தமிழ் மகள் இன்னும் அழகாவாள்

ஒப்பிலா அழகிதான் தமிழ் மகள்!
அவள் இன்னும் அழகாக வேண்டாமா ?
வேண்டும் ! நடக்குமா ?
நடக்கும் !
எப்படி?
ஆம்!
வளர்ச்சி காணும் எதுவுமே
அழகு கூடும் தானே!
தமிழ் வளர வளர
தமிழ் மகள் அழகு கூடுவாள் !
தமிழர் நம் ஆதரவோடுதானே
தமிழ் வளரும் !
வளர்ப்பது எப்படி?

பனை ஓலைச் சுவடிகளை நினைவிருக்கிறதா?
மூத்த தலைமுறையினரில் நினைத்தோரும் சிலர் !
இளைய தலைமுறையினரில் அறிந்தோரே சிலர் !
ஆன்றோர்கள்
தமிழில்
காவியம், இலக்கியமும்
சாஸ்திரம், மருத்துவமும்
பனை ஓலைச் சுவடிகளில்தான் எழுதினர்
.
தமிழ் மகளின் அழகைக் காக்க
அவள் வாழும் ஓலைகளில்
மஞ்சளை அரைத்து பூசி .
கிருமிகளைத் துரத்தி.
அழியாமல் காத்தனர்!

பத்தொன்பதாம் நூற்றாண்டில்
பாரதத்தை
ஆங்கிலேயர் ஆள்கையிலே
அச்சு நூல் பதிப்பு
தமிழில் இல்லை!
தமிழ் ---
பனை ஓலைகளில் வாழ்ந்தது.
பனை ஓலைத் தமிழ் நூல்கள்
படிப்பாரும் அன்றில்லை!
பாதுக்கப்பாரும் இல்லை!
அப்போதுதான்
சரியான சமயத்தில்
தமிழ் தாத்தா
உ வே சாமிநாதன்
தோன்றினார்!

பனை ஓலை நூல்களை
அச்சு நூல்களாய்
பதிப்பிட எண்ணிய
தமிழ் தாத்தா
தமிழ் ஆதீனங்களில்
தேடி அலைந்தார்
ஓலைச் சுவடிகளை! .
கண்டெடுத்தார்! பதிப்பித்தார்!
அப்போது ஒரு முறை
தமிழ் மகள்
கொள்ளை அழகு கூடினாள்!

ஆம்!
ஓலை சுவடிகளிலிருந்து
சங்கநூல்கள் பதிப்பித்தார்!
தமிழ் மகள் வதனம்
தங்கமாய் மின்னியது!

இலக்கண நூல்கள் பதிப்பித்தார்!
அழகின் இலக்கணமாய்
ஒளிர்ந்தாள் தமிழ் மகள்!

திருவிளையாடல் பதிப்பித்தார்!
படித்த தமிழ் நேசர்கள்
முத்தமிழோடும்
விளையாடத் துவங்கினர்!
மகிழ்ச்சியில் பிரகாசித்தாள்!

மணிமேகலை பதிப்பித்தார்!
தமிழ் அமுத சுரபி தந்தாள்!
இளங்கோ தந்த
சிலம்பொலியும் கேட்க வைத்தார்!
தன்னை
இன்றும் நினைவூட்டும்
நிரந்தர ஒலியானாள்!

இன்று நாம்
கணனியில் அச்சடித்த
தரமிக்க தாள்களில்
எழுத்துக்களை காண்பதால்
ஓலைச் சுவடிகளை
இளக்காரமாக பார்க்கிறோம்!

தவறு! மரியாதையுடன் பார்ப்போம்!
பயனுள்ள நூல்கள்
மதிப்பிற்குரிய நூல்கள்
பதிப்பிற்குரிய நூல்கள்
ஓலைகளில் இருக்கும் !
தமிழ் ஓலைச் சுவடிகளை
எங்கேனும் கண்டால்
பயபக்தியோடு
கண்ணில் ஒற்றிக் கொண்டு
உலகத் தமிழ் ஆராய்ச்சி
நிறுவனத்தில் கொடுப்போம்
கடமை உணர்வோடு!
நிறுவனம் சுத்தம் செய்து
ஆய்வாளர்களிடம் கொடுப்பர்!
ஆய்வுகள் முடிந்ததும்
நூல்களாய் பதிப்பிட்டால்
தமிழ் மேலும் வளரும்!
அதாவது
அழகிய தமிழ் மகள்
இன்னும் அழகாவாள்!
அழகிய தமிழ் மகள் வாழ்க! – அவள்
அழகு அனுதினமும் வளர்க!

எழுதியவர் : ம கைலாஸ் (3-Aug-16, 4:55 pm)
பார்வை : 177

மேலே