பாசக்கயிறு
வெகுளி புன்னகையோடு
நனைந்து சிலிர்த்த
என் தேகத்தை
முந்தானையால் துடைத்துக்கொண்டே
உன் விளையாட்டுக்குணம் இன்னும்
உன்னை விட்டு போகவில்லையென்று
தலையில் குட்டும் அம்மா........
போதும் உன் அதட்டல்
இந்தாம்மா சுட சுட காஃபீ
உடம்புக்கு இதமா இருக்கும்
என்று கரிசனத்தை சுட சுட
என் வயிற்றுக்குள் அனுப்பும் அப்பா......
போதும் உங்க பாசமழை பரிமாறல்
ஹச் ஹச்ன்னு தும்பி
என் ராத்தூக்கத்தை கெடுக்கப்போகுது
இந்த ராட்சசி என்று
என் கைக்குள்ளே ஒரு பிஸ்கட் துண்டை
அனாயசமாக நுழைக்கும் குட்டி தம்பி.....
கீச் கீச் என சத்தம்போட்டுக்கொண்டே
என் கட்டைவிரலை பாசத்தின்
பரிணாமத்தில் முகர்ந்து பார்த்து
தூக்க சொல்லும் வெள்ளைநிற பப்பி.......
இத்தனையும் கடந்து வந்து
அறைக்குள் நுழைந்தால் ரிங் ரிங்.........
"என்னமா மழைல நனைஞ்சியாமே
உன்னை கவனிச்சிக்கவே மாட்டியா
இனி மழையில் நனைய கூடாது" என்று
போனில் ஒலித்த அக்காவின்
எச்சரிப்பு வார்த்தைகள்.......
ஓவென்று சத்தம் வராமலே
சில மணித்துளிகள் அழுது முடித்துவிட்டு
எடுத்து பார்த்தேன்
டாக்டர் குடுத்த ரிப்போர்ட்டை
என் வாழ்க்கையின் நாள்கெடு
நெருங்கிவிட்டதென்று அதில் சிரித்தது
எமனின் பாசக்கயிறு........