உறுதியுடன் உள்ளே வா
கவிஞர் பலர் உருவாகக்
கருப்பொருளாய் அமைந்தவளே!
நிஜத்தின் நிலையான செல்வமே!
உலகின் உணர்வுப்பூர்வமான அதிசயமே!
உண்மையை உரைக்கும் உயர்ந்தவளே!
என்னையும் கவிஞனாய் வளர்த்தவளே!
என் தவறுகளைத் திருத்திய தமிழ்த்தாயே!!
காலத்தின் பயணத்தில்
உன்னை ஒவ்வொருவரும்
ஒரு ரயில் சிநேகிதியாய் நினைத்து
விட்டுவிடுகிறார்கள் போலும்...
இப்படியே போனால்...
உன்னை என்றாவது செய்துவிடுவார்கள் பங்கு.
அதற்கு முன் வந்து நீ எங்களோடு தங்கு.
பூக்களைப்
பூட்டியிருக்கும்
பூட்டைத் திறக்கும் சாவியுடன்
உள்ளங்களைத் திறக்கும் சாவியையும்
உன் கையில் எடுத்து வா!
வாசம் வீசியே
வண்டுக்குத் தூதனுப்பும்
வனிதையர்களுடன்
வண்ணத்தமிழ் பாட்டொன்றைப்
பாடி வா!
சிறுகதையாய்
சிறுத்துப்போன உனது
சிறப்பை
மெகா சீரியலாய்
தொடர்ந்திட நீ வா!
பூமியையே
பரவசப்படுத்தும் உனது
புன்சிரிப்பை
எங்கள் உதடுகளில்
பதிக்க வா!
செயற்கையான துன்பத்தை
இயற்கையான இன்பமாய் மாற்ற உன்
பொற்கையை நீட்டி வா!
நாணயம் இல்லாதவரின்
நா நயம் தெரியாதவரின்
நாவறுக்க நீ வா!
தொழில் வளர்ச்சியின்
நெற்றியைத் தொட வரும்பும் தமிழனுக்கு
நீ வெற்றியைக் கொண்டு வா!
அன்னை மொழியை விட்டு
அந்நிய மொழியைக் கற்று - உன்னை
அலட்சியம் செய்யும் மூடர்களுக்கு நீ வந்து வை ஒரு முற்று.
தாயைப் பழித்தாலும்
தண்ணீரைப் பழிக்கக்கூடாது.
- இது பழமொழி.
தண்ணீரைப் பழித்தாலும்
தமிழைப் பழிக்கக்கூடாது.
- இது புதுமொழி.