அச்சுதன் அம்மானை

நீலநிற மேனியனாம் நீள்விசும்பே மெச்சுவிதம்
கோலமிகு துவாரகையின் கோனாவா னம்மானை !!
கோலமிகு துவாரகையின் கோனாவா னாமாகில்
கோலெடுத்து ஆளாத கோனவனா அம்மானை ??
சாலமுடை வெய்ங்குழலே சாரக்கோல் அம்மானை !!

முன்னொருநாள் கோபியரும் முழுமைநீ ராடுகையில்
பின்னிருந்தே அவர்சேலை பிடித்தொழித்தா னம்மானை !!
பின்னிருந்தே அவர்சேலை பிடித்தொழித்தா னாமாகில்
அன்னவனும் துகிலுரித்த தாகாதோ அம்மானை ??
பின்னொருநாள் திரௌபதிக்குத் துகிலீந்தா னம்மானை !!

நாட்டுக்கே அரசனான நம்கண்ணண் கோலெடுத்தால்
பாட்டுக்கு மரசனிதைப் பார்த்தாயோ அம்மானை !!
பாட்டுக்கு மரசனெனில் பாடுகின்ற கானத்தில்
நாட்டையொடு பைரவியும் நடமிடுமோ அம்மானை ??
பாட்டுக்குள் நாம்மயங்கப் பகருவையோ அம்மானை !!

பாரத்தத்தின் போரினிலே பாவங்கள் தலைவீழக்
காரணமாய் நின்றவனே கண்ணபிரா னம்மானை !!
காரணமாய் நின்றவனும் கண்ணபிரா னாமாகில்
தேரதனை ஓட்டியதேன் தேர்ந்துரைப்பா யம்மானை ??
தேரசைய மன்னனது தேசசையு மம்மானை !!

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (25-Aug-16, 1:35 pm)
பார்வை : 82

மேலே