புறாக்களின் கனவில் உன் நிலாக்கள் திறக்கின்றன

மறுஜென்மம் இத்தனை
சீக்கிரத்தில்....
இரண்டாவது ஜன்னலிலும்
எட்டிப் பார்க்கிறாய்...
-----------------------------------------------
வீதிச் சண்டைக்கு
சமாதானப் புறா...
வேடிக்கை பார்க்கும் நீ....
-----------------------------------------------
குளக்கரையில் அமர்ந்திருக்கிறாய்
பின்பக்க காட்சியில் கோயிலோடு
ஓவியமாகிறது அந்நாள்....
------------------------------------------------------
கல்யாணி தோடி
காம்போதி சஹானா
தன்யாசி இன்னும் இருக்கும்
அத்தனையுடன் இனி
உன் பெயரும்....
----------------------------------------------------------
தேயிலைத் தோட்டத்தில்
வேலை செய்கிறாய்
ஏதேன் தோட்டமென
ஊருக்குள் பேச்சு
------------------------------------------------------
மழை விட்ட பிறகு
மெல்ல எட்டிப் பார்க்கிறாய்...
மீண்டும் மழை
----------------------------------------------------------
வரலாறு படிப்பதாக
சொன்னாய்- ஆம்
வரலாறு படிக்கிறது...
----------------------------------------------------------
ஊரே படபடக்கிறது
காற்றுடன் கூடிய பலத்த மழையில்
கொடியில் நனையும் உன் ஆடை....
----------------------------------------------------------
காலனி விழாவில்
உன் நாட்டியம்
உலகமே நாட்டிய மேடை...
---------------------------------------------------------------
இருமுறை தவிக்கிறது
ஒருமுறை கண்ட
கண்கள்....
--------------------------------------------------------------
கவிஜி