போர் வாள்

அடியே சூர்யா
எதுவுமே நிலையில்லா
வாழ்க்கை இது
நாளையே உனக்கு
பிடித்தாற் போல் மாறலாம்
அடுத்த நாளே அதுவும்
மாறலாம்
உன் மனதில்
உள்ள தைரியத்தை
மட்டும் விட்டுவிடாதே
எதையும்
சாதித்து விடலாம்
அது இருந்தால்
அதோடு நாங்கள்
எல்லோரும்
உனக்கு பக்க பலமாய்
இருக்கிறோம்
மேலே ஏறு
கீழே பார்க்காமல்
யார் நிஜம்
யார் நிழல்
தெரியா உலகமிது
கண்ணை திறந்து வை
நேற்று தவழ்ந்தோம்
இன்று நடக்கிறோம்
நாளை ஓடவேண்டும்
காட்டில்
மிருகங்கள்
கண்ணிற்கு தெரியும்
நாட்டில்
மிருகங்கள்
யாருக்குத் தெரியும்
பாட்டால் தான்
நான் இன்னும்
பாரினில் வாழ்கிறேன்
இல்லையெனில்
என்றோ
பாடையில் வைத்திருப்பார்கள்
தாய் தான்
என் தாயகம்
அவள் மடியில்
சொர்க்கத்தை
காண்கிறேன்
தாயும்
இசையும்
இல்லை என்றால்
நான் என்னாவேன்
அந்த கணமே
இல்லாமல் போவேன்
கடுகு
சிறுத்தாலும்
காரம் குறையாது
சங்கு சுட்டாலும்
வெண்மை தரும்
அதுபோல்
நீ எப்படி இருக்கிறாய்
என்பது முக்கியமல்ல
எப்படி வரப்போகிறாய்
என்பதே முக்கியம்
ஓர் இராணுவ வீரன் போல்
உலகெனும் போர்க்களத்தில் நேருக்கு நேர் நில்
உயிர் உள்ளவரைக்கும்
போராடு
வீரோடு
கடைசி மூச்சிருக்கும் வரைக்கும்
கொன்று குவி உன் எதிரியை
கடைசி சொட்டு
உதிரமும் சொல்லட்டும்
நீ வீரதமிழச்சி என்று
உனை வாரி அணைத்த
மார்பினில்
பால் சொரிய
உன்னை ஊட்டி வளர்த்த தாய்
அப்பொழுது தான்
அகம் குளிர்வாள்
உன்னை தூற்றியவர்களிடத்தில்
உன்னை போற்றிய
தாயின் பூரிப்பை
அவள் கண்ணில் காண்பாய்
உன்னை தூக்கிவிட்ட
தோள்கள் என்று
ஒன்றிருந்தால்
அது நிச்சயம்
உன் அன்னையின்
தோள்கள் தான்
அவளுக்கு
என்ன செய்ய போகிறாய் என்பதை
வார்த்தையில் அல்ல
வாழ்க்கையில் வாழ்ந்துகாட்டு
உலகம் ஓட்டபந்தயம்
என்பார்கள்
ஓட்டபந்தயம் தான்
உலகம் அழகானது
என்பார்கள்
அழகானது தான்
உலகம் அற்புதமானது
என்பார்கள்
அற்புதமானது தான்
உலகம் சோகங்கள் நிறைந்தது
என்பார்கள்
ஆம் சோகங்கள்
நிறைந்தது தான்
உலகம்
நாம் சொல்லும்
எல்லா கோட்பாடுகளுக்குள்ளும் வரும்
அப்படி வந்தால் தான் அது உலகம்
இந்த உலகத்தை
நீ எப்படி பார்க்கப்போகிறாய்
என்பது தான்
உன் தேடல்
உன் வாழ்வின் பொருள்
எரியும் தீபம்
எப்பொழுதும்
மேல்நோக்கி தான்
எரியும்
ஓடும் நீர்
எப்பொழுதும்
கீழ்நோக்கி தான்
ஓடும்
இரண்டும் சேர்ந்தால்
அணைந்து தான் போகும்
எரியும் தீபமாய் இரு
ஓடும் நீராய் இரு
கடவுள்
இருக்கிறதா
இல்லையா
என்ற ஆராய்ச்சி
விடுத்து
உன் நம்பிக்கை தான்
கடவுள் என்பதை நம்பிவிடு
தமிழ் நாளை
இறந்துவிடுமென்றால்
நான் இன்றே
இறந்திடுவேன்
என்று சொன்ன பாரதிதாசன் போல்
நாளை என் தைரியம்
சாகும் என்றால்
நான் இன்றே
இறந்திடுவேன்
என்றே வாழ்.....
நாளை வாடிடும்
என்பதற்காக
இன்று பூக்கள் மலராமல் இல்லை
நேற்றைய பூக்கள்
இன்றைய பூவிடம்
சொன்னது
~பிரபாவதி வீரமுத்து