எங்கிருந்தாலும்
எங்கிருந்தாலும்....
==================================ருத்ரா இ பரமசிவன்
காதல்..
........
20 நூற்றாண்டுகளுக்குப் பிறகும்
இது இன்னமும்
ஒரு காந்தம் தான்.
வட துருவமும் தென் துருவமும்
அதற்கு இல்லை.
இங்கிருந்து ஒரு பார்வை.
அங்கிருந்து
கடைக்கண் பார்வை கூட இல்லாமல்
ஒரு அடிக்கண் பார்வை.
அதுவும் மின்னல் கீற்று.
இங்கிருந்து
அசடு வழிந்த சிரிப்பு.
அங்கிருந்தோ
ஒரு குமுக்குச்சிரிப்பு மட்டுமே.
நடுவில் ஆறே இல்லாமல்
அக்கரை இக்கரை என்று..
அக்கறை எதுவும் இன்றி
வளரும் ஒரு பூங்கொடி.
இந்த காந்தம்
இழுக்கும்போதெல்லாம்
இரும்புத்தூள் மட்டும் அல்ல
பக்கத்தில் உள்ள மலர்களெல்லாம்
அதன் மகரந்த தூளெல்லாம் தான்.
பட்டாம்பூச்சிகளும் தான்
வட்டமிடும் பருந்துகளும் தான்.
தூக்கம் இன்றி
மறுநாள் எழும்போதெல்லாம்
என்னைச்சுற்றி
ஈசல் பூச்சி சிறகுகள்.
அவளோடு இருந்த
கனவு வெளிச்ச கசிவுகளை
உண்ண வந்தவை.
சிறகு மிச்சங்களாய்
என்னைச்சுற்றி.
ஓ! காதலே!
முடிவாக உன் மனம் திறந்து விடு!
இன்னும் எத்தனை எத்தனை ஆயிரம்
விட்டில்களாக
உன் விழி வெளிச்சத்துக்கு
ஏங்கவேண்டுமோ
தெரியவில்லை.
என்னோடு ஒன்றி விடு!
இல்லையெனில் என்னை
எங்கோ எறிந்து விடு.
அப்பால் அதோ தொலைவில்
அந்த விண்புள்ளியில்
நீ உன் குளியலறையில்
பிய்த்துப்போட்ட
வட்டச்சிறு ஒட்டுப்பொட்டாய்
ஒட்டாமலேயே உன்னில்
பொட்டு வைத்துக்கொண்டிருப்பேன்.
எங்கிருந்தாலும்
வாழ்க நீ
காதலே வாழ்க!
=================================================