என் வீடு

என் வீடு
நான் தவழ்ந்து வளர்ந்த வீடு..
என் வீட்டின் ஒவ்வொரு பகுதியும்
எனது இணைபிரியா நண்பர்கள்.
என் தாய் என்னை வயிற்றில்
சுமந்ததுபோக,
என் வீட்டின் ஆறு அறைகளும்
என்னை நெஞ்சில் சுமந்தன.
ஆழ்ந்து சிந்தித்தால்..
என் தாய் உள்பட
எனக்கு ஆறு சிற்றன்னைகள்..
கம்பீரத்தைத் தன்னகத்தே
கொண்டு விளங்கும்...
நான் தடுக்கி விழும்
நேரங்களில் எனக்குக்
கரம் கொடுத்து உதவும்...
என் வீட்டுத் தூண்கள்.
கணக்குப் பாடத்தை
நினைவுபடுத்தும் வகையில்
அமைந்திருக்கும்
என் வீட்டு ஏணிப்படிகள்.
பிறருக்கு உதவவேண்டும்
என்னும் பாடத்தைக்
கற்றுத்தரும்
என் வீட்டு மரத்தின் நிழல்...
அனைவருடைய பசியையும்
தகர்த்தெறிந்து
நிம்மதி பெருமூச்சு விட்ட
என் வீட்டு சமையலறை...
என்னைக் காண வந்த
என்னவரை
மறைந்து நின்று
காணுவதற்கு உதவிய
என் வீட்டு சன்னல்...
இவையனைத்தையும்
ஒருபோதும் நான் பிரிய நினைத்ததில்லை...
என் பாட்டி சொல்வார்.
யார் மீது அதிக அன்பு
வைத்திருக்கிறோமோ
அவர்களை இறைவன் தன் வசம்
இழுத்து கொள்வார் என்று!!!
என்னுடைய வீடு
என் மீது அதிக அன்பு
வைத்துவிட்டது!!!
அதுதான்
என்னவர், என்னைத்
தன்வசம் இழுத்துக் கொண்டார் போலும்.....
பிரிய மனமில்லாமல் பிரியும்
நான்....

எழுதியவர் : மு.முருகேஸ் (9-Jul-16, 11:20 pm)
Tanglish : en veedu
பார்வை : 742

மேலே