என்னை ஆளாக்கிய அன்னை

கருவறையில் எனைவைத்து கருத்தோடு காத்திருந்தாய்
உருவாக்கி உணவூட்டி உலகத்தில் தவழவிட்டாய்.

நோவுற்று எனைவளர்த்து நோயின்றி பார்த்திருந்தாய்.
தாயாகி எனைஎன்றும் சேயெனவே நினைக்கின்றாய்

துடிக்கின்ற வேதனையில் தவிக்கின்ற உளமோடு
தரைஇறக்கித் தாயென்று தனியான பெயரெடுத்தாய்.

துடிக்க உனை வைத்தபோதும் துயரமென எண்ணாமல்
ஈன்றெடுத்த உந்தனுக்கு ஈடு இணை ஏதுண்டு !

தெய்வமதும் உண்டுஎன தவறாமல் நம்பியவர்
தெய்வமெனக் கண்டதுவும் தாயான உனையன்றோ?

நோயுற்று நொந்தபோது ஓயாது நோன்பிருந்து
உறங்காமல் எனைக்காத்த உறவன்றோ தாய்நீயும்.

தரணியிலே தாய்நீயும் இல்லாது போய்விட்டால்
உரம்பெற்று என்றென்றும் தழைத்திடுமோ இவ்வுலகம்.

கேட்டபொருள் எந்தனுக்கு கொடுக்காது இருந்தபோது
திட்டிஉனைத் தட்டிவிட்டேன் அறியாது செய்தபிழை
அநியாயம் இல்லையென அன்போடு எனைஅணைத்து
ஆதரவாய் என்னோடு எந்நாளும் நீஇருந்தாய்.

படிக்கின்ற காலமதில் பொழுதோடு நான்எழவே
புலராத பொழுதோடும் கண்விழித்து துணையிருந்தாய்.
பிடிக்கின்ற உணவெல்லாம் பரிவோடு நீஆக்கி
பக்கத்தில் இருந்தெனக்கு பசியாற ஊட்டிவிட்டாய்.

பொறுப்பின்றி நானலைந்து நடுஇரவில் வந்தபோதும்
பொறுப்போடு எனைஅழைத்து விருப்போடு பசியாற்றி
கருத்தோடு காத்தஉனை உடலோடு உயிரதுவும்
ஒட்டிவரும் காலம்வரை ஒருகணமும் மறந்திடாமல்
உணர்ந்திங்கு நானிருப்பேன் உண்மையிது நம்பிடுவாய்.

********************************************

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (1-Aug-16, 1:22 pm)
பார்வை : 356

மேலே