கடத்தப்பட்ட காற்றுக் குட்டி

சிறுமியின் விரல்கள்
வலை நீட்டிக் காத்திருக்க
ஊதியக் காற்றின்
கால் பிடித்திழுத்து
உருட்டியது நீர்த்தகடு !
மேகம் நீந்தும் வானம்
தன் மேல் விழுந்ததும்
சூரிய ஒளி குடித்து
வானவில் உடுத்தி
வெட்கிச் சிரித்தது !
அச்சிறுமியின் விழிகளில்
நிறைந்து நிற்கையில்
பிறவிப்பயன் கண்ட
உணர்வு விரவி - தமனி
தாண்டி ஓடுகையில்...
மூர்ச்சையாகி விடுவோமென
அஞ்சி - மூக்கை நீட்டி
நீர்ப் போர்வை கிழித்து
மூச்சிரைக்க ஓடி வருகிறது
கடத்தப்பட்ட காற்றுக் குட்டி !
வினோதன்