ஒரு நோயாளியின் டயரி

மருந்துகளின் வெப்பத்தில்
மிருதுவாகிறது மனம்
குரங்கொன்றாகித் தாவிச்
செல்கிறது மரத்துக்கு மரம்
மருத்துவரும் செவிலியரும்
மந்திரிக்க முடியாத
கீழ் மனதின் இந்தத் துடிப்பு
காய புண்ணின் வலியையும்
காய படுத்தாமல் தடவிச் செல்கிறது
..............................................................
அநேகமாக அந்த ஆஸ்பத்திரியில் நூறு படுக்கைகள் இருக்கும். சிலவற்றில் மட்டும் அறைகளில் வசதி படைத்தவர்களுக்காக குளிர் சாதனம் பொருத்தப்பட்டு தனியே இருந்தது.பெரும்பாலான படுக்கைகள் பொது வராந்தா என்ற முறையில் பத்தமாகவும் இருப்பதாகவும் அடுக்ககடுக்காக இருந்தது.

ராமையாய் பிள்ளையும் அப்படிப்பட்ட பொது வராந்தா படுக்கை ஒன்றில் இருந்தார். அவருக்கு காலில் புண்வந்து நடக்க முடியாமல் தத்திதத்தி வந்து போன வாரம் இங்கு வந்து சேர்ந்தார் . அவரை யார் இங்குவந்து சேர்த்தார்கள் ,அவருக்கு யாரும் உறவினர்கள் உண்டா என்றால் விடை இல்லை என்றுதான் கிடைக்கும்.

மணி ஒன்பது அடித்து ஓய்ந்தது .டூட்டி நர்ஸுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பரபரத்துப் போய் நோயாளிகளை பார்த்துவிட்டு வந்து தங்கள் மேசைக்கு வந்து தலைகவிழ்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தார்கள்.வராந்தாவிலுள்ள பெரும்பாலான விளக்குகள் அணைக்கப் பட்டு விட்டன .ராத்திரி வேளைக்கான மாத்திரைகளை போட்டு தண்ணீர் குடித்து விட்டு ராமையாப்பிள்ளையும் படுக்கையில் சாய்ந்தார் .கண்கள் சொருகியது....
.....................................
.........................................
அது அநேகமாக பொங்கல் நாளாகவோ அல்லது பொங்கலின் மறுநாளாகவோ இருக்கும்.எல்லோரும் கையில் துண்டு கரும்புகளைக் கடித்துக் கொண்டு புதிய வேட்டி சட்டை சீலைகள் பரபரக்க ராமையாய் பிள்ளையைக் கடந்து சென்றார்கள்.அவரும் புது வேட்டி சட்டையுடன் கையில் புதிய வாட்சுடனும் அந்த ஒற்றை யடிப் பாதையில் நடந்து கொண்டிருந்தார் .அது ஒரு கடற்கரைப் பகுதி ..அந்த ஒற்றையடிப் பகுதி கடந்து அப்புறம் வரும் பள்ளம் வந்தால் கடற்கரை தென்படும் .கரையில் மணல்கள் பனியை விதைத்தது போல் அவ்வளவு வெள்ளையாக இருக்கும்...எல்லோரும் அங்கதான் போய்க்கொண்டிருக்கிறார்கள்.பள்ளத்து கரையில் வரிசையாகபனைமரங்கள் சலசலத்துக் கொண்டிருந்தன.கடல் நீர் அரித்து அரித்து எல்லா மரத்தின் வேர்களும் ..மரத்தின் மூட்டுகளும் அவித்து போட்ட பெண்ணின் கூந்தல் தலையாக காட்சி தெரிந்தது.
ராமையாபிள்ளை அந்த சரிவைக்கடந்து குறுக்குச் சால் கரையில் நடந்து கொண்டிருந்தவர் ஒருகணம் ஸ்தம்பித்து பின்வாங்கி ஓடினார் .ஒரு மிகப் பெரிய சத்தம் ...அந்த பள்ளம் ..எல்லா பனை மரங்களும் சரிந்து கடல் நீர் முற்றிலும் சூழ்ந்தது சுனாமி என்பார்களோ அது இதுதானோ ...முன்புறம் நடந்தவர்கள் எழுப்பிய மயானக் குரல்கள் சிறிது நேரத்தில் அடங்கி நீரில் பிணங்கள் மிதக்க ஆரம்பித்தன.கண்ணெதிரேயே ஒரு விபத்தைப் பார்த்த அதிர்ச்சியில் மூழ்கிய ராமையா தன் வாட்சைப் பார்த்தார் ...அது நின்று போய் 8.09 என்று காண்பித்தது.
.................................................
...............................................
யாரோ இருமும் சத்தமும் ,பக்கத்து படுக்கைக்காரர் விட்ட குறட்டைச் சத்தமும் இரவின் அமைதியைக் கிழித்தன .ராமையாப்பிள்ளை எழுந்து பாட்டிலிருந்து கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு புரண்டு படுத்தார் .இரவு டூட்டி டாக்டரும் நர்ஸும் தூக்கம் வராமலிருக்க ஏதோ ஊர் கதைகள் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
.....................................................
....................................................

