அலையுறும் எறும்புகள் - முத்தழகன்

இரவு நேரம். பன்னிரெண்டைத் தாண்டி கடிகார முள் நகர்ந்து கொண்டிருந்தது. அது ஒரு மாடி வீடு. மேலத் தெருவில் உள்ளது. மேலத்தெருவிற்கு சிவன் கோவில் தெரு என்றொரு பெயரும் உண்டு. மேலத்தெரு அகலமானது. மேலத்தெருவின் 28ம் நம்பர் கதவைத் திறந்தால் 7 வீடுகள். உள்ளே நுழைந்து இடது பக்கம் திரும்பினால் மாடி வீட்டின் படிக்கட்டுகள். மாடி வீட்டில் இரண்டு அறைகள். படுக்கையறை கட்டிலில் மகனும், மகனது அம்மாவும் படுத்திருந்தார்கள். கட்டிலின் அருகில் பெரியதொரு ஜன்னல்.

ஜன்னல் கதவுகளைத் திறந்தால் மேற்கிலிருந்து நல்ல காத்து வரும். ஜன்னலில் இருந்து பார்த்தால் ஆலமரமும், மேலத்தெரு வீடுகளில் வளர்ந்து நிற்கும் தென்னை மரங்களும் தெரியும். மரங்களைத் தாண்டி பார்வையை உயர்த்தினால் நீல வானமும், நட்சத்திரங்களும் தெரியும்.

பக்கத்தில் சிவன் கோவில். சிவன் கோவிலிலும் பெரிய அரசமரமுண்டு. பெரிய மரங்களை இந்த நகரத்தில் பார்ப்பது அரிதாகி வருகிறது. சிவன் கோவில் அரசமரத்தில் எப்போதும் பறவைகள் உண்டு. சிமென்ட் சாலை எல்லாம் பறவைகளின் எச்சம். சாயந்தரத்தில் சிவன் கோவில் முன்பு சுக்கு காபி கடை தற்காலிகமாக சைக்கிளில் இயங்கும். பயறு வகைகளும் உண்டு. மெயின் ரோட்டில் பர்கர், பீசா படம் வரைந்த பேக்கரிகளும் உண்டு.

அக்டோபர் மாதத்து கடைசி நாட்கள் பகலெல்லாம் வெயில் சுட்டெரித்தது. இரவில் குளிர்ந்த காற்று மேற்கிலிருந்து ஆலமரத்தையும், தென்னை மரங்களையும் உரசி வந்தது.

கட்டிலுக்குக் கீழே படுத்திருந்தான் மாதவன். இரவு விளக்கின் வெளிச்சம் அரை முழுவதும் படர்ந்திருந்தது. வெளிறிய முத்தம் கதையை படித்துக் கொண்டிருந்தான்.

தரையிலிருந்து ஒரு அடி உயரத்திற்கு அரை முழுவதும் மார்பிள்ஸ் பதிக்கப்பட்டிருந்தது. குதிரை வண்டியில் வந்தவனை வாசிக்கத் துவங்கிய போது, மாதவன் சுவரைப் பார்த்து ஒருக்களித்துப் படுத்தான். மார்பிளின் மீது கட்டெறும்பு ஒன்று சாவகாசமாக நடந்து கொண்டிருந்தது. மாதவனது தோளுக்கு அருகே அது வருகையில், இடது கை ஆட்காட்டி விரலால் எறும்பை நசுக்கினான்.

எறும்பின் தலை தனியே வந்தது. முன்னங்கால்கள் சிறு துகளாக மாறியது. தலையற்ற உடல் தனித்துக் கிடந்தது. கறுப்பாய், புள்ளிகளாய் ஒரு சித்திரத்தைப் போல அந்த எறும்பு செத்துக் கிடந்தது.

வேறு ஒரு எறும்பு இதே வழியில் சென்றிருக்கிறதா என மாதவன் தலையை உயர்த்திப் பார்த்தான். இல்லை. அறையெங்கும் மார்பிள் மீதும் எறும்புகள் ஏதுமில்லை. தரையிலும் இல்லை. துவைக்க வேண்டிய துணிகள் மூட்டையாக கட்டப்பட்டு கிடந்தன. நாலைந்து புத்தகங்கள் கிடந்தன.

