வாழ்வின் சாட்சி

வண்ணப்பூக்களின்
இடையில்
சிறகசைக்கிறது பட்டாம்பூச்சிகள்...

இயற்கையின் சாட்சியாய்...!

என் இதயத்தோட்டத்தில்
சிறகசைக்கிறது எப்போதும்
உன் நினைவுகள்..

பயிர்களின் சாட்சியாய்...!

தனிமையின் வெறுமையில்
தளர்ந்துபோகின்ற
நினைவுகள் எல்லாம்
உன் பார்வைக் குவியங்களில்
உற்சாகமடைகின்றன...

காதலின் சாட்சியாய்....!

எது நாகரீகம் என்று புரியாத
அநாகரீகக் குழப்பங்களில்
நாடே மாறி நிற்கையில்
நீ மட்டும் பண்பட்ட
என் தமிழ் பண்பாட்டுச்சின்னமாய்
தனித்தே தெரிகிறாய்...

என் உயிரின் சாட்சியாய்..!

இறுக்கமான
இதயப் பூகோளத்தில்
நாமிருவரும்
அட்ச இரேகை, தீர்க்க இரேகையாய்
குறுக்கு நெடுக்கான
ஆதாரக் கோட்டில்
கலந்தே இருப்போம்

ஆயுள் இரேகை சாட்சியாய்...1

விரசமில்லா இதயக் கலப்பில்
வேதங்களின்
வாழ்த்தொலி விரவல்கள்...
விசாலமான நம்
தொலைநோக்குப் பார்வையில்
நினைவுகளின் தேரேறி
வலம் வருகின்றன...

வெற்றியின் சாட்சியாய்...!

இதயங்களை மாற்றிக்கொண்ட
அந்த தருணங்களை
நினைத்தபடி
இருவரும்
மாலை மாற்றிக்கொள்வோம்
நமைப்பெற்றவர்களின்
முன்னிலையில்...

அவர்களது
மகிழ்ச்சியின் சாட்சியாய்...!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (12-Aug-16, 2:51 pm)
Tanglish : vaazhvin saatchi
பார்வை : 220

மேலே