திருக்குறளும் திருமந்திரமும்-5

திருக்குறளும் திருமந்திரமும்-5.

நாம் வாழும் இந்த பழமையான உலகில், வரலாறு அறிவிக்கும் தொன்மை மிக்க செவ்வியல் மொழிகள் யாவிலும் உள்ள எழுத்துகள் அனைத்தும் தொடங்குவது’அ மற்றும் ’ஆ’ எனும் ஒலி வடிவம் கொண்ட எழுத்துக்கள் ஆகும். . இவற்றை எளிதில் அகரம் மற்றும் ஆகாரம் என்றும் தமிழில் கூறி விடலாம். உலகின் மிகப்பழைய நாகரிகங்கள் ஆகிய குமோவோன், ஃப்பினீஷிய மற்றும் எகிப்திய வரி வடிவ எழுத்துக்களில் இருந்தே உரோமை மற்றும் கிரேக்க எழுத்துக்கள் பரிணாம வளர்ச்சி அடைந்தன. எபிரேய மொழியின் முதல் எழுத்தாகிய ’அலெஃப்’ மற்றும் அடுத்த எழுத்தாகிய ’பெட்’ என்பதில் இருந்தே கிரேக்க அகர வரிசையில் வரும் ஆல்ஃபா மற்றும் பிட்டா ஆகியவற்றை "சேர்த்து வைத்து ”அல்பாபெட்” என்ற ஆங்கிலச் சொல் உருவாகியது எனவும் கூறுவர்.. ஆங்கில எழுத்துக்கள் 26 இல் ஜே, யூ, டபிள்யூ ஆகியவை கிரேக்க மொழியில் இல்லாமல் மொத்தம் 23 எழுத்துக்களே உள்ளன.

உலகின் தொன்மை மிக்க மொழி என தமிழுக்கு அடுத்தபடி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள சமஸ்கிருத மொழியிலும் எழுத்துக்கள் அகர ஆகார வரிசையிலேயே துவங்குகின்றன.சமஸ்கிருதம் என்பதற்கு சேர்த்து வைத்து என்பது பொருள் . இவை தேவ நாகரி வடிவத்தில் அமைந்து உள்ளன. தேவ என்பது இறைவனைக் குறிக்கும் ஆயினும் நாகரி என்பது அகரவரிசை ஒலிவடிவம் ஆகும். இவ்வாறு அகர வரிசையிலே மொழிகள் அனைத்தும் இருப்பதால், இறைவனும் தன்னை, முழுமுதல் கடவுள் என வெளிப்படுத்தி உள்ளதாலேயே, ஆதி என்றும் சோதி என்றும் அவனை அனைவரும் குறிப்பர்.

இறைவன் இவர்தாம் எனச் சுட்டும் திருமந்திரமும், இறைவனின் பெயரைச் சுட்டாத திருக்குறளும், கடவுள் வாழ்த்து பாடுவதால், கடவுளை அவர்கள் எப்படிப் பார்த்தனர் என்பதை நாமும் பார்த்தல் அவசியம் ஆகிறது. ஏனெனில், திருக்குறளும், திருமந்திரமும், சைவத் திருமுறை நூல்களும் ஆகிய இவற்றை சாத்திர நூலாசிரியர் பலரும் சொற்பொருட் சோதனைக்குச் சிறந்த மேற்கோளாகக் கொண்டு எடுத்துக் காட்டுவர் என்று கூறும் அருட்பிரகாசர்.

“நிலையாம் புலமைகொள் வள்ளுவர் மூலர் நிகழ்த்துசைவத்
தலையாய மூவர் திருவாத ஊரர் தருதமிழுள்”

நாம் இ|றைவனைக் காணலாம் என்பதுடன் சொற்பொருட் சோதனையும் செய்யலாம் என்பார்


இதனையே நமது தமிழ் மூதாட்டி ஒளவையோவெனில்,

“தேவர் குறளும்திரு நான் மறை முடியும்
மூவர் தமிழும் முனி மொழியும்-கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகமென் றுணர்”

என்று தானெழுதிய நல்வழியில் பாராட்டிக் கூறுவார்.

மேலும், திருக்குறள், திருவாசகம், திருமந்திரம், சிவஞானபோதம் ஆகியவற்றின் தனிப்பெருஞ் சிறப்பினை,

“வேதம் பசுவதன்பால் மெய்யா கமம் நால்வர்
ஓதும் தமிழதனின் உள்ளுறுநெய்—போதமிகு
நெய்யின் உறுசுவையாம் நீள்வெண்ணெய் மெய்கண்டான்
செய்தமிழ் நூலின் திறம்“.

என்று போற்றும் பழந்தமிழ் பாடல் ஒன்றும் உளது.

இறைவன் ஆதியில் இருந்தவன், ஆதியும் அந்தமும் அற்றவன் என்றுதான் அனைத்து சமயங்களும் எடுத்து இயம்புகின்றன. .திருவாசகத்தில், 125 ஆம் பாடலில்,

ஆதி மூர்த்திகளுக்கு அருள்புரிந்து அருளிய
தேவ தேவன் திருப்பெயர் ஆகவும்
இருள கடிந்து அருளிய இன்ப ஊர்தி
அருளிய பெருமை அருள் மலையாகவும்
எப்பெருந்தமையும் எவ்வெவர் தி|றமும்

என ஆதியில் இருந்த கடவுள் போற்றப்படுகிறார். திருவாசகத்தில் திருவண்டப் பகுதியில் 55ஆம் பாடலில்

“அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க” என வருகிறது.

தேவாரத்தில், திருவெண்டுறையில் 3.61.1 இல்

”ஆதியன் ஆதிரை யன்னாலாடிய ஆரழகன்”

என்றும் குறிக்கப்பெற்றுள்ள கடவுள் ஆதியிலே இருந்தவர்.

திருவிவிலியத்தின் முதல் வார்த்தையே "ஆதியில்" எனத் தொடங்குகிறது. அதில் திருவெளிப்பாட்டு நூல் 1:8, இல் கடவுள், தம்மை வெளிப்படுத்தும்போது, “அகரமும் னகரமும் நானே, முதலும் முடிவும் நானே, இருந்தவரும், இருக்கிறவரும், இருக்கப் போகிறவரும் நானே” எனக் கூறியதாக உள்ளது.,

ஆதியாய் நின்ற வறிவு முதலெழுத்
தோதிய நூலின் பயன்”.
என்று ஒளவை குறள், பிறப்பினிலைமை யில் சொல்லுவதும் காண்கிறோம்

. இவ்வாறு கடவுள் ஆதியும் அந்தமும் அற்றவர் என்பதைக் குறிக்க எத்தனையோ வார்த்தைகள் இருக்க, ஒரு மொழியின் முதல் எழுத்தையும் இறுதி எழுத்தையும் உபயோகித்துக் கூறுவதால், அந்த கூற்று தெள்ளிதின் விளங்கும் என்பதாலேயே, திருவள்ளுவர்

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு” (திருக்குறள்-1)

என்று கடவுள் வாழ்த்தில் முதல் பாடலாக அமைத்து உள்ளார். இதற்கு எ|ளிமையான பொருள் கூறுவோமெனில், தமிழில் எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டவை போல் உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் கடவுளை முதலாகக் கொண்டுள்ளன. என்று கூறிடலாம். கடவுளை யார் என்றும், அவரது பெயரும் சொல்லாத திருவள்ளுவர் இவ்வாறு சொல்வதாலேயே, அவர் யாத்த நூல் உலகப் பொதுமறை ஆகியது.

இந்தக் குறளுக்கு பரிமேலழகரின் உரை என்னவென்று கண்டோமெனில்”எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது”.)


சைவ சித்தாந்தம் பேசும் திருமந்திரத்தில், அகரமாகிய சிவன் எல்லாவற்றுக்கும் முதலாய் எல்லாவற்றோடும் கலந்து இருப்பதுடன், உகாரமாகிய சக்தி எல்லாவற்றுக்கும் முதலாய் அவை உயிர் பெற்று நிற்க உதவும் எனக் கூறப்பட்டுள்ளது. ’அகாரம்’ சிவன் என்றும், ’உகாரம்’ சக்தி என்றும் நாம் அறிந்தால், அகார உகாரங்களே சிவலிங்க வடிவம் என்பதும் நமக்கு விளங்கும். இவ்வாறு சிவனும் சக்தியும் சேர்ந்த நிலையே, சதாசிவம் என்பதைக் கூறப் போந்த திருமூலர்,

ஆரும் அறியார் அகார மவனென்று
பாரு முகாரம் பரந்திட்ட நாயகி
தாரம் இரண்டுந் தரணி முழுதுமாய்
மாறி யெழுந்திடும் ஓசை யதாமே (திருமந்திரம் 1751)

இதனை விளக்க முற்படும் உரையாசிரியர் பலரும் பின்வருமாறு விளக்கம் கூறுவர். மேதா கலையாகிய ’அகரத்தை’ சிவம் என்று எவரும் அறிய மாட்டார். அர்க்கீசக் கலையாகிய ’உகர’த்தால் குறிக்கப்படும் சக்தி எல்லாப்பொருளிடத்தும் கலந்து நிற்பதாகும். இவ்விதமாய் சிவமும் சக்தியும் பொருந்தி உலகமாய், சிவசக்தி, சிரசைத் தாண்டினபோது, நாத ஒலி உண்டாகும்படி செய்தது என்று கூறுவார்.

இறைவனையே எண்ணிக் கொண்டு இருப்போர்க்கு’சிந்தை வேறு சிவன் வேறு இல்லை” என்பது ஆகிவந்த பழமொழி ஆகும். இத்தகைய சாத்திரம் பேசும் மெய்கண்ட நூல்கள் எல்லாம், சதாசிவம் ஆகிய சிவனை சதா சிந்திப்பவரது உள்ளத்தில் சிவன் வெளிப்படுவான். சிவஞானத்தால் தெளிவடைந்த ஞானியர்க்கு அவர்களது எண்ணத்திலேயே சிவன் சிறந்து விளங்குவான் என்பதே அவர்களது நம்பிக்கை.

இறைவனே ஆதியும் அந்தமும் ஆனவன். உணர்வும் அவனே. அவ்வுணர்வு வெளிப்படும் உயிராகவும் இருப்பவன். ஓர் உயிரும் மற்றொரு உயிரும் புணரும்படி செய்பவனும் அவனே. அவை பிணங்கும்படி செய்பவனும் அவனே என்பதால் மனித அறிவிற்கு அப்பாற்பட்டவராய் இருக்கிறான்.. எனவே, எல்லாவற்றிற்கும் அவனே ஆதாரமாய் இருக்கின்றார். இதனை அகரம் அவனே, உகரம் அவனே என்றும் கூறலாம். இக்கருத்தைக் கூற வந்த திருமூலர்,

”அகார முதலா யனைத்துமாய் நிற்கும்
உகார முதலா யுயிர்ப்பெய்து நிற்கும்
அகார வுகாரம் இரண்டும் அறியில்
அகார வுகாரம் இலிங்க மதாமே” (திருமந்திரம் 1753)

என்று விளக்குவார்.

திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அருளிய சிவஞானபோதம் மேற்கண்ட இக்கருத்தை,


மனம் ஆதியால் உணர்தல் மன்னு புலன்கள்
மனம் ஆதி மன்புனலின் அல்லன் –மனமேல்
உதித்து ஒன்றை உள்ளம் உணர்தன் அதனில்
உதிக்கும் கடல் திரையை ஒத்து (23)

என்றும்

அகாரம்உகாரம் அகங்காரம் பற்றி
மகரம் மனம் சித்தம் விந்து—பகாது இவற்றை
நாதம் உளவடிவாம் நாடில் பிரணவமாம்
போதம் கடற்றிரையே போன்று. (25)

என்றும்

உமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயனில் பதிமுது நிலை .1இல்

அகர உயிர்போல் அறிவாகி எங்கும்
நிகரில் இறை நிற்கும் நிறைந்து(. 1)

என்றும் இருப்பதோடு இறைவன் உலகினைப் படைப்பவனாகவும், அழிப்பவனாகவும், உடலைக் காத்து மாற்றம்செய்பவனாகவும் , அவற்றைக் கடந்து நிறைந்து விளங்கினான். திருவருள் சோதியாகவும், குவிதல் இல்லாத இயல்போடு ஊழைச் செலுத்தும் என்றும் அழியாத தன்மையோடும் உள்ளான் என்பதை,

ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே. 15 (திருமந்திரம்)

என்பதுடன் நில்லாமல், மூலாதாரத்தில் உள்ள உருத்திரனும், நீலமணி போன்ற வண்ணத்தையுடைய திருமாலும், சிருட்டிக்குக் காரணமாயுள்ள சுவாதிட்டான மலரில் இருக்கும் பிரமனும், ஆராயுமிடத்து இம்மூவரும் தொடர்பினால் ஒருவரே என்று துணிய மாட்டாராய்வேறு வேறாகக் கருதி உலகவர் மாறுபட்டுப் பேசுகின்றார்களே, என்னே இவர்களது அறியாமை. எனும் பொருளில்,

ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார்
பேதித் துலகம் பிணங்குகின் றார்களே. 104. (திருமந்திரம்)

என்றும் கூறுவார் திருமூலதேவ நாயனார்.

இத்தகைய இறைவனை நாம் தொழாமல் இருப்பது எத்தகைய மூடத்தனம் எனக் கூற வந்த வள்ளுவர், மீண்டும் கடவுள் வாழ்த்தில் அமைத்த இரண்டாம் பாடல்,

“கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனெனின்”

என்பதாகும்.

பள்ளிப் படிப்பு கூட இல்லாதவர் எல்லாம் இக்காலத்தில், இறைவனை விட தங்களுக்கு மிகுந்த மனித நேயமும் இரக்கமும் இருப்பதாக பறை சாற்றிக் கொண்டு, ஊடகங்களில் குறிப்பாக சமூக ஊடகங்களில், பேரிடர் நேரிடும் போதெலாம், அந்த கடவுள் எங்கே போனார் என்றும், அந்த ஆளைப் பார்த்தால், நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி நாலு கேள்வி கேட்க வேண்டும் என்றெல்லாம் கூறி வருவதை படிக்கிறோம். தங்களைத் தாங்களே பெரும் மேதாவிகள் என எண்ணிக் கொள்கின்ற சில கிணற்றுத் தவளைத் தமிழ்க் கவிஞர்கள், கடவுளைக் கிண்டல் செய்து கவிதைகள் வடித்து, அதற்கு விருப்பம் தெரிவிப்போரை நண்பர்கள் ஆக்கிக் கொண்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதையும் பார்க்கிறோம்.

தூய அறிவினை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவர்களுக்குக் கற்ற கல்வியினால் உண்டான பயன் என்ன என்ற வள்ளுவப் பெருந்தகையின் இந்தக் குறள், அறிவு என ஒன்று இருந்தால் அதன் ஆதாரமாகிய தூய அறிவுடை கடவுளை வணங்க வேண்டும் என கன்னத்தில் அறைவது போல் எடுத்துக் கூறுகிறது.

இந்தக் கருத்தைக் கூறவந்த திருமந்திரம்,


“ஆதிப் பி்ரான் அமரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
ஓதி உணரவல் லோம் என்பர் உள்நின்ற
சோதி நடத்தும் தொடர்வறி யாரே” (திருமந்திரம்-319)

இதற்குப் பொருள் என்னவென கண்டோமெனில், எல்லோருக்கும் தலைவன் ஆகிய முதல்வன் தேவர்க்கும் மங்காத ஒளியாய் திகழ்கின்றான், அவனே, ஒளிபெற்ற அடியார் நாடும் பெரிய கடவளாயும் இருக்கின்றான். அப்பெரியவனை கற்றறிந்து விடுவோம் என்று கூறுபவர்கள் அவர்களுக்கு உள்ளேயே இருக்கின்ற சோதி எவ்வாறு அவர்களை நடத்திக் கொண்டு இருக்கிறது என்பதனை அறியாதவர்கள் ஆவர்.

எழுதியவர் : தா. ஜோ ஜூலியஸ் (15-Jul-16, 1:30 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 568

மேலே