அந்த ஊருக்கு ராமையாப்பிள்ளை வந்ததிலிருந்து ஊர் மக்களுக்கெல்லாம் ஒரே சந்தோசம்... தபால் காரர்களாக எத்தனையோ பேர் வந்த போதும் இவருக்கு கிடைத்த மரியாதை எவருக்கும் கிடைக்கவில்லை....எல்லாம் அவருடைய வேலையின் மீது இருந்த பக்தி.ஒரு சைக்கிள் வண்டியில் முன்புறம் ஒரு பையைத் தொங்கவிட்டு ,பின்பக்கம் ஏகப்பட்ட தபால் கவர்களை பிளாஸ்டிக் தாளில் பொதிந்து சைக்கிள் கேரியர் இல் வைத்துக் கொண்டு ஒருநாள் கூட தாமதிக்காமல் அவர் ஆற்றுகின்ற சேவையை பாராட்டாமல் இருக்க முடியாது .
போனமாதம் பெய்த மழையில் முட்டி அளவு தேங்கிய நீரிலும் தாமதிக்காமல் தபால்களை ஒழுங்காக கொண்டு போய்ச் சேர்த்தார்.
``என்ன அய்யா மழை விட்டு தண்ணீர் வற்றிய பிறகு கொண்டுபோய் கொடுக்கலாமே என்று ஒருவர் கேட்டதற்கு பெரிய லெக்ட்ஷரையே நடத்தி விட்டார் ராமையாய் பிள்ளை.

``அப்படி இல்லை அய்யா. எவ்வளவு முக்கியமான கடிதமோ ,எவ்வளவு மதிப்பு மிக்க செய்தியை தாங்கியதோ யார் கண்டார்கள்''

``காலா காலத்தில் அது உரியவர்களுக்கு போய்ச் சேர்ந்தால் தானே அதன் மகத்துவம் விளங்கும்.''

``தாமதிக்கிற ஒவ்வொரு நொடியும் ஒரு பேரிழப்பாக கூட இருக்கலாம் அல்லவா .
மழையோ வெயிலோ அன்றாடம் நாம் பார்ப்பதுதான் ..ஆனால் கடுதாசிகள் தாங்கி வரும் செய்திகளை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியுமா'' -என்று பேசுவார் .....

இப்போதெல்லாம் யாராவது மணி ஆர்டர் அனுப்பினால் உடனே அவர் கைக்கு வந்து சேர்ந்து விடுகிறது.....பென்ஷன் காரர்களுக்கு ராமையாப் பிள்ளை ஒரு சொர்க்கம் மாதிரி..கைக்கு காசு முன்னை மாதிரி அலைச்சல் இல்லாமல் பட்டுன்னு கிடைத்து விடுகிறது.சும்மாவா அரசாங்கம் அவருக்கு நாட்டின் சிறந்த தபால் தலை ஊழியர் பட்டம் கொடுத்து கவுரவித்தது.....

அதற்கேற்றாய் போல போன வாரம் அவர் வீட்டில் அவருடைய மகள் ருதுவான விசேஷத்துக்கு ஊர்க்காரங்க கூட்டம் கூட்டம் வந்து சீர் செய்து விட்டுப் போனார்கள் ....ஆனாலும் அந்தநிகழ்ச்சியிலும் அவருடைய சொந்தக்காரங்க வந்திருந்தாங்களா என்றால் கொஞ்சம் சந்தேகமே.
.........................................
........................................

ராமய்யா ...ராமய்யா ..எழுந்திருங்க...டாக்டர் ரவுண்ட்ஸ் வ்ருகிற நேரமாச்சு....எவ்வளவு நேரமா எழுப்புவது....கண் முழிச்சிகிட்டயே இருக்கு ஆனா தூங்குறீன்க..பெட் ஷீட் துணியை சீர் பண்ணனும் என்று நர்ஸு பக்கத்தில் கொடுத்த சத்தத்தில் தபால்கார ராமையாப்பிள்ளையும் சுனாமி கண்ட ராமையாவும் காணாமல் போய் அரக்கப் பரக்க எழுந்தார் கால் புண்ணுக்கு பெட்டில் சேர்ந்துள்ள நிச ஒய்வு பெற்ற வாத்தியார் ராமையா.

எழுதியவர் : சுசீந்திரன். (2016) (22-Jul-16, 5:11 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 294

மேலே