களி நடனம் புரியும் மங்கை நதி
எப்போதும் நடந்தும் ஓடியுமே
பழகிப்போன நங்கை நதிக்கு
சற்றே குதித்து மேலும் கீழும்
அசைந்து தாம் தை தாம் தை
என்று அபிநயம் புரிந்திட ஆசை வந்தது
பச்சைமாமலை மடியில் உதித்த அவள்
சற்றே செங்குத்தாய் பாய்ந்தால் கீழே
கரடு முரடாம் மலைப் பாதை அது
அபிநயம் புரிய நாடக மேடையாய் ஆயிற்று
தீம் தீம் தரன தீம் தரன என்று துரிதமாய்
தில்லானா ஆடினாள் அவள்
அவள் பின்னே அரங்கத்தை
ஒளி மயமாக்கினான்
இள மாலைக் கதிரோன்
வண்ண வான வில் கீழ்
இறங்கியதோ என்றவாறு
அபிநயக்கும் நதி நங்கைக்கு
குடையாய் மாறி எழில் தந்தது
இரவும் வந்தது கதிரோன் மறைந்தான்
இப்போது மலை அரங்கில் ஒளி பரப்ப
வந்து விட்டான் தண் மதி முழு மதி
நதி நிறுத்தா நடனம் புரிய திட்டமிட
தொடர்ந்தது அவள் நாட்டிய பயணம்
நீர் வீழ்ச்சி என்று இதை நாம்
குறையாய்க் கூறலாமா
நீர் எழுச்சி எனலாமா
நடனமல்லவோ அவளாட்டம் !