ஒரு கிராமம் - ஒரு காதல்
அரசாணிப்பூ பூத்திருக்கு, பூசணிப்பூவும் பூத்திருக்கு.
அத்தபெத்த செவப்பழகே, அவரப்பூவும் பூத்திருக்கு.
தலைகுனிஞ்சு நடப்பவளே, தாழம்பூவா நானிருக்கேன்.
தலை நிமிந்து என்னப்பாரு, எம்மனசும் பூக்கட்டுமே...!
தண்ணிக்குள்ள தாமரையா, ஒட்டாம நீயிருக்கே.
தயிருக்குள்ள தவளையாட்டம், எம்மனசு தவிக்குதடி.
ஊரவரைக் கொடியாட்டம், உள்மனசில படர்ந்திருக்கே.
உசுருக்குள்ள உசுராட்டம், பொத்திவெச்சு பார்த்திருக்கேன்.
காத்தில்லாத சைக்கிளப்போல் கெடந்துமனம் தவிச்சிருக்கு
கல்லூரி போகையில காததூரம் நா வரட்டா..?
புதன்கெழமை டவுனுப்பக்கம், மோட்டர் கொண்டு நா வருவேன்.
கல்லூரிப்பக்கம் நா வரட்டா, கம்மல் செயினு நாந் தரட்டா..?
கல்லூரி முடிஞ்சபொறவு, சேர்ந்து நாமும் திரும்பிடலாம்.
காதும் காதும் வெச்சதுபோல் காதலிலே இணைஞ்சிடலாம்.
படிச்ச களைப்பப் போக்க நானும், பக்கத்துல உட்காரவா..?
படிப்பு முடியும் காலம்வரைக்கும், பார்த்தே மனச தேத்திக்கவா..?
நித்தமும் நான் மகிழ்ந்திருக்க, ஒத்த வரியில் பதிலச்சொல்லு
பித்தமும் தான் தெளிஞ்சிடுமே, புதுப்பாட்டும் பொறந்திடுமே.