இருளில் பயணிக்கிறோம், வெளிச்சம் இங்கே விநியோகமில்லை

அறிவு, ஒரு மழை வடிவம்,
ஆற்றல், அதில் ஊற்று உருவம்,
இளைஞர், செதுக்கப்பட வேண்டிய சிலைகளாய்.
இறைவன், அள்ளித்தந்தான் வேண்டியதெல்லாம்.

இங்கே நடப்பதென்ன?

வானொலி ஒரு சின்னஞ்சிறு கிணறு.
கொஞ்சம் செய்தி, அப்புறம் விளம்பரம்,
தேன் இசை அலை அலையாய், அந்த
வலையில் சிக்கி மானிடம் மயங்கும்.

பத்திரிகை ஒரு ஓடை, இன்று சாக்கடை.
கொலை கொள்ளை, அரசியல் ஆருடம்
வெட்டியாய் தினம் நேரம் வீணாக அதில்
அறிவுக்கு எதுவும் உண்டா, சொல்வீர்?

தொலைக்காட்சி இன்று கண்கட்டு வித்தை.
காலை முதல் இரவு வரை எல்லாமே மாயை.
பக்கத்து வீட்டு சண்டையில் லயிக்குது மனம்,
பாட்டு கேலி கூத்து சீரியல் சென்சேசன் அவ்வளவு தான்.

பொது அறிவு நாளுக்கு நாள் பெருகியபடி,
அந்த அறிவில் தகவலில் ஆர்வம் எங்கே?
எல்லோரும் செலவழிக்க எத்தனிக்கும் சில மணிகள்
தெரிந்து தெளிய தினமும் இங்கே எத்தனை பேர்?

பாடத்திட்டம் பலஹீனமாகி இன்று படிப்பில் மிடுக்கு இல்லை
வேதம் விஞ்ஞானம் கணிதம் ஜோசியம் யோகா என்று அன்று
பாரினில் உயர்ந்து நின்றது எங்கள் பாரதம்
இன்றோ
கேலி கிண்டல் ஹாஸ்யம் சினிமா அரசியலில் மட்டுமே
எல்லோருக்கும் நாட்டம் இதில் எப்படி வரும் ஏற்றம்

சொல்லித்தர இங்கே குரு இல்லை
போதிக்க இங்கே பள்ளி இல்லை
ஞானம் என்பதெல்லாம் இங்கே இலக்கு இல்லை
யார் பெரியவன் என்பது மட்டும் தான் இங்கே எல்லாம்

கல்வி கேள்வி அறிவு ஞானம் வெளிச்சம் இங்கு விநியோகமில்லை
காசு பணம் துட்டு மார்க்கு மட்டும் தான் மத்ததுக்கு யோகமில்லை.
எல்லோரும் இங்கே வாழ்க்கையில் பட்டுத்திருந்துவதுமில்லை
இதைப்படித்து இன்றே மாறப்போவதற்கு இங்கு எதுவுமில்லை.!

எழுதியவர் : செல்வமணி (15-Aug-16, 11:54 pm)
பார்வை : 102

மேலே