சமதர்மம்
ஏழை இன்னும் ஏழையாவதும்
பணக்காரன் இன்னும் பணக்காரனாவதும்
நேற்றைய ஏற்பாடு
இன்றும் அது ஒரு கூப்பாடு.
எங்கேயும் எப்போதும் இப்படியேயாகிடில்
என்ன தான் செய்குவது?
சோசலிசம் விரும்பும் சமூகத்தை
சோத்துக்கட்சியென்றது தான் மிச்சம்,
கம்யூனிசம் என்பதெல்லாம்
கடைத்தெருவில் கூடும் காசில்லாவர்கள் கூட்டம்.
அரசியல் நிழலை அனுபவித்தே பழகிய கூட்டம்
அந்த அரங்கேற்றத்தில் தான் அவரவர்க்கு அரசாள நாட்டம்.
சகுனிகளின் சூதாட்டத்தில் தேர்தலில் ஜெயித்தே பழகிப்போனதால்
சாமான்யனுக்கு இடமில்லை, சாதுர்யங்களுக்கு குறைவில்லை.
மட்டத்தில் இருப்பவனுக்கு உச்சம் செல்ல வழியில்லை,
பள்ளத்தில் தவறி பாதாளம் பாய்கிறவன் மேல் கொஞ்சம் பரிதாபம் மட்டுமே.
கை தூக்கிவிட ஏந்தும் கைகளுக்கு பற்றுமில்லை பரிவுமில்லை
கேட்டால் எங்களாலும் முடியவில்லை, என்ன செய்வது என்றே பார்வை.
"கொடுத்ததெல்லாம் கொடுத்தான் யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான்"
பாடினான், பேசினான், வேறென்ன செய்ய? செயல் வடிவம் இல்லையே!
இன்னும் கனவுகளை குவித்து கண்கள் மூட தூங்க வைப்பவர்கள்
தாயுள்ளங்களாய் தெரிவதாலேயே சமூகம் முடங்கிப்போனது..
"நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்"
என்பதெல்லாம் ஏட்டுச்சுரைக்காய் ஆனது.
அவர் போல் இன்னும் ஆயிரம் வந்தாலும்
ஏழை இன்னும் ஏழையாய் தான் ஆகக்கூடும்.
"திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது - அதை
சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்"
எதுவும் செய்யாமல் நிக்குது.
இந்த நிலை மாற இனியொரு சுதந்திரம் வேண்டும்,
பெற்ற சுதந்திரத்தால் பெரியதாய் ஒன்றும் இங்கு இல்லை,
தந்திரங்கள் கொண்டவர்கள் சட்டங்கள் செய்தவராயினர்
நல்லது இனி செய்ய சுதந்திரத்தை விட தந்திரம் மட்டுமே வேண்டும்.
ஆனால் தந்திரம் செய்கையில் சட்டத்தை மீறாமலிருக்க
வேள்வி செய்ய வேண்டும் அதில் வீணர்களை கொல்ல வேண்டும்.
புண்களாய் குற்றங்கள் அவை புரையோடிப்போகவும் சட்டம் துணை என்றால்
சாத்தியமானது எது சாத்வீகமானது எது
சட்டத்தை கையில் எடுங்கள் சட்டத்தை உடைத்து வீசுங்கள்.
தர்மம் நியாயம் இனி சட்டத்தால் வரப்போவதில்லை என்றால்
சட்டத்தால் இங்கு யாருக்கு லாபம்?
வழிப்பறியும் கொள்ளையும் வழிகளல்ல - எனினும்
ஏகோபத்திய உரிமை ஏற்கனவே பறிபோனது
அதுவே தெரியாமல் போனது ஆனது அதற்கு பரிகாரம் தேடுங்கள்
அப்போது தான் இங்கே நிலை மாறும், நீதி வீடு வந்து சேரும்..!