சாட்டைக் கொண்டடி

தீதெனப் படுவதைக் கண்டதும் முகத்தைத்
=திருப்பிக் கொண்டோ டிடல்தான் முறையோ?
யாதென ஒருமுறை பார்த்ததை அறிந்து
=யார்க்குமே தீதெனும் உண்மையை உணர்ந்து
ஊதிடு ஊரவர் செவிகளில் சங்கு
=உனக்கதில் ஆயிரம் நன்மைக லுண்டு
பாதகம் வருமெனப் பயந்திடும் பொழுதோ
=பரவிடும் விசத்துளி உலகினை அழிக்கும்

அடுத்தவர் கூரையில் எரிகிற தீயெமை
=அணுகுவ திலையென எண்ணிடும் மனங்கள்
அடுத்ததெம் கூரையை அழித்திடும் என்பதை
=அடியுடன் மறந்திடும் சுயநலத் தினாலே
தடுத்திட முடியா தீப்பொறி விழுந்து
=தவழுது ஊரவர் கூரைகள் முழுதும்
கெடுத்தவன் கெடுவான் பழமொழி உரைத்துக்
=கிடந்தது போதும் கிளர்ந்தெழுந் மனிதா..

பாலியல் இலஞ்சம் பயணிகள் இலஞ்சம்
=பாமர மக்களை பார்த்ததும் இலஞ்சம்
கூலியில் இலஞ்சம் குடிப்பதில் இலஞ்சம்
=குடித்தனம் நடத்திடக் கொடுத்திடும் இலஞ்சம்
வேலியை பயிரே மேய்வதற் கெங்கிலும்
=விரைவாய் நீட்டணும் விதிப்படி இலஞ்சம்
தாலியை அறுத்து தம்பதி ஒழிக்க
=தந்திடும் இலஞ்சம் ..தாங்குமா நெஞ்சம்

காடுகள் அழித்து கட்டிடம் அமைத்து
=காசினை புரட்டும் காசினி மாந்தர்
மாடுகள் அறுத்து சுவைப்பது போலவும்
=மனங்களை அறுத்துக் கூரிடக் காண்கையில்
கோடுகள் தாண்டிடும் கொள்கையை வளர்த்திடும்
=குணமது கொண்டுநீ கொடுமையை உரத்து
சாடுத லென்பதில் பயனிலை எனில்நீ
=சாட்டைக் கொண்டடி சகலமும் அழியும்.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (22-Aug-16, 2:27 am)
பார்வை : 78

மேலே