ஒரு எறும்பு மட்டும் தனியாக வருமா என மாதவன் நினைத்தான். எறும்பு கூட்டம் கூட்டமாகத்தானே இருக்கும். படுக்கையிலிருந்து எழுந்து எறும்பு வந்த திசையைப் பார்த்தான். அறையின் கதவைத் திறந்து வாசலுக்கு வந்தான். தரையின் ஓரங்களைப் பார்த்தான். சிவந்த நிறத்தில் குட்டியான எறும்புகள் ஒன்றிரண்டு இரை தேடிக் கொண்டிருந்தன. கறுத்த கட்டெறும்பு ஒன்று கூட தென்படவில்லை. அடுப்படிக்குச் சென்றான். தரையெங்கும் பாத்திரங்கள். பாத்திரமெல்லாம் தண்ணீர். தண்ணீர் எப்போதும் வராது.

அருகில் தான் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அது நினைத்த போது பருத்தும், மெலிந்தும் தன்னிஷ்டமாய் போனது. ஆற்றங்கரை மரங்களற்று இருந்தது. பொட்டலில் ஓடுவதைப் போல தெரியும். மணலற்றும் இருந்தது. வண்ணார்பேட்டை மரங்களும் வேரோடு புடுங்கப்பட்டுவிட்டன. பூதம் போல ஒரு பாலம் வந்திருக்கிறது. பாலத்தில் பறவைகள் உட்கார முடியாது. மரங்கள் பூமியின் குழந்தை. செல்வம் தியேட்டரில் இரண்டாம் காட்சி பார்த்து விட்டு நண்பர்களோடும், மருத மரங்களோடும் பேசிக் கொண்டே வருவதில் அலாதிப்ரியம் எல்லோருக்கும் இருக்கும். இப்போது செல்வம் தியேட்டரும் இல்லை. மருத மரங்களும் இல்லை.

அடுப்படியில் கட்டெறும்பு ஏதுமில்லை. கரப்பான் பூச்சிகள் அலைந்து கொண்டிருந்தன. மீண்டும் வந்து படுக்கையில் விழுந்தான். எறும்பு அதே இடத்தில் சிதறிக் கிடந்தது. மீசைமுடி போன்ற கால்கள் அசைந்தன. உயிரின் துடிப்பா? காற்றின் அசைவா? தெரியவில்லை. விரலைக் கொண்டு எறும்பை தள்ளிவிட மனம் ஒப்பவில்லை. மரணம். எறும்பின் மரணம்.

எப்படி நடந்தது என்பது குறித்து ஒரு முடிவுக்கு மாதவனால் வரமுடியவில்லை. யோசனையின்றி செய்து விட்டதாக ஒரு முறை நினைத்தான். தன்னிச்சையாக கை விரல் எறும்பின் மீது பட்டுவிட்டதாக வேறு ஒரு முறை நினைத்தான். கோர்வையாகவோ, கோர்வையின்றியோ சிந்தனையும் செயலும் படபடப்புமாக ஒரு சேர நடந்து விட்டது எறும்பின் மரணம்.

மாதவனின் மகன் புள்ளியாய் வரைந்த சில படங்களைப் போல எறும்பு அங்கேயே இருந்தது. காற்றில் இடம் மாறவில்லை. குதிரை வண்டியில் வந்தவனை வாசிக்க முடியவில்லை. புத்தகத்தை வைத்துவிட்டு மல்லாந்து படுத்தான் மாதவன். மீண்டும் எறும்பை உற்று நோக்கினான். இது தனியாக வந்திருக்கக் கூடாது. இதே போன்று இன்னொரு கட்டெறும்பைப் பார்த்தால் மனம் சாந்தமாகி விடும் போலத் தோன்றியது. வேறு ஒரு எறும்பைக் காணவில்லை. இது வழி மாறி வந்திருக்கும்.

வழி தவறி வந்ததாக எப்படிச் சொல்ல முடியும். நடந்த பிறகு தானே தடம் உருவாகும். எறும்பு திரும்பிச் செல்லும் வாய்ப்பை மறுத்திருக்கிறான். அலையுறும் எறும்புகளுக்கு திசை என்று எதுவுமில்லை. கடலின் கரை நண்டுகளுக்குத்தான் மிகவும் சொந்தம். இருப்பு கனவு போல கலைந்து விடுகிறது. கனவுகளுக்கும் நிறம் இருக்கிறது. எறும்பின் கறுப்பு நிறத்தில் இனி கனவு வரும் என யூகித்தான்.

