தமிழ் மொழியில் விளையாடலாம் வாங்க திறனறி விளையாட்டு

பாகம் - 3
தமிழ் மொழியில் மாணவர்களின் திறனை சோதிக்க சில திறனறிவு விளையாட்டுகள்.
(விளையாடலாம் வாங்க)
வழங்குபவர் திருமதி ஸ்ரீ.விஜயலக்‌ஷ்மி
தமிழாசிரியை – கோவை
அலைப்பேசி எண் 9843297197
1. இரு திணையும் வருவது போல் சில வாக்கியங்களை எழுதுக.
(எ.டு) மணி பந்து விளையாடினான்.
இதில் மணி என்பது உயர் திணை. பந்து என்பது அஃறிணை.
இதுபோன்று பல வாக்கியங்களை எழுதிப் பழகுக.

2. மூவிடமும் அமைவது போல் சில வாக்கியங்களை எழுதுக.
(எ.டு) நானும் நீயும் அவனுடன் சேர்ந்து படிக்கலாமா?
இதில் நான் தன்மையிடம். நீ முன்னிலை இடம். அவனுடன் படர்க்கையிடம்.

3. எண் (ஒருமை பன்மை) வருமாறு பல வாக்கியங்களை எழுதிப் பழகுக.
(எ.டு) என்னிடம் இருந்த ஒரு பழத்தை ஐந்து பேருக்குப் பங்கிட்டுக் கொடுத்தேன்.
இதில் ஒரு பழம் என்பது ஒருமை. ஐந்துபேர் என்பது பன்மை.

4. ஐம்பாலும் ஒரே தொடரில் வருமாறு சில வாக்கியங்களை எழுதுக
(எ.டு) முருகனும் அவன் தாயும் கடைவீதிக்குச் சென்றபொழுது, அங்கே அவன் நண்பர்கள் சிலவிலங்குகளையும், ஒரு பறவையையும் வைத்துக்கொண்டு வேடிக்கைக் காட்டிக்கொண்டிருந்தனர்.
இதில் முருகன் – ஆண்பால்
அவன் தாய் – பெண்பால்
நண்பர்கள் – பலர்பால்
பறவை – ஒன்றன்பால்
விலங்குகள் – பலவின்பால்
5. முக்காலமும் ஒரே தொடரில் வருமாறு சில வாக்கியங்களை எழுதுக.
(எ.டு) நான் நேற்று படித்தேன்: இன்று படிக்கின்றேன்: நாளையும் படிப்பேன்.
6. அடுத்து குறில், நெடில், லகரம், ளகரம், ழகரம், நகரம், ணகரம், னகரம் ஆகிய அனைத்தும் ஒரே தொடரில் வருவது போல் விளையாடலாமா?
ஜூட்:
மலர்விழி பள்ளிக்குச் சென்று, ஆசிரியர் கூறும் சீரிய அறிவுரைகளைக் கேட்டு, அவற்றைப் பொன்போல் போற்றி, தன் தந்தைத் தாயிடமும் கூறி மகிழ்ந்தபோது, அவள் தந்தை மணி தன் மகளைப் பற்றி மனதில் மவுனமாய் வியந்ததோடு தன் மனைவி உமாவிடமும் கூறி மகிழ்ந்தார்.
மேற்கூறிய வாக்கியத்தில்,
ம- குறில்
ல – நுனிநா லகரம்
ர்- இடையின ரகரம்
ழி – சிறப்பு ழகரம்
ள் – பொது ளகரம்
செ – குறில் எ ஓசை
ன் – றன்னகரம்
று – வல்லின றகரம்
சி – குறில் இகர ஒலி
கூ – நெடில் ஊ ஒலி
சீ – நெடில் ஈ ஒலி
ரை – ஐகார ஒலி
பொ – குறில் ஒ ஒலி
போ – நெடில் ஓ ஒலி
ந் – தந்நகரம்
ன – றன்னகரம்
ண்- டண்ணகரம்
தா – நெடில் ஆ ஒலி
டு- குறில் உ ஒலி
போன்ற பலவும் ஒருங்கிணைந்து வந்திருப்பதைக் கண்டு மகிழலாம்.
நீங்களும் முயன்று பாருங்களேன். தயாராகிவிட்டீர்களா?
வெற்றி பெற என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
இதுபோன்ற அறிவுப்பூர்வமான விளையாட்டுக்களை மாணவர்களுக்கு அளிக்கும் பொழுது, நேரமும் வீணாகாமல். திறனும் பெறுக வாப்பு ஏற்படுமல்லவா? அன்புப் பெற்றோர்களே நீங்களும் தயார் தானே!
அன்புடன்
திருமதி ஸ்ரீ விஜயலக்‌ஷ்மி.
கோயம்புத்தூர்- 22.
----------------------------------


நன்றி
அன்புடன்,
திருமதி ஸ்ரீ.விஜயலஷ்மி.

எழுதியவர் : திருமதி.ஸ்ரீ. விஜயலக்‌ஷ்ம (8-Jul-16, 9:34 pm)
பார்வை : 568

மேலே