முதற்காதல்
============
முக்கிமுக்கி சொல்ல முயன்றும் முடியாத
முக்கிய மான முதற்காதல் –சிக்கிக்
கொளும்வார்த்தைச் சிக்கல் சிரமத்தைப் பற்றிக்
கொளும்பருவ முற்றா முனைப்பு.
முதற்காதல் வாழ்க்கையின் முக்கால் பகுதி
இதழோரக் காட்டில் இருந்து – மெதுவாகப்
பாயத் துடிக்கும் பருவ நதியது
நேயக் கடல்சேர் நிலை.
முற்றாக் கனியை முழுதாய்ப் பறித்தற்கு
வற்றா நினைவை வரவழைக்கும் – குற்றாலச்
சாரல் குளித்துக் குளிர்ந்த குதூகலத்தை
சேரத் தவிக்கும் சிலிர்ப்பு.
பேரறியா வேதனை பிஞ்சுள்ளத் தேநுழைய
ஊரறியா நேரம் உறங்காமல் – நேரெதிரே
நின்று நிழலை நிசமென்று நம்பவைத்துச்
சென்றுவிடும் செல்லாதக் காசு
****மெய்யன் நடராஜ்