கவலை இல்லாதவர்
![](https://eluthu.com/images/loading.gif)
கவலை இல்லாதவர்!
@@@@@@@@@@@@@@@@
“அம்மா, தாயே”
வாய் வலிக்கக் கூவு
பழகிப் போய்விடும்
கால்கடுக்க நடப்பதும்.
பலவீட்டு சாப்பாடு
பலவித ருசிகள்
எந்தவித வரியுமில்லை
கிடைக்கின்ற காசுமிச்சம்!
அடுத்த நாள்பற்றி
கவலையே இல்லை!
வெயிலுக்கு மரங்கள்
மழை நேரம் திண்ணைகள்!
இதர நாட்களில்
நடைபாதை இல்லங்கள்!
சுதந்திர வாழ்க்கை
அச்சம் சிறிதுமில்லை!
முதலாளி யாருமில்லை
சட்ட திட்டம் ஏதுமில்லை!
பார்ப்பவர் எமையெல்லாம்
இழிந்தவராய் நினைத்தாலும்
பட்டினி எமக்கில்லை!
மீதத்தைத் தெருநாய்க்கு
போடுகின்ற வள்ளல்கள்!
வாக்குரிமை வேண்டாத
இந்நாட்டுக் குடிமக்கள்!
தேர்தல்கள் பற்றியொரு
அக்கறையும் இல்லாதார்!
யார் ஆண்டால் என்ன?
எவமாண்டால் எமக்கென்ன?
விலைவாசி யாருக்கு?
ஏழைக்குத் தானே!
நடுத்தர வர்க்கமும்
பாதிக்கப் படலாம்!
இரவலராம் நாங்கள்
ஏழையும் இல்லை
நடுத்தரமும் இல்லை!
ஆனாலும் எமக்கு
தொல்லையெ இல்ல!
“பிச்சைக் காரர்களாம்”
பச்சையாய்ச் சொல்கின்றார்!
சொல்லட்டும் சொல்லட்டும்
பிச்சையிட்டால் சரிதானே!
பிச்சையிடும் அவர்தானே
சம்பள நாளுக்கு
தவமிருந்து காத்திருப்பார்!
நாள்தோறும் சம்பளநாள்;
வேலைநாள் விடுமுறைநாள்
எல்லாமே ஒன்றுதான்.
எமக்கில்லை பேதம்
எமக்கில்லை மதமெல்லாம்
சாதியும் எமக்கில்லை!
எதற்காகக் கடவுள்?
எமக்கது தேவையில்லை!
திருவிழா நாட்களில்
எமக்குத்தான் கொண்டாட்டம்!
பலவீட்டுப் பலகாரங்கள்
எம்தட்டில் விழுமே
அதைவிட எமக்கு
வேறொன்றும் தேவையில்லை!
வாழ்க்கை இனிக்கிறது
கட்டுப்பா(டு) இல்லாமல்
உலாவரும் எமக்கெல்லாம்!
(புதுவைக்குரல் செப்டம்பர் 1983)
கீழே உள்ள குறிப்பு இன்று சேர்க்கப்பட்டது)
• இரவலர்களின் நிலை மாறிவிட்டது.
•
• அவர்கள் சூடான உணவைக் கொடுத்தாலும் ஏற்கமாட்டார்.
• அவர்களுக்குத் தேவை காசு. பாதையோர உணவங்களில் அவர்களுக்குவேண்டிய உணவு வகைகளை வாங்கி உண்கிறார்கள்.
• திருவிழா நாட்களில் மட்டும் வீடுகளுக்கு வந்து பலகார வகைகளைப் பெற்றுச்செல்கிறார்கள்.
• ஒரு சிலர்தான் இரப்பதற்கு வீடுகளுக்கு வருகிறார்கள். பெரும்பாலொர் வழிப்பாட்டுத்தலஙகள், உழவர் சந்தை, மக்கள் வழக்கமாகக் கூடும் அங்காடித் தெருக்கள், தொடர்வண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில்தான் இவர்கள் ‘வசூல் ராசாக்கள்”.
• சென்னையில் 1973-75ல் நான் முதுகலை மாணவனாக இருந்தபோது ஒரு மூதாட்டி இரவலர் பனகல் பார்க் அருகே நின்றிருந்தார். என்னிடம் அவர் காசு கேட்டார். நான் 10 பைசா கொடுத்தேன். அதைப்பெற்ற அவர் “நாலணாவது (25 பைசா) கொடு” ” என்றார். ‘உனக்கு நான் காசு கொடுத்ததே தவறு” என்றேன். உடனே அவர் “இந்தா, இந்த 10 பைசாவை நீயே வச்சுக்க” என்று சொன்னார். நான் வேகமாக அந்த இடத்தைவிட்டு சென்றுவிட்டேன். அந்த காலக்கட்டத்தில் தற்போது 5 ரூபாய்க்கு விற்கப்படும் பெரிய பச்சை வாழைப் பழத்தை 5 பைசாவுக்கு வாங்கலாம்.
• இன்று பல இரவலர்கள் சொந்த வீடுகளில் வாழ்ந்து கொண்டு பிச்சை எடுப்பதைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். அரசு ஊழியர்களுக்கும் வட்டிக்கு கடன் கொடுக்கும் இரவலர் ஒருவரைப் பற்றி 1980களில் நாளிதழ்களில் கண்டேன். அவர் நடைபாதையில் தனிமரமாக வாழ்ந்தவர். அவர் பல பழைய சாக்குப் பைகளை விரித்துப் போட்டு அமர்ந்திருப்பார். அவர் இருந்த இடம் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு அருகிலிருந்த நடைபாதை. அவர் இறந்தபின்னே அந்தச் சாக்குப் பைகளுக்கு அடியில் சுமார் 20,000/- ரூபாய் இருந்தாகத் தகவல்.