வெயிலின் வெப்பத்தில் சுட்டு எரிக்கும் வெக்கையில் இருந்து தப்பிக்க எறும்புகள் புற்றுகளில் இருந்து வெளியேறி வந்திருக்கும். வேறு வீடுகளுக்கு சிலவும் போயிருக்கும். இது மாடி வீடு. எறும்பு மாடி ஏறி தூரத்தில் வந்துவிட்டது. 12 படிகள். 12 படிகளைக் கடந்து கதவிடுக்கின் வழியாக வீட்டினுள் வந்து இறந்து விட்டது.

இது வாடகை வீடு. இதைக் கண்டுபிடிக்கவே சிரமமாக இருந்தது. தீப்பெட்டியில் குச்சியை அடுக்கியது போலத்தான் வீடுகள் இருந்தன. பழைய வீட்டுக்கு அடுத்த தெருவில் தான் இந்த வீடு இருந்தது.

காய்கறிக்கடை மாரியப்பன் தான் துப்பு சொன்னார். பரமசிவம் கூடவே வந்து வீட்டைப் பார்த்து பேசி முடித்தார். வீட்டில் குடியேறிய பிறகும் பரமசிவம் ரோட்டில் மாதவனைப் பார்த்தவுடன், “நல்லா இருக்கீங்களா?” என்பார். நிறைய பேருக்கு வீடு பார்த்துக் கொடுத்தவர். மாதவனின் பழைய வீடு ஒரே இருட்டாய் இருக்கும். ஜன்னலற்ற வீடு. பாத்ரூம் கதவைத் திறந்தால் தான் வெளிச்சம் வரும். அங்குதான் கதவு இல்லாத ஜன்னல் இருந்தது. பாத்ரூமிலிருந்து திடீரென்று பூரான் வந்து விடும். மூன்று முறை பூரான் வந்து விட்டது. மாதவன் மனைவி பெரிய கோவிலுக்குச் சென்று பூரான் தகடு வாங்கி மூன்று முறை தலையைச் சுற்றி தெப்பக்குளத்தில் எறிந்தாள். தகடு விற்ற கோவில் வாசலில் பொரியும் விற்றார்கள். பொரி விற்ற பாட்டி சொன்னாள், “தெப்பக்குளத்து மீனுக்கு பொரி வாங்கிப் போடுங்க, பீடை எல்லா கழியும்” என்று.

மாதவன் மனைவியும், மகனும் படிக்கட்டில் நின்று பொரியை குளத்தில் எறிந்தார்கள். மகன் கையில் ஐந்தாறு பொரிகள் தான் வந்தது. அவை அவன் காலடியிலேயே சிதறியது. குளத்தில் மீன்கள் வரவில்லை. பாசி பிடித்து பச்சை நிறத்தில் குளத்து நீர் மரணித்துக் கிடந்தது. மாதவன் மனைவி கையை குவித்து நீரை அள்ளி தலையில் தெளித்து வாயிலும் விட்டுக்கொண்டாள்.

கோயிலில் கூட்ட நெரிசலை சமாளிக்க பல இடங்களில் புதிதாக தடுப்புகளும், கிராதிகளும், சுவர்களும் எழுப்பப்பட்டு இருந்தது. புத்து மண் இருந்த இடம் இப்போது காலியாகக் கிடந்தது. பாம்புகள் செதுக்கப்பட்ட பாறை வர்ணம் தீட்டப்பட்டு அடையாளம் தெரியாமல் மாறி இருந்தது. கோவிலில் பிரகாரம் முன்பு வானம் பார்த்துக் கிடந்தது. கொடை வள்ளள்களால் கூடாரம் போல சுவரெழுப்பப்பட்டு இருந்தது. சோடியம் விளக்குகளால் கோவிலுக்குண்டான சிறிது இருட்டும், வௌவால்களும் விரட்டியடிக்கப்பட்டு இருந்தன.

பிறகு ஒரு முறையும் பூரான் வந்தது. “இருட்டா இருந்தா இப்படித்தா பூச்சி எல்லா வரும்” என்று பகலிலும் விளக்குகளைப் போட்டான் மாதவன். “எப்பப் பார்த்தாலும் லைட்டு எரியணுமா” என மாதவன் மனைவி உடனுக்குடன் விளக்குகளை அணைத்தாள். மாதவன் விளக்குகளை போடுவதும், அவள் அணைப்பதுமாக இருந்தார்கள். இருட்டும் வெளிச்சமும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது அந்த வீட்டில். அதுவும் மாடி வீடு.

