என் வீடு

பொருட்கள் சிதறி,
கலைந்த அழகான வீட்டில்
நுழைந்ததும்,

"சின்னவனே" வந்துவிட்டாயா? அடுப்படியில்
இருந்து பூத்திருக்கும் ஒருகுரல்!!!
காலடி ஓசைகொண்டே பேர்சொல்லும்
தந்திரம் அறிந்தவள், நிதம்
நித்தம் புதுராகத்தில் அழைத்திடுவாள்
என் அன்னை!!!

உணவு கடை விரித்து வைப்பாள்
இன்பம் துன்பம் பிரித்து வைப்பாள்
இன்பம் மட்டும் பகிர்ந்து வைப்பதால்
இவள் அன்னம்!!!

தோலுக்கு மேல் வளர்ந்தவன்
தோழனென, தோள்மேல் கையிட்டு
தோழனே தோற்கும் அளவுக்கு
தோழமை பாராட்டும் - என் தந்தை!!!

இல்லாததையே என்றும் கேட்டாலும்
இல் லென்று சொல்லாதவன்
இதழ்களில் சோகம் மறைப்பதினால்
இவன் இறைவன்!!!

கால்சட்டையோ, கைகுட்டையோ பகிர்ந்து கொள்வான்
இன்பமோ துன்பமோ வினவி செல்வான்,
உண்டோ இல்லையோ கொடுத்து நகர்வான்
நன்றோ தீதோ அறிவுறுத்தி வளர்த்தான்
இவன் தமயன்!!!

எனக்கென்ன வேண்டுமென அறிந்தவன்
முகம் பார்த்து மனநிலை புரிந்தவன்
குரல் கேட்டே என்னிலை சொல்பவன்
இவன் ஞானி!!!

என் பிஞ்சு கரங்களை அதிகம் ரசித்தவன்
பஞ்சு மேனியென போற்றி வளர்ந்தவள்
பருவமடைந்தும் மாடி கிடத்தி தாலாட்டியவள்
தலைவாரி பொட்டிட்டு அழகு பார்த்தவள்
என் தமக்கை

பத்துமாதம் சுமக்க வில்லையெனினும்
பத்து விரல்கள் என்றும் காத்திருக்கும்
பனித்துளி கண்களில் சிந்தினால்
இன்னொரு அன்னை!!!

எம்,
சண்டைகளை தலையணையில் சிதறிய
****** பஞ்சு சில்லுகள் கூறட்டும்...
பேச்சின் வன்மை தன்மையை
****** சுவர்களின் அணுக்கள் எடுத்துரைக்கட்டும்...
சிநேக உணர்வுகளை உண்ட,
****** பறந்த தட்டுக்கள் கூறட்டும் ...
சிந்தனை ஆராய்ச்சிகளை உடைந்த
****** சிந்திய சுவடுகள் எடுத்துரைக்கட்டும்...

என்றும்,
இனிப்பு அண்ணனுக்கு
காரம் எனக்கு
பலநேரம்,
தட்டு கழுவும்
சுகம் மட்டும்
தமக்கைக்கு...
இருந்தும் சிரித்திடுவாள்!!!
இருவரையும் அணைத்திடுவாள்!!!

உணவு உண்ண அமர்ந்தாள்,
வீட்டில் ஒருவகையேனும்
பலவகை கிண்ணங்களிருக்கும்,
பக்கத்துக்கு வீடு
எதிர் வீடு
அக்கா கொடுத்தது
மாமா கொணர்ந்தது
பாட்டி சமைத்தது!!!

பொருள்
உடைந்தாலோ சிதறினாலோ
சில குரல்கள் கேட்கும்.

உடைத்துவிட்டாயா ? உடைத்துவிட்டாயா ?
இரு இரு சொல்கிறேன் - ஒரு குரல்,
ஓ? ஏஏஏஏன் உடைத்தாய்,
இங்கு கை நீளும் அடிக்கமாட்டாள்,
கண்களின் நிறம் மட்டும் மாறும் - இன்னொரு குரல்,
உடைத்து என்ன கற்றாய்?
அமைதியை மற்றொரு குரல்
கடைசி குரலுக்கு பதில் சொல்ல ஆரம்பிக்க ,
முதல் குரலுக்குரியவன் பாராட்டி அணைப்பான்
தமக்கை சுவடுகளை துடைத்து முடிப்பாள்!!!

ஆறு சுவர்கள்,
ஐந்து நபர்கள்,
சில பொருட்கள்
நிரம்பிய வீட்டில்
காற்று புகும் அணுவெல்லாம்
அன்பை கொண்டு நிரம்பியிருக்க,
அன்பை
சுவாசிக்கிறேன்
நேசிக்கிறேன்
உணர்கிறேன்
வளர்கிறேன்
பகிர்கிறேன்!!!!

குறிப்பு: என் குடும்பமே எனக்கு வீடு!

எழுதியவர் : நவீன் குமார் ரா (5-Aug-16, 10:19 am)
சேர்த்தது : ரா நவீன் குமார்
Tanglish : en veedu
பார்வை : 1187

மேலே