விடியலின் வெளிச்சம் நூல் ஆசிரியர் கவிஞர் இளசை சுந்தரம் வாழ்த்துரை கவிஞர் இரா இரவி

விடியலின் வெளிச்சம் !
நூல் ஆசிரியர் கவிஞர் இளசை சுந்தரம் !
வாழ்த்துரை கவிஞர் இரா .இரவி !
.
இளசையார் கவிதைகள்

உலகம் முழுவதும் பேச்சாற்றலால் வலம் வரும் இளசையாரின் மற்றொரு முகம் கவிஞர் முகம். உள்ளத்தில் உள்ளது கவிதை என்றாலும் வாசகர் உள்ளத்தைத் தொடும் உன்னதக் கவிதைகள். படிக்கும் வாசகர் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்கும் விதமாக வடித்துள்ளார், பாராட்டுக்கள்.

மகாகவி வேடம் அணிந்து கேள்விகள் கேட்க வைத்து, மகாகவி பாரதியார் போலவே பதில் சொல்லும் புதுமை நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் இளசையார். மகாகவி பாரதி வழியிலேயே கவிதையிலும் தனி முத்திரை பதித்துள்ளார். 50 கவிதைகளும் சிறப்பாக உள்ளன. ஒன்றை மற்றோன்று விஞ்சும் விதமாக வடித்துள்ளார். எல்லோருக்கும் புரியும் விதமான மிக எளிய சொற்கள் மூலம் பல வலிய கருத்துக்களை விதைத்து உள்ளார்.

தினமலர், கவிதை உறவு, பாக்யா போன்ற பல்வேறு இதழ்களில் படித்த கவிதைகள் என்றாலும் மொத்தமாக நூலாகப் படித்ததில் கவலைகள் காணாமல் போனது. மனம் மகிழ்ச்சியில் நிறைந்தது.

இயந்திரமயமான உலகில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி வருகின்றனர். அடுக்ககங்களில் மனிதர்கள் நெருக்கமாக வாழ்ந்தாலும் மனதளவில் தொலைதூரத்தில் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றனர். மனிதர்கள் விஞ்ஞான வளர்ச்சியில் எவ்வளவு உச்சம் தொட்டாலும் மனித நேயத்துடன் மனிதாபிமானத்துடன் வாழ வேண்டும் என்ற கருத்தை மிகச்சுருக்கமான வார்த்தைகளுடன் உணர்த்தி உள்ளார் பாருங்கள்.

விஞ்ஞான மனிதன் !

சந்திர மண்டலத்தில்
கால் பதிக்கத் தெரிந்த மனிதனுக்கு
எதிர்வீட்டு இந்திரன் மனதில்
இடம் பிடிக்கத் தெரியவில்லை.

பதச்சோறாக ஒன்று மட்டும் குறிப்பிட்டுள்ளேன். நூலின் உள்ளே சென்று படித்துப் பாருங்கள். உங்கள் மனதில் நல்மாற்றம் திகழும். வாழ்வியல் புரியும். இன்பம் வசமாகும். உலக அளவில் தமிழர்களுக்கு பெருமையை ஈட்டித் தந்த உலகப் பொதுமறை திருக்குறளில் பாடாத பொருள் இல்லை என்பார்கள்.

இந்நூலிலும் பாடாத பொருள் இல்லை எனும் அளவிற்கு பல்வேறு பொருள்களில் பாடி உள்ளார். மாமனிதர் அப்துல் கலாம் பற்றியும் கவிதை உள்ளது. புத்தகம் பற்றி மரம் பற்றி நாக்கு பற்றி இப்படி பல பற்றி பல்வேறு கவிதைகள் வடித்துள்ளார்.

அகில இந்திய வானொலி நிலையத்தின் உயர்பதவியான இயக்குனராக பணியாற்றி ஓய்வுக்குப் பின் ஓய்வின்றி பேச்சு, எழுத்து என்ற இரண்டு துறையிலும் முத்திரை பதித்து வெற்றிக்கொடி நாட்டி வரும் நல்லவர், வல்லவர்.
பல்வேறு விருதுகளும், பாராட்டுகளும் பெற்ற போதும், எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாத இனியவர், எளியவர். சிறந்த சிந்தனையாளர், நேர்மையான அதிகாரி. முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் குறிப்பிடுவது போல இயங்கிக் கொண்டே இருக்கும் மாமனிதர் இளசையார், கவிதையின் மூலம் விடியலின் வெளிச்சம் காட்டி உள்ளார். துன்ப இருள் நீக்கி இன்ப ஒளி தரும் ஒப்பற்ற கவிதை நூல். படித்துப் பாருங்கள், நான் எழுதியது உண்மை என்பதை உணர்வீர்கள்.

.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (8-Jul-16, 5:08 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 241

மேலே