வேகமாக மாடி ஏறினால் சுவரில் முட்ட வேண்டும். அப்படியான ஒரு வீடு அது. வீட்டுச் சாமான்களை வீட்டுக்குள் கொண்டு சேர்க்க ரொம்பவும் இடிபாடாகத்தான் இருந்தது. பீரோவை தூக்கி வரும் போது பக்கத்திலேயே நின்றார் வீட்டுக்காரர். “பாத்து….. பத்து….” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பீரோ சுவரில் இடித்து விட்டது. “இதுக்குத்தா” என அவர் சலித்துக் கொண்டார். பிறகு கீழே இருந்த அவரது வீட்டினுள் சென்று விட்டார்.

ஒரு நாள் சிலிண்டர் வந்தபோதும் சுவரில் இடித்து விட்டது. காரை பெயர்ந்து விழுந்தது. வீட்டுக்காரர் மனைவி, “தோள்ல வச்சி கொண்டு போகக்கூடாது. கையிலயே தூக்கிட்டு போவனும். இது எல்லாமா சொல்லிக் குடுப்பாங்க” என்றார். அவர் கையில் காரை மண் இருந்தது.

அன்று இரவு மொட்டை மாடியில் நின்று வீட்டுக்காரர் சொல்வதை மாதவன் கேட்கும்படியான சூழல் வந்தது. அவர் சுத்தம், பாதுகாப்பு என பேசிக் கொண்டு இருந்தார். “அப்ப எல்லா, வீடு கட்டுறது ரொம்ப கஷ்டம்” என அவரது கதையை சொல்லிக் கொண்டிருந்தார். நிலா வெளிச்சத்தில் கொக்கு ஒன்று நீர்நிலையை தேடிப் போய்க் கொண்டிருந்தது.

பல வேளைகளில் வீட்டு ஓனர் இல்லை என்றாலும், “பாத்து….. பாத்து…. கவனமா…. அச்சச்சோ…” என்கிற சத்தம் மாதவன் காதருகே கேட்டுக் கொண்டே இருந்தது. ஏழாவது மாதத்தின் கடைசி நாளில் மாதவனை வேறு வீடு பார்க்கச் சொன்னார்.

மாதவனுக்கு சின்ன வயதில் எறும்புகளை வேடிக்கை பார்ப்பதில் உற்சாகமான சுவாரஸ்சியம் உண்டு. காபி டம்ளரை சுற்றிலும் எறும்புகள் நிற்கும். ஒன்று… இரண்டு… பத்து… நூறு என எண்ணமுடியாத எறும்புகள் அணிவகுத்துச் செல்லும். மாதவனுக்கு எறும்புகளை கடந்து செல்வதில் மருட்சி வந்து விடும். “அது என்ன செய்யும்… பிள்ளையார் எறும்பு… பிள்ளையப் பாரு” என அம்மா பள்ளிக்கூட பரபரப்பில் படபடப்பாள். வீட்டுக்கு வரும் அத்தை மாதவனின் காலில் இருந்து கையை விரலால் நகர்த்தி “ஏறுது…. ஏறுது…. எறும்பு ஏறுது” கிச்சு கிச்சு மூட்டுவாள். மாதவன் கைகளால் டவுசரை மூடிக்கொண்டு வெட்கப்பட்டு ஓடுவான்.

மாதவன் மறுபடியும் இறந்து போன எறும்பைப் பார்த்தான்.கொல்லப்பட்ட எறும்புகளில் இது எத்தனையாவது?

காய்கறிக்கடை மாரியப்பனை பார்க்கும் வரை மாதவன் வீடு தேடி பல இடங்களில் அலைந்திருக்கிறான். மாதக்கணக்கில் கூட ஆகியிருக்கிறது. “என்ன வீடு இன்னு கெடக்கலியா… உனக்குன்னு ஒரு வசந்த மாளிகை இல்லாமலா போகும்” என சிலர் அக்கறையோடு விசாரிப்பார்கள். நிலைமை மோசமாகத்தான் போனது.

