ஓரவிழிப் பார்வையிலே

உயிர் நரம்புகள் வழியே
மின்சாரம் பாயவிட்டு
சலனமற்றுக் கிடக்கும்
வாலிப மனங்களில்
ஏற்றிவைக்கிறது சிகப்பு விளக்கை
உன் ஓரவிழிப்பார்வை

காலியாய்க் கிடந்த
காகிதங்கள் எங்கிலும்
காமத்தின் பூக்கள் மலர
காரணம் செய்கிறது அது

கட்டாந்தரையாய்க் கிடக்கும்
காணி நிலமெங்கும்
வெள்ளாமை நடாத்த விரும்பி அழைக்கும்
ஓரவிழிப்பார்வையிலே
விளைச்சல்கள் தவிர்க்கப்படுவனவாக

ஒருநாள் பிழைப்புக்கு
ஊதியம் தேடுதலான ஆயுதமாகிடும்
ஓரவிழிப்பார்வையிலே
ஒரு குடும்பத்தின் வரலாற்றில்
கறைபடிந்து போகிறது

குடும்பஸ்தன் மாத சம்பளத்தின்
ஒருபகுதியை ஒதுக்கீடு கேட்கும்
ஓரவிழிப்பார்வையிலே
அரை வயிற்றுப் பசியோடு
பிள்ளைக் குட்டிகள் மாதம்
முழுவதும் தவிக்கின்றன

தெருவோர ஓரவிழிப்பர்வையிலே
பரவுகின்ற பரவசத்தில்
பிரசவமாகும் இச்சைகளை
வீட்டுக்குள்ளும் எடுத்து வந்து விடுகின்றன
பாலியல் தொற்று.

வாழ்க்கை நிலத்தை
சத்தமின்றி வந்தே புரட்டிப்போடும்
சுனாமியாகும் ஓரவிழிப்பார்வையிலே
உத்தமர்களின் விலாசங்கள்
மறைந்து போகின்றது

அனாதகைளை உற்பத்தி செய்யும்
ஆலையின் வாசற்படியாக நின்று
அழைப்பு விடுக்கும்
ஓரவிழிப்பார்வையிலே
பாவங்கள் வாங்கிக் கொள்ளும்
பாமரர்கள் ஏராளம்.

தன்மானம் விற்று
அவமானம் வாங்கும்
பொதுச்சந்தையின் நுழைவாயிலாம்
ஓரவிழிப்பார்வையிலே
விலைமதிப்பற்ற பலர் வாழ்வு
விலையற்றதாகிறதே

ஓரவிழிப்பார்வையிலே
நேற்றுகள் உருவாக்கிவிட்டனக் காவியங்கள்
இன்றுகள் உருவாக்குவதோ
உயிர்வாழ்வை அரிக்கும் கறையான்கள்
*மெய்யன் நடராஜ்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (9-Aug-16, 2:05 am)
பார்வை : 405

சிறந்த கவிதைகள்

மேலே