தக்காளி சட்டினி

தக்காளி சட்டினி தமிழருக்கு வேடிக்கை
தளராது செய்வது வீட்டிலும் வாடிக்கை
சிரிக்க வைத்திட்ட வசனமே ஆனாலும்
சிந்திக்கவும் செய்தது சிலரின் செய்கை !
தக்காளி வைத்து சட்டினி செய்யலாம்
சட்டினி வைத்து தக்காளி செய்யலமா
இரத்தம் வழிந்தால் தக்காளி சட்டினி
சட்டினி வழிந்தால் இரத்தம் இல்லை !
கவிதை தலைப்பு நகைப்பும் ஆனது
நகைப்புக்குக் கூறியது நமக்கே வந்தது
கவியுலக சோலையில் கருவாக ஆனது
கவிதை உருவாக போட்டியும் பிறந்தது !
எழுத்தால் மோதிட்டு எண்ணத்தை பதித்து
கருத்தால் போரிட்டு மறுத்தால் வாதிட்டு
கற்பனையை ஓடவிட்டு கவிதை பதிவிட்டு
காத்துள்ள இளவெட்டு கண்கள் விழித்திட்டு !
பலருக்குத் தோன்றும் விதவிதம் சிந்தையில்
சிலருக்கு சிதறிடும் சிறுமூளையும் உதறிடும்
சிந்தனையும் மாறிடும் நிந்தனையும் செய்யும்
வந்தனம் சொல்கிறேன் வரவேற்பும் அளிப்பீர் !
கதையிலா கவிதையிது சதையிலா உடலிது
கதகதக்கும் நெஞ்சமிது கதையளக்கும் இடமிது
புரியாமல் எழுதி புரிந்திடவும் முயற்சிக்கிறேன்
தவறென நினைத்து தள்ளிடவும் நினைக்காதீர் !
நகைச்சுவை என்பதால் அறுசுவை கலந்தேன்
அறுவை என்றெண்ணி அறுவடை செய்யாதீர்
நாடோடிக் கவிஞனுக்கு பாட்டெழுத கருவெதற்கு
நானுமொரு வகைதான் நாநயம் உள்ளவன்தான் !
வடிவேலின் வரிகளே அடியேனுக்கு உதவியது
கடியென்று நினைத்து அடியொன்று தந்திடாதீர்
மாறுபட்ட கோணத்தில் வேறுபட்டு எழுதினேன்
முடிவென்பது முடிவில் முடிந்தபின் அறிவேன் !
( நகைச்சுவையாக எழுத வேண்டும் என்பதால்
எந்தவித விதியும் கோட்பாடுமின்றி எழுதினேன் )
பழனி குமார்