கணேசன் சொன்னான், “எனக்குத் தெரிந்த வீடு புரோக்கர் இருக்கார். அவர்ட்ட கேட்போ”. சற்று உற்சாகம் கிடைத்தது. துரையும் மாதவனோடு சேர்ந்து கொண்டான். மூவருமாக போனார்கள். மைய நூலகத்திலிருந்து சேவியர் பள்ளிக்கு பின்பக்கமாய் சென்றார்கள். தபாலாபீஸ் தெரு. அங்கிருந்து எல்லம்மன் கோவில் தெரு. கணேசன் புரோக்கரை ஏற்கனவே சந்தித்த லாண்டரி கடையைத் தேடினான். கடை பூட்டிக் கிடந்தது. இன்னைக்கு லீவு என பக்கத்து கைமுறுக்கு வியாபாரி சொன்னார்.

நகரங்களில் வீடு கிடைப்பதில்லை. சிவன் கோவில் தெரு வீட்டுக்கு குடியேறிய போது, வீட்டு ஓனர் சாவியை கொடுத்தபடி, “நல்லபடியா இருந்து… சொந்தமா வீடு கட்டிப் போகணு” என்று தலைக்கு மேல் கைகளைக் கூப்பி அவரது இஷ்ட தெய்வத்தை வணங்கிச் சொன்னார்.

அவர் சொன்னது யதார்த்தத்துக்கு பொருந்தாத ஒன்றாகத் தான் இருந்தது. புரோக்கர் பரமசிவம் சொன்னதை விட அவர் அதிகமாகவே வீட்டு வாடகையை சொன்னபோது, மாதவன் நூறு ரூபாயை குறைக்க ரொம்ப நேரம் வாதாடினான். “நூறு ரூவா உங்களுக்கு பெருசு இல்ல சார். ஆனா எனக்கு ரொம்ப பெருசு” என அவர் சொன்னதும் மாதவனுக்கு சிரிப்பு வந்து விட்டது. ஆனாலும் அந்த இடத்தில் அழுவதோ, சிரிப்பதோ நன்றாக இருக்காதென நினைத்துக் கொண்டான். வீட்டு ஓனர்களுக்கு எது பிடிக்கும் எனத் தெரியாமல் எதையேனும் செய்து காரியம் கெட்டு விடக்கூடாதென எச்சரிக்கையாக இருந்து கொண்டான்.

நூறு, இருநூறு ரூபாய் வித்தியாசத்தில் சில வீடுகள் கிடைக்காமல் போய்விடும். குரோட்டன்ஸ் செடிகள் நிறைய பூத்திருக்கும் அண்ணாநகர் வீட்டைக் கடக்கையில் மாதவனுக்கு எதையோ தொலைத்து விட்டதாகத் தோன்றும். அண்ணாநகர் ஓனர் சிரிக்க சிரிக்கப் பேசினார். முதலில் மாதவனுக்கு சிரமமாக இருந்தது. அவர் சிரிக்கும் போது வாய் மூடி இருப்பது சரியில்லையென மாதவனுக்குத் தோன்றியது. சுதாரித்துக் கொண்டான். பிறகு அவர் சிரிக்கும் போதெல்லாம் மாதவனும் சிரித்தான். அவரிடம் விடை பெற்று திரும்பிய பிறகும் சிரித்துக் கொண்டே இருந்தான். மாதவன் மனைவி கூட, “எதுக்கு ஓயாம பல்ல காட்டிக்கிட்டு திரியிதீக” என்றாள். அதற்கும் சிரித்தான். அவ்வளவு சிரித்தும் அண்ணாநகர் வீடு கைகூடவில்லை.

லாண்டரிக் கடைக்கு பக்கத்திலிருந்த விறகுக் கடையிலும் ஒரு புரோக்கர் உண்டென்று சொன்னார்கள். அவரையும் சந்தித்தார்கள். சில வீடுகளையும், வாடகையையும் சொன்னார். மாதவன் சொன்ன வாடகையில் வீடுகள் இல்லை. வேற எங்க கிடைக்கும் என்றவுடன் போனில் நாலைந்து பேரிடம் பேசினார் விறகு கடைக்காரர். அந்த நகரில் எந்த வீட்டிலிருந்து காலி செய்து, எங்கு குடியேறப் போகிறார்கள் என்ற விபரம் சில நிமிடங்களில் தெரிய வந்தது. அவர்களுக்குள் எல்லை வகுத்திருந்தார்கள். கிருஷ்ணா ஆஸ்பத்திரிக்கு பின்னால் ஒரு காம்பவுண்டில் இருப்பதாக சொன்னார். அவர்கள் மீண்டும் நடந்தார்கள். “வாடகைக்கு வீடு கிடைக்கிறது இவ்வளவு கஷ்டமா” என மாதவன் கேட்டதற்கு, “இன்ன வாடகையில வேணுங்கிறதுதான் கஷ்டம்” என்று கணேசன் விளக்கம் கொடுத்தான்.

