வேதத்தில் மட்டுமே உழன்று
கொண்டிருக்கிறோம் சற்றே
அதர்வன வேதத்திற்கு அடியெடுத்து வைப்போம்
" தீவிர வாதத்தை " வேரறுக்க....