பல விகற்ப இன்னிசை வெண்பா வைகறையில் கண்விழித்து கவிதையும் கட்டுரையும்

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

வைகறையில் கண்விழித்து வாசலில் கோலமிட்டு
கோலமகள் வாவென்பாள் மாதவன் தாசியை
தாசியைப் போற்றியும் பாடிடுவான் கம்பனும்
கேட்டகாசு தந்து விடின்

(மாதவன் தாசி = லட்சுமி தேவி
தாசி = எல்லோராலும் விரும்பப்படுபவள் என்றோர் பொருள் உளது).

பொன்னி என்றொரு தாசியின் கண்வீச்சில், தன்னை இழந்த கம்பன், ஓர் பொழுதில் அவளுடன் மகிழ்ந்திருக்க, கைமாறாக பொன்னிக்கு ஏதேனும் தரவேண்டுமென்றதோர் ஆவலில், "என்ன வேண்டும், கேள், தருகிறேன்" என்றாராம். அதற்கு, ஓர் ஓலையில் "தாசி பொன்னிக்கு கம்பன் அடிமை" என எழுதித்தாருங்கள்" என்றாளாம். கம்பனும் அவ்வாறே செய்ய, கம்பன் கைப்பட எழுதிய அவ்வோலையை சோழமன்னனிடம் கொடுக்க, கம்பனின் செருக்கை அடக்க நினைத்த மன்னன், அவையில், அது உண்மைதானா என்று வினவ, சற்றும் வெட்கப்படாமல் கம்பன், உண்மைதான் என்று கூறி, "மன்னா, தமிழ் மிகவும் நுணுக்கமான மொழி. தமிழில் "தாசி" என்பதற்கு " எல்லோரும் விரும்பத்தக்க" என்கிற பொருளும் உண்டு. "பொன்னி" என்பது கலைமகளுக்கு மற்றொரு பெயர். "எல்லோரும் விரும்பத்தக்க சரஸ்வதிக்கு கம்பன் அடிமை" என்றுதான் எழுதித்தந்துள்ளேன் . எடுத்துரைத்தானாம்.

இதுபோல், ஒருநாள் ஔவையார் "சிலம்பி" என்ற தாசியின் வீட்டின் திண்ணையில் அமர்ந்து ஓய்வெடுத்திருக்க, அங்கிருப்பது ஔவையார் என்றறியாத சிலம்பி, தான் குடிப்பதற்காக வைத்திருந்த கூழைக் கொணர்ந்து ஔவையாருக்குக் கொடுத்தாள். ஔவையார் அந்த வீட்டின் சுவற்றில் கரிக்கட்டியினால் எழுதியிருந்த இரண்டு வரிகள் "தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே
மண்ணாவதுஞ் சோழ மண்டலமே" என்றெழுதியிருப்பதைக் கண்டு, அதுபற்றிக் கேட்க சிலம்பி,
"குலோத்துங்க சோழ மன்னனின் அவைக்களப் புலவரான கம்பர் வாயால் பாடல் பெற்றவர்கள் மிகவும் சீரோடும் சிறப்போடும் வாழ்வதாகக் கேள்விப்பட்டு அவள் வைத்திருந்த 500 பொற்காசுகளைக் கொடுத்து அவள் மீது ஒரு பாடல் வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொள்ள, கம்பர், 'ஒரு பாடலுக்கு ஆயிரம் பொன் தர வேண்டுமென்றும் 500 பொன்னுக்கு அரைப் பாடல் தான் கிடைக்கும்' என்று கூறிக் கரிக் கட்டியால் இவ்விரண்டு வாரிகளைச் சுவற்றில் எழுதிவிட்டுப் போய்விட்டார் என்று சொல்லி, கையிலிருந்த 500 பொன்னும் பறிபோனதால் தான் அன்றிலிருந்து வறுமையில் வாடுவதாகவும் கூறினாள்.

அதைக் கேட்ட ஔவையார் உடனே ஒரு கரித்துண்டினை எடுத்து அவ்விரண்டு வாரிகளின் கீழே "பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும் செம்பொற் சிலம்பே சிலம்பு." என்றெழுதி கவிதையைப் பூர்த்தி செய்தாராம்.

இவ்விரண்டு சம்பவங்களும் உண்மையோ, பொய்யோ .. நானறியேன். ஆனால், தாசி என்ற சொல்லுக்கு தமிழில் "எல்லோரும் விரும்பத்தக்க" என்றோர் பொருள் உள்ளதென்று உணர்த்தவே புனைந்தேன் ஓர் "இன்னிசை வெண்பா". அதையே உங்கள் முன் சமர்ப்பித்துள்ளேன்.

ஆக, "காசுக்குப் பாடினால் கம்பன், கூழுக்குப் பாடினால் ஒளவை" என்று கூறலாமா ?

எழுதியவர் : (14-Aug-16, 12:44 pm)
பார்வை : 111

மேலே