கிருஷ்ணா ஆஸ்பத்திரிக்கு எதிரில் டீக்கடையில் ஆளுக்கொரு டீயும், சிகரெட்டும் புகைத்தார்கள். துறை மட்டும் டீக்கடைக்காரரிடம் பேசி விட்டு வந்தான். “அவர்ட்டயும் வீடு சொல்லிருக்கேன். காலைல தான் ஒரு வீடு முடிஞ்சதுன்னு சொல்லிருக்காரு. எதுக்கும் நாளைக்கு காலையில வாங்கன்னு சொன்னாரு” என்றான். அப்படிச் சொன்னபோது திறமையான சிரிப்பு ஒன்றை உதிர்த்துக் கொண்டான்.

“ஒருத்தர்ட்ட சொன்னா போதாது. வீடு வேணும்னா பலர்ட்டயு சொல்லணும். அப்புறம் நாயா அலையணு” என்று துரை மாதவனிடம் முன்பே ஒருமுறை சொல்லியிருந்தான்.

துரைக்கு அப்போதிருந்த வீடு ஒத்துவரவில்லை. பக்கத்து வீட்டில் ஒரு மரணம். இரண்டு குழந்தைகளின் அம்மா எதிர்பாராமல் இறந்து விட்டார். அவருக்கு வயது முப்பத்தைந்து தான் இருக்கும். குழந்தைகளுக்கு சிறு வயது. அம்மாவின் மரணத்தின் போது ரெண்டாவது பையன் ஆறு வயதில் அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். மூத்தவள் எல்லோரது அழுகையையும் பார்த்து திகைத்துப் போயிருந்தாள். துரையின் மாடி வீட்டில் அந்தக் குழந்தைகள் எப்போதும் இஷ்டமாய் விளையாடும்.

அக்குழந்தைகள் எப்போதேனும் அம்மாவைப் பற்றி கேட்டு விடுவார்களோ என்று துரை பயந்தான். “அம்மா எப்ப வருவாங்க” என சின்னவன் கேட்டுவிட்டால்……

குழந்தைகளின் அம்மா நட்டு வைத்திருந்த செடிகளில் மலர்கள் பூத்திருந்தன. செம்பருத்திப் பூக்கள் மஞ்சள் நிறத்தில் வீட்டு முற்றத்தில் சிதறிக்கிடந்தன. துரையிடம் நட்பு கொண்ட சின்ன நாயொன்றும் அந்த வீட்டில் குலைத்துக் கொண்டிருந்தது. துரை வேறு வீடு பார்க்க சுற்றி அலைந்தான்.

சூட்சுமங்கள் நிறைந்த ஒன்றாகத்தான் வாடகை வீடுகளும், தெருக்களும், வாழ்க்கையும் இருக்கிறது. ரொம்பவும் ப்ரியத்திற்குரியவர்களிடம் இருந்து சட்டென விலகிவிட நேர்வதை என்னவென்று சொல்வது? மஞ்சள் நிற செம்பருத்தி என்ன செய்யும்? அரச மரத்தின் உச்சியில் நெருக்கமாக இலைகள் உரசி உரசி பரவசப்படுவதை, காற்றில் சிலாகிப்பதை மாடியில் இருக்கும் வாடகை வீட்டில் இருந்து தான் பார்க்க முடியும். முற்பகலில் இலைகள் உரசிக் கொள்வதில் ஒரு ஜொலிப்பும், மினுக்கும் வந்து விடுகிறது. துரை குடியேறப்போகும் வீட்டில் வேறு ஒரு அழகான பூ பூக்கத்தான் செய்யும். அங்கு வெள்ளை நிறத்தில் ஒரு பூனைக்குட்டி இருக்கும். கண்களை உருட்டி, மியாவ் சத்தமிட்டு பயத்தோடு துரையை பார்த்து சிரிக்கக்கூடும். அப்படியான ஒரு வீட்டிற்கு பலரிடம் அவன் சொல்லி வைத்திருந்தான். அவனும் தேடி அலைந்தான். அவர்கள் கடைசியாகப் போன காம்பவுண்டு பல்ப் வெளிச்சத்தில் இருண்டு கிடந்தது. மராமத்துப் பணிகள் நடந்து கொண்டிருந்தது. அந்தக் காம்பவுண்டுக்கு அருகில் இருந்த மதில்சுவர் வழியே ரோட்டுக்கு வந்து பிரிந்து சென்றனர்.

ஒன்றாய்ப் போகையில் கணேசன், அவனது தம்பி குறித்துப் பேசிக் கொண்டே வந்தான். கணேசனின் தம்பி சென்னையில் குடும்பத்தை குடியமர்த்த வாடகை வீடு தேடி அலைந்திருக்கிறான். அவனது மாமா வீட்டுக்கு பக்கத்தில் புதிதாக ஒரு அபார்ட்டுமண்ட் கட்ட வானம் தோண்டிய போது, மாமா மூலமே ஒரு வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்து வைத்தான். ஆறு மாதத்தில் கட்டுமானம் முடிந்து குடியேறினார்கள். மூன்றாவது மாடியில் அவனது வீடு இருந்தது. வாசலில் இருந்து மாடி ஏறி வீட்டுக்குள் நுழையும் வரை ஒரு தெளிவற்ற பாதை வழியாக செல்வதாகவே கணேசனுக்கு எப்போதும் தோன்றும். எப்போதும் கதவை அடைத்தே வைத்திருந்தார்கள். முதல் குழந்தை சரோஜா பூட்டிய வீட்டுக்குள் தனியாக பொம்மைகளோடு விளையாடிக் கொண்டு இருந்தாள்.

நேரம் கடந்தது. வாடைக்காற்று வீசியது. ஜன்னல் கதவுகளை மாதவன் மூடினான். மாதவன் மனைவி முறுவலித்தவாறு புரண்டு படுத்தாள். “எறும்பு செத்துப்போச்சு. தூக்கம் வரமாட்டேங்குது” என தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

இந்த வீட்டுக்கு குடியேறும் முன்பாக மாதவன் வந்திருந்தான். ஏற்கனவே குடியிருந்தவர்கள் காலி செய்திருந்தார்கள். ஜன்னல் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. புழுக்கமாக இருந்தது.

பழைய நோட்டுப் புத்தககங்கள் மூலையில் கிடந்தது. கோலம் வரைந்த காகிதங்கள் குப்பையாக கிடந்தது. கட்டில் பீரோ கால்களின் தடம் கறுப்பாய் தரையில் அழுத்தியிருந்தது. மாடாக்குழியில் விளக்கு கரை படிந்திருந்தது. கனவிலிருந்து விழித்தெழுவது போலத்தான் வாடகை வீடு மாறுவதும் இருக்கிறது.

காலையில் எழுந்து வீட்டைப் பெருக்கி அள்ளும் போது விளக்குமாரின் ஒரு குச்சியில் இழுபட்டு இந்த எறும்பு கண்காணாத இடத்திற்குச் சென்றுவிடும். இந்த இரவோடு எறும்பும் கரைந்து போகும் என மாதவன் நினைத்தான்.

காலண்டர் தாள்களைப் போல நாட்கள் காணாமல் போவதில்லை. வண்ணம் மாறியபடி ஒவ்வொருவரையும் சுழன்று வருகிறது. தூக்கி எறியப்பட்ட பல ஆயிரம் ஜீவன்களில் ஒன்றாய் சிதறிக் கிடந்தது எறும்பு. தவம் இருப்பதைப் போல அது கிடந்தது. வாழ்வின் நீண்ட பயணத்தில் உயிர்ப்புக்கான வலிகளைச் சுமந்தபடி எறும்பு மரணத்தை தழுவியிருக்கும் என மாதவன் நினைத்தான்.

இரவு ஒரு முடிவை நோக்கி வழக்கமான ஒப்பந்தத்தின் படி விடைபெற்றுக் கொண்டிருந்தது. மாதவன் மீண்டும் எழுந்து எல்லா பக்கமும் பார்த்தான். அதே மாதிரியான எறும்பை காணவில்லை. மாதவனும் எறும்பும் தனித்து இருந்தார்கள். துயரத்திற்கு முன்போ, பின்போ தனிமை தானாக அமைந்து விடுவது எப்போது இருந்து எனத் தெரியவில்லை.

– K.G.பாஸ்கரன்.

எழுதியவர் : படித்ததில் ரசித்து பகிர் (24-Aug-16, 12:23 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 215

மேலே