அவளின் உலகில்
தேவதைகளின் உலகில் அவள்
தனித்திருந்தாள்
காலம் வருமுன் வலிந்து
அனுப்பப்பட்டதால்
அவள் தனித்திருந்தாள்
பூமியின்
ஒவ்வொரு பிணைப்புகளையும்
அறுத்து எறிந்தவளாக
அவள் மகிழ்ச்சியோடு இருந்தாள்
பந்த பாசங்களை துறந்து
பறந்து சென்ற
பட்சியாக
அவள் நிம்மதியோடு இருந்தாள்
சத்தங்கள் சலசலப்புக்கள்
சகிக்கவேண்டிய சந்தர்ப்பங்கள்
இல்லாத பேருலகில்
தன் இறக்கைகளை விரித்திருந்தாள்
அம்பறாத்தூணியின்
சீண்டல்கள் தீண்டாத
பேரண்டப் பெருவெளியில்
நாம் சந்தித்துக் கொண்ட
கனவுப் பெருந்தோட்டத்தில்
சம்பாசித்துக் கொண்டோம்
மகிழ்ச்சியின் சாரலில்
தொற்றிக்கொண்ட சந்தோசத்தால்
கட்டிக் கொண்டோம்
கங்காருவின் குட்டிகளாய்
விட்டுப்போன காலத்தை
தொட்டுக் கொண்ட மகிழ்ச்சியில்
அழுகைகளும் சிரிப்புகளும்
சகாராவின் நீரூற்றுக்களாய்
மீண்டுமொருமுறை அவளும் நானும்
மீண்டுமொருமுறை நானும் அவளும்
பரிமாறிக்கொண்டோம் பல
ஞாபகங்களை
குடும்பம் என்ற கூட்டில்
சேர்ந்திருந்திருந்த காலத்தை
கயவர்களின் கல்லெறியில்
கலைந்து போன கோலத்தை
கனவுப் பெருந்தோட்டத்தின்
கடைக்கோடி வாயிலில்
மீண்டுமொருமுறை கட்டிக்கொண்டோம்
நாம் கங்காருவின் குட்டிகளாய்
இறுதி ஊர்வலத்தின் கடைசிப்
பிரார்த்தனைபோல்
அப்போது அவள் கேட்டாள்
இப்போதும் பூமியில்
சத்தங்கள் கேட்கிறதா?