பெத்த மனசு பித்து

இக்கவிதை என் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓர் உண்மை நிகழ்வைத் தழுவிப் பதிவிடப்பட்டுள்ளது...
என் வாழ்க்கைப் புத்தகத்தில் இது ஒரு கருப்புப் பக்கம்.. ஏன் கருகிய பக்கம் என்றே சொல்லலாம்...

தன்னை விட்டுச் சென்ற உறவை வெட்டிச் சென்ற அருமை மகளின் பிரிவைத் தாளாமல் நிற்கும்
ஓர் எளிய நடுத்தர வர்க்க தாய் தந்தையர் சோகத்தின் உச்சத்தில் கூவும் ஓலக்குரல்

பொட்ட புள்ள பொறந்துருச்சே
பொன்னு பொருளு சேத்து வெச்சு
சீர் செனத்தி செய்யணுமேனு
சொந்தோ பந்தோ சலசலக்க
கள்ளிப்பாலு கலந்து குடுத்து
கருவறுக்க சொன்னாங்க செல்லக்கன்னு...

யார் என்ன சொன்னலு
ஊர் உலகோ எதுத்தாலு
ஏ முத்துமணி நீதானேனு
நெத்தியில முத்தம் வச்ச
பெத்த மனசு நொந்துருச்சே செல்லக்கன்னு...

கேலி செஞ்சு ஊரெல்லா சிரிச்சாலு
ஏ கண்ணுமணி கலகலன்னு நீ சிரிக்க
கோமாளி வேசமோன்னு நா போட்டு வந்தேனே செல்லக்கன்னு...
கடைசியில ஏமாளியு ஆனேனே செல்லக்கன்னு...

வேசமெல்லா வெளுத்தலு
பூ வாசமெல்லா தீந்தாலு
உம்மேல நா வச்ச பாசமட்டு கொறையலயே செல்லக்கன்னு...
நீ மட்டுஉ விட்டுபுட்டு தாலி ஒன்னு கட்டிக்கிட்டு
ஏ கண்ணு ரெண்ட கொத்திக்கிட்டு
கனா காண போயிட்டியே செல்லக்கன்னு...
ஏ கானாவெல்லா நீ தானே செல்லக்கன்னு...

தொப்புள்கொடி உறவுஎல்லா சட்டுனுதா பட்டுனுனே அந்துருச்சே...
சாயாத ஆலமரம் தொப்புனுதா விழுந்துருச்சே...
ஊரெல்லா பேருகெட்டு காரி துப்பும்படி ஆகிருச்சே செல்லக்கன்னு...

பொத்திப் பொத்தி வெச்ச பாசம்
வாச தாண்டி போயிருச்சே...
பாத்து பாத்து வளத்த நேசம்
நாசமாக்கி நசுக்கிடுச்சே...
பூட்டி பூட்டி வச்ச மானம்
காத்துலதா பறந்துருச்சே...
ஊட்டி ஊட்டி வச்ச சாதம்
சாம்பலாவே போயிருச்சோ செல்லக்கன்னு...

வீட்டு ஓடு பொத்துச்சுனா ஓட்டையிலதா
மழத்தண்ணி வழிஞ்சுடுமே...
இங்க மனசொன்னு பொளந்துருச்சே
கண்ணுலதா ரத்த வெள்ளோ பொத்துக்கிட்டு ஊத்துதம்மா செல்லக்கன்னு...

உனக்காக புடுச்சு வெச்ச மூச்சுக்காத்துஉ
என்ன புடிக்கலன்னு நிக்குதம்மா ஏ செல்லக்கன்னு...

உனக்காக உள்ளுக்குள்ள துடுச்சு நின்ன
ஒத்த உசுர மொத்தமாவே அத்துக்கிட்டு போயிட்டியே செல்லக்கன்னு...
நீ கேட்டிருந்த யோசிக்காம ஏ ஒடம்ப கூட வெட்டியெடுத்து
உசுர கையிலயே குடுத்திருப்பேனே செல்லக்கன்னு...

பத்து மாசோ சுமந்து பெத்த
பட்ட மரம் போல நின்ன
பத்து பாத்திரோ தேச்சாலு
உன்ன பத்திரமாத்து தங்கமாட்டோ
பத்திரமா பாத்துக்கிட்ட ஊ ஆத்தாவு
பாதி செத்து கெடையிலதா கெடக்காளே செல்லக்கன்னு...

ஊ ஆத்தா ஊட்டுன தாய்ப்பாலு
ஊ ஒடம்புக்குள்ள செவப்பாறா ஓடலையோ செல்லக்கன்னு...

அதுல நஞ்சு கொஞ்சோ கலந்துருச்சோ
ஊ நெஞ்சு கொஞ்சோ கலங்களையோ
பாசோ கொஞ்சங்கூட மிஞ்சலையோ
ஊ நெஞ்சுக்குழி ஈரோ மொத்தோ காஞ்சுருச்சோ செல்லக்கன்னு...

நாயங் கேக்க நாதியின்னு சாதி இல்ல
ஏ சோகோ சொல்ல சொந்தோமின்னு யாருமில்ல
விதி செஞ்ச சதிதானேனு
கதிகெட்டு நிக்குறம்மா செல்லக்கன்னு...

பாசோ வெச்சு மோசோ போயி
வாடி நின்ன தாடியோட தெருக்கோடியில...

தெய்வமின்னு ஒன்னிருந்தா
கோடி வருஷோ நீடூழி நீ வாழ
நா வேண்டிக்குவ உனக்காக

குத்தோங் கோற வெச்சிருந்தா
குத்தமின்னு நீ நெனச்சா
குத்தியிரா நாங்கெடக்க
பெத்த மக மடியிலேயே
சித்த நேரோ தலசாஞ்சே செத்திடனு...

ஏ கன்னுக்குட்டி ஊ கையால
ஏ கண்ணு ரெண்ட மூடிடனு செல்லக்கன்னு...

இது மட்டு நடந்துதுனா ஏ கட்ட நல்லா வெந்திடுமே
செல்லக்கன்னு...

அனைத்து உடன்பிறவா சகோதர சகோதரிகளுக்கும் ஓர் பெரிய வேண்டுகோள்

நம்மை ஈன்றெடுத்த தாய் தந்தைக்கு நாம் பெருமை சேர்க்கவிட்டாலும்
அவர்கள் மனம் நோகும்படி நடந்துகொள்ள வேண்டாம்...
நமக்காவே ஒவ்வொன்றயும் பார்த்துப் பார்த்து செய்யும்
அவர்களை அழவைத்துவிட்டு நாம் வாழ்வில் தழைக்க முடியாது...
முடிந்தவரை அவர்களை அன்போடு மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்ளுங்கள்..

அன்பைத்தேடி எங்கும் அலைய தேவையில்லை...
அது நம் அன்னையின் அரவணைப்பிலும்
தந்தையின் கண்டிப்பிலும் கூட உணரலாம் என்றென்றும்...

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை...
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை...

இந்த வேத வாக்கை மறவாதீர்...

நன்றி,
ச.சதீஸ்குமார் அமுதவேணி

எழுதியவர் : (31-Jul-16, 4:49 pm)
பார்வை : 